TNPSC Thervupettagam

கிழக்கு ஆசிய உச்சி மாநாடு & RCEP

November 14 , 2019 1841 days 3230 0
  • வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணைப்பு போன்ற முக்கியத் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஆசியான்-இந்தியா, கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமது மூன்று நாள் தாய்லாந்து பயணத்தின் போது கலந்து கொண்டார்.
  • பொதுவான தீர்வுகளைக் கண்டறிய உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அம்மாநாடுகளில் அவர் எடுத்துரைத்தார்.

 

கிழக்கு ஆசியா-உச்சி மாநாடு

  • கிழக்கு ஆசியா உச்சி மாநாடு (East Asia Summit - EAS) 2005 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இது இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் முக்கிய அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சவால்கள் குறித்த மூலோபாய உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான 18 பிராந்திய தலைவர்களின் மன்றமாகும்.

தோற்றம்

  • கிழக்கு ஆசியக் குழுமம் என்ற கருத்தை முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது ஊக்குவித்தார்.
  • முதல் உச்சி மாநாடு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.
  • கோலாலம்பூர் பிரகடனம்:
    • கிழக்கு ஆசியாவில் அமைதி, பொருளாதார செழிப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த உரையாடலுக்கான ஒரு “திறந்த மன்றமாக” EAS கருதப் படுகின்றது.
  • இந்தியாவானது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் நிறுவன உறுப்பினர் நாடாகும்.
  • 14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.

உறுப்பினர் நாடுகள்

  • கிழக்கு ஆசியக் குழுமம் ஆனது தென்கிழக்கு ஆசிய நாடுகள்  கூட்டமைப்பின் (ஆசியான்) பத்து உறுப்பு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து, கொரியக் குடியரசு (தென் கொரியா), ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 8 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • ஆசியான் அமைப்பின் பத்து உறுப்பு நாடுகள் பின்வருமாறு
    1. புரூனே,
    2. பர்மா (மியான்மர்),
    3. கம்போடியா,
    4. இந்தோனேஷியா,
    5. லாவோஸ்,
    6. மலேஷியா,
    7. பிலிப்பைன்ஸ்,
    8. சிங்கப்பூர்,
    9. தாய்லாந்து,
    10. வியட்நாம்.
  • EAS உறுப்பினர் நாடுகள் உலக மக்கள்தொகையில் 54% ஐக் கொண்டுள்ளன மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58% ஐக் கொண்டுள்ளன.
  • EAS ஆனது ஆசியானை மையப்படுத்திய ஒரு மன்றம் ஆகும்; இதற்கு ஒரு ஆசியான் உறுப்பு நாட்டால் மட்டுமே தலைமை தாங்க முடியும்.

EAS தலைமை நாடு

  • ஆசியான் அமைப்பின் தலைமை நாடே EAS உச்சி மாநாட்டிற்கும் தலைமை தாங்கும்.
  • ஆசியான் அமைப்பின் தலைமைப் பதவியானது ஆண்டுதோறும் பத்து ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் சுழற்சி முறையில் வகிக்கப் படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் தலைமை நாடு : சிங்கப்பூர்
  • 2019 ஆம் ஆண்டின் தலைமை நாடு : தாய்லாந்து

ஒத்துழைப்புப் பகுதிகள்

  • பின்வரும் ஆறு முன்னுரிமைப் பகுதிகள் மீதான பிராந்திய ஒத்துழைப்பை இந்தியா அங்கீகரிக்கின்றது.
    • சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல்
    • கல்வி
    • நிதி
    • உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்று நோய்கள்
    • இயற்கைப் பேரிடர் மேலாண்மை
    • ஆசியான் இணைப்பு

சாத்தியக் கூறுகள்

  • உலக மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களையும் குறிக்கும் EAS ஆனது ஒரு பெரிய குழுமமாகும். இந்த அமைப்பு ஆசியாவின் எழுச்சிக்கு ஒரு சான்றாக உள்ளது.
  • EAS என்பது வலுவான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஒரு பகுதியாகும்.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அடுத்த நிலையில் இது உலகப் பொருளாதாரத்தின் மூன்றாவது பெரிய துருவமாகக் கருதப் படுகிறது.
  • உலகப் பொருளாதாரத்தில் முதல்  பன்னிரண்டு தரவரிசைக்குள் இந்த அமைப்பின் நான்கு முக்கியப் பொருளாதார நாடுகளான ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் கொரியா ஆகியவை உள்ளன.
  • அவர்களின் ஒருங்கிணைந்த அந்நியச் செலாவணி இருப்பு 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஆசியான் + 6 அல்லது EAS நாடுகளுக்கு இடையிலான நிதி மற்றும் பண ஒத்துழைப்பானது அவர்களுக்குப் பலனளிக்கும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
  • ஆசியாவின் வளர்ச்சி இடைவெளிகளைக் குறைப்பதற்காக இந்த அந்நியச் செலாவணி இருப்புக்களை ஓரளவு திரட்டுவதற்கு உதவும் ஒரு ஆசிய நிதிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படலாம்.

14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு

  • கிழக்கு ஆசிய உச்சி மாநாடு என்பது அரசுத் தலைவர்கள் தலைமையிலான ஒரு தளமாகும். அம்மாநாட்டில் இந்த பிராந்தியத்தில் நடைபெறும் பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப் படுகின்றன.
  • உறுப்பினர்களது ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வது மற்றும் பிராந்திய & சர்வதேசப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது ஆகியவை இந்தக் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பதிப்பிற்கான ஒரு நிகழ்ச்சி நிரல் ஆகும்.
  • கிழக்கு ஆசிய உச்சி மாநாடானது  ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான ஒரு பிரதான மன்றமாகும்.

இந்தியாவிற்கான  முக்கியத்துவம்

  • இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியா உறுப்பினராக இல்லாத  ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கு (Asia-Pacific Economic Cooperation – APEC) மாற்றாக EAS செயல்படுகிறது.
  • EASஇல் இந்தியாவின் உறுப்பினர் பதவியானது அதன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கிற்கான ஒரு அங்கீகாரமாகும்.
  • இந்தியாவின் கிழக்கு நோக்கியக் கொள்கை:
    • ஆசியான் மற்றும் பிற பலதரப்பு நாடுகளுடன் பன்முக உறவுகளை உருவாக்குவதற்கும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா தனது கிழக்கு நோக்கியக் கொள்கைகளை வலியுறுத்தி வருகின்றது. அதற்காக EAS முக்கியமானது எனக் கருதப் படுகின்றது.
  • EAS நாடுகளுடனான இந்தியாவின் ஆழமான கலாச்சார மற்றும் நாகரீகத் தொடர்புகள் பரவலாக அறியப் படுகின்றன.

RCEP

  • ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளுக்கும், தற்போதுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreements - FTA) கொண்ட ஆறு நாடுகளுக்கும் இடையில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership – RCEP) முன்மொழியப் பட்டது.
  • ஆசியான் அமைப்பின் பத்து உறுப்பு நாடுகள் பின்வருமாறு
    1. புரூனே,
    2. பர்மா (மியான்மர்),
    3. கம்போடியா,
    4. இந்தோனேஷியா,
    5. லாவோஸ்,
    6. மலேஷியா,
    7. பிலிப்பைன்ஸ்,
    8. சிங்கப்பூர்,
    9. தாய்லாந்து,
    10. வியட்நாம்.
  • ஆசியான் தற்போதுள்ள FTAகளைக் கொண்ட ஆறு நாடுகள் பின்வருமாறு
    1. ஆஸ்திரேலியா,
    2. சீனா,
    3. இந்தியா,
    4. ஜப்பான்,
    5. தென் கொரியா மற்றும்
    6. நியூசிலாந்து
  • RCEP பேச்சுவார்த்தைகள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கம்போடியாவில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் முறையாக தொடங்கப் பட்டன.

நோக்கம்

  • RCEP என்பது பெரும்பாலான கட்டண மற்றும் கட்டணமில்லாத தடைகளை நீக்குவதன் மூலம் பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பிராந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் தரமான தயாரிப்புகளின் அதிக தேர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • RCEPயின் நோக்கமானது இந்த அமைப்பின் 16 நாடுகளில் "ஒருங்கிணைந்தச் சந்தை" ஒன்றை உருவாக்குவதாகும்.
  • இது முதலீட்டு விதிமுறைகளைத் தளர்த்தவும் சேவை வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்கவும் முயல்கின்றது.

RCEPயின் முக்கியத்துவம்

  • இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இது உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக மாறும்.
  • இந்த 16 நாடுகள் உலக மக்கட்தொகையில் ஏறக்குறைய பாதிக்குச் சற்று குறைவானவர்களாகவும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகவும் உள்ளன.
  • 16 நாடுகளுக்கிடையேயான வர்த்தகமானது உலகளாவிய வர்த்தகத்தின் கால் பகுதியை விட சற்று அதிகமாக உள்ளது.
  • ஏனென்றால், 3.5 பில்லியன் மக்களுக்கு இருப்பிடமாக உள்ள இந்த  16 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 50 டிரில்லியன் டாலராக உள்ளது.
  • இந்தியா (மொத்த உள்நாட்டு உற்பத்தி - பொருள் வாங்குதிறன் சமநிலை மதிப்பு அடிப்படையில் 9.5 டிரில்லியன் டாலர் மற்றும் 1.3 பில்லியன் மக்கள் தொகை) மற்றும் சீனா (மொத்த உள்நாட்டு உற்பத்தி - பொருள் வாங்குதிறன் சமநிலை மதிப்பு அடிப்படையில் 23.2 டிரில்லியன் டாலர் மற்றும் 1.4 பில்லியன் மக்கள் தொகை) ஆகிய நாடுகள் சந்தை அளவின் அடிப்படையில் RCEPயின் ஒரு மிகப்பெரிய அங்கமாக உள்ளன.

 

RCEPயின் சமீபத்திய செய்திகள்

  • பரவலாகப் பார்த்தால், ஏற்கனவே 16 நாடுகளில் இருந்த அல்லது ஆசியானுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த உறுப்பினர்களிடையே நிகழும் பொருட்களின் வர்த்தகத்திற்கான கட்டணங்களையும் பிற தடைகளையும் RCEP குறைக்கும்.
  • ஆனால் RCEP இப்போது 15 நாடுகளாகக் குறைந்து விட்டதா?
  • ஆம். சேவை ஊழியர்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க விரும்புவதாகக் கூறி இந்தியா RCEP கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளியேறியது.
  • இந்தியாவின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளைத் தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததால், RCEP கூட்டு ஒப்பந்தத்தில் இணைய வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
  • இப்போதைக்கு, இந்தியா இல்லாமல் மீதமுள்ள 15 நாடுகள் RCEP ஒப்பந்தத்துடன் முன்னேற முடிவு செய்துள்ளன.
  • எவ்வாறாயினும், இந்தியா எப்போது விரும்புகிறதோ அப்போது  RCEPயில் இணைந்து கொள்ளலாம் என்று சீனா அறிவித்துள்ளது.

RCEP உடனான இந்தியாவின் சிக்கல்கள்

  • RCEP வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வர்த்தத்திற்கு உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், இது சீனாவுக்கு இந்தியச் சந்தைகளில் தடையற்ற ஒரு அணுகலைக் கொடுக்கும்.
  • சீனாவிலிருந்துப் பெறப்படும் மலிவான இறக்குமதி ஏற்கனவே இந்தியாவின் உள்நாட்டுத் தொழிலில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற இறக்குமதிகளைத் தடுக்க இந்திய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • பல்வேறு RCEP பேச்சுவார்த்தைகளின் அறிக்கைகளின் கீழ், இந்தியா இந்த ஒப்பந்தத்தின் படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரிகளை 80%  அளவிற்கு குறைக்க வேண்டும்.
  • மற்ற நாடுகளுக்கு இந்தியா செய்யத் தயாராக இருப்பதை ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய சதவீதப் பொருளாகும். இருப்பினும், இந்த எண்ணிக்கையானது இந்தியத் தொழில்துறையை, குறிப்பாக விவசாயம் மற்றும் பால் துறைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும்.
  • மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்துப் பெறப்படும் இறக்குமதி மீது 86% வரிக் குறைப்பும், ஆசியான், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து பெறப்படும் இறக்குமதி மீது 90% வரிக் குறைப்பும் செய்ய வேண்டும்.
  • RCEP ஒப்பந்தத்தில் மேலும் கவலையுறும் விதமாக முதலீடுகள் மற்றும் மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட வேறு பல அம்சங்களும் உள்ளன.

இந்தியாவின் கோரிக்கைகள்

  • அடிப்படை ஆண்டு - கட்டணக் குறைப்புகளுக்கான அடிப்படை ஆண்டை 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டாக மாற்றுதல்.
  • இறக்குமதி அதிகரிப்பு – தானியங்கு கட்டமைப்பு முறையில் ஏராளமான பொருட்களை அக்கட்டமைப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதி திடீரென அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.
  • தோற்ற விதிகள் - சீனாவிலிருந்து அதிக அளவில் பொருட்கள் குவிக்கப் படுவதைத் தடுக்க கடுமையான தோற்ற விதிகளை அறிமுகப் படுத்துதல்.
  • சேவைகள் – சேவைத் துறைகளில் சிறந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுதல்.

இந்தியாவைப் பாதிக்கக் கூடிய காரணிகள்

  • RCEP இன் விவரங்கள் குறித்தப் பேச்சுவார்த்தைகள் 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. மேலும் இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
  • வர்த்தகப் பற்றாக்குறைகள்
    • 15 RCEP உறுப்பு நாடுகளில் குறைந்தது 11 நாடுகளுடன் இந்தியா மிகப் பெரிய அளவில் வர்த்தகப் பற்றாக்குறைகளைக் கொண்டுள்ளது.
    • இந்நாடுகளுடனான இந்தியாவின் 105 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையில் சீனா மட்டும் 53 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டுத் தொழில்
    • சீனாவின் உற்பத்தித் துறைத்  தொழில்களை இந்தியச் சந்தையில் தக்க வைத்துக் கொள்ள பரந்த அளவிலான ஒரு  அணுகல் சீனாவிற்குத் தேவை.
    • சீன இறக்குமதியின் அதிகரிப்பு காரணமாக இது இந்தியத் தொழில்களையும் விவசாயிகளையும் பாதிக்கும்.
  • FTA அனுபவம்
    • FTA ஒப்பந்தங்கள் மீதான இந்தியாவின் அனுபவம் குறித்த நன்மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
    • FTA பயன்பாடு 5% -25% வரம்பில் மட்டுமே இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
  • உள்நாட்டு எதிர்ப்பு
    • உள்நாட்டில் விவசாயிகள், பால் தொழில் அல்லது பெருநிறுவனத் துறை ஆகியவற்றைச் சார்ந்த முக்கியப் பங்குதாரர்களுடன் RCEP ஒரு கணிசமான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
  • இந்தியா வழங்குவதற்குத்  தயாராக இருப்பதை விட பல பொருட்கள் மீது சுங்க வரிகளை குறைக்க வேண்டும் மற்றும் இந்தியச் சந்தைகளில் அதிக அணுகல் வேண்டும் என்பவை பல RCEP நாடுகளின் கோரிக்கைகளாக உள்ளன.
  • எனவே, இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

************************

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்