TNPSC Thervupettagam

கி கி.அ.சச்சிதானந்தம் புத்தகங்களின் தீராக் காதலர்

October 5 , 2020 1567 days 935 0
  • சென்னையில் கடந்த சில பதிற்றாண்டுகளாக வசிக்கும் எந்தவொரு தீவிர வாசகருக்கும் கி.அ.சச்சிதானந்தனின் முகம் பரிச்சயமானது.
  • கன்னிமாரா நூலகத்தில், பழைய புத்தகக் கடைகளில், புத்தகக்காட்சியில் என்று அவரை எங்காவது கண்டிப்பாகப் பார்த்த நினைவுகள் மலரும்.
  • பிரபலமான எழுத்தாளர்கள் முதல் இளம் வாசகர்கள் வரை யாரோ ஒருவருடன் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி உடனே மனத்திரையில் விரியும். யாரும் எப்போதும் எங்கேயும் அவரிடம் எதைக் குறித்தும் பேசி விவாதிப்பதற்கு இடம் கொடுக்கும் எழுத்தாளராக அவர் இருந்தார்.
  • சச்சிதானந்தத்தின் பால்ய கால நினைவுகள் காஞ்சிபுரத்தோடும் அண்ணாவோடும் தொடர்புகொண்டவை.
  • அண்ணா திண்ணையில் அமர்ந்து எழுதியோ படித்துக்கொண்டோ இருந்தபோது விளையாட்டை மறந்து அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் சச்சிதானந்தம்.
  • சிறுவனை அழைத்து தனது கையெழுத்திட்டுப் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார் அண்ணா. புத்தகத்தைப் படித்துவிட்டதாகச் சொன்னபோது மீண்டும் ஒரு புத்தகம்.
  • இப்படி அண்ணா அளித்த புத்தகங்களின் வழியாக வாசிப்புக்குள் அடியெடுத்து வைத்தவர் சச்சிதானந்தம்.
  • காஞ்சியிலும் சென்னையிலும் பெரியாரும் அண்ணாவும் பேசிய கூட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் அடிக்கடி நினைவுகூர்வார்.
  • வாழ்நாள் முழுக்கவும் அவர் திராவிட இயக்கத்தின் அனுதாபியாக இருந்தபோதும் அவரை ஆட்கொண்டது என்னவோ இந்தியக் கலை ஆய்வாளர் ஆனந்த குமாரசாமிதான்.
  • அவரின் நினைவாகத் தன் மகனுக்கும் ஆனந்த குமாரசாமி என்று பெயர்சூட்டினார்.
  • இந்து தமிழ்நாளிதழில், ஆனந்த குமாரசாமி குறித்த முக்கியமான கட்டுரையொன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
  • கல்லூரி நாட்களில் ஆனந்த குமாரசாமியின் எழுத்துகளில் ஈர்க்கப்பட்ட சச்சிதானந்தம் அவர் எழுத்துகளைத் தேடித் தேடிப் படித்தார்.
  • அந்த எழுத்துகள் சச்சிதானந்தத்தை ஓர் கலை இலக்கிய உபாசகராகவும் தத்துவ மாணவராகவும் மாற்றியது.
  • ஏறக்குறைய துறவு வாழ்க்கை. இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார். அவரது பயணங்களில் பெரும் பகுதி இமயத்தை மையம் கொண்டது.
  • அந்தப் பயணங்களில் தமிழகக் கலைவடிவங்களின் தாக்கங்கள் இந்தியா முழுவதும் பரவிக்கிடந்ததைக் கண்டறிந்துகொண்டார்.
  • குறிப்பாக, எல்லோராவில் காரைக்காலம்மையாரின் சிலை இருப்பதை அவர் கண்டறிந்து சொன்ன பிறகே தமிழ் உலகுக்கு அது தெரியவந்தது.
  • நாற்பதையொட்டிய வயதுகளில் திருமணம் செய்துகொண்டார். மௌனியின் அணுக்கமான சீடர் அவர். சென்னையில் பணியாற்றியபோதும் அடிக்கடி சிதம்பரம் சென்று அவரோடு உரையாடித் திரும்புவது அவரது வழக்கமாக இருந்தது.
  • சென்னையில் அவருக்கு சி.மணியும் சி.சு.செல்லப்பாவும் நெருங்கிய நண்பர்கள். சி.சு.செல்லப்பாவின் சில புத்தங்களையும் அவர் பதிப்பித்திருக்கிறார்.
  • அந்தக் காலகட்டத்தில் சென்னையில் இயங்கிவந்த தீவிர இலக்கியவாதிகள் அனைவருடனும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. ந.முத்துசாமியும் எஸ்.வைத்தீஸ்வரனும் அவர்களில் முக்கியமானவர்கள்.
  • முன்னோடி எழுத்தாளர்கள், சமகால எழுத்தாளர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறை எழுத்தாளர்களோடும் அவரது நட்பு தொடர்ந்தது. பாதசாரி, அவருக்குச் செல்லப்பிள்ளை. பாதசாரியின் திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர் சச்சிதானந்தம்.

புத்தகங்களின் தீராக் காதலர்

  • ஒருபக்கம் சிற்பம், ஓவியம் என்று இந்தியக் கலைகளின் மீதான தேடல், இன்னொருபக்கம் பௌத்தம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று தத்துவத் தேடல், மற்றொருபக்கம் உலக இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் வாசித்த அனுபவம் என்று எல்லாமான கலவை அவர்.
  • படித்த உற்சாகத்தில் அந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கத் தொடங்கிவிடுவார். பாதியில் தடைப்பட்டால் அதைத் தொடரும் வழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.
  • அதுபோலவே, வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் அவருக்கு எழுதுவதில் இல்லை.
  • மரணத்தை மையமாக வைத்து வாழ்க்கையின் மீதான விசாரணையை நடத்துபவை அவரது கதைகள்.
  • நிதானமான நடையும் துல்லியமான சித்தரிப்பும் அவரது கதைகளின் தனிச்சிறப்புகள்.
  • சென்னையில் வாழும் ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகளாக அவரது சில கதைகள் என்றென்றும் பேசப்படும்.
  • எழுதிய கட்டுரைகள் குறைவு என்றாலும் அவரது பரந்த வாசிப்பின் சாரங்களாக அவை அமைந்திருந்தன.
  • மழைஇதழில் (2002) அவர் எழுதிய பௌத்த தியானமும் உளப் பகுப்பியலும்கட்டுரை இந்தியத் தத்துவத்தையும் மேற்குலக உளவியல் ஆய்வுகளையும் ஒப்புநோக்கி விவரித்தது.
  • பௌத்தம் பற்றிய மிகவும் எளிமையான அதே நேரத்தில் துல்லியமான அறிமுகம் அந்தக் கட்டுரை.
  • உலகத்தைச் சுற்றிவந்துவிட வேண்டும் என்று இளமையில் பெருங்கனவுடன் இருந்தவர் சச்சிதானந்தம்.
  • அந்தக் கனவு நிறைவேறாவிட்டாலும், அவரது மகன் ஐரோப்பாவில் பணியாற்றியபோது அங்கு செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.
  • அங்குள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தையும் தேடித் தேடி பார்த்துவிட்ட மனநிறைவோடு இந்தியா திரும்பினார்.
  • சச்சிதானந்தத்தின் சேகரிப்பில் இருபதாயிரத்தும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களின் தீராக் காதலரான அவர் கடைசியில் திருக்குறளைச் சரணடைந்தார். உலகில் நான் கற்ற கேட்ட புரிந்துகொண்ட அத்தனையும் இந்தத் திருக்குறளிலேயே இருக்கிறது என்று அதைத் தனது நண்பர்களுக்குப் பரிந்துரைத்தார்.

நன்றி: தி இந்து (05-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்