TNPSC Thervupettagam

கீழடி மண்பாண்டங்கள்

July 6 , 2023 562 days 313 0
  • கீழடி அருங்காட்சியகத்தை மக்கள் மொய்த்துக்கொள்கிறார்கள். இப்படி ஓர் ஆர்வமா என்று அசந்து போவோம். செட்டிநாட்டு மரபில் அமைந்த அருங்காட்சியகக் கட்டிடம், தன் இருநூறு ஆண்டுகாலப் பழமைக்குள் உங்களை முதலில் இழுத்துக்கொள்ளும். அடுத்த பத்து அடிகளில் நீங்கள் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக்குள் நழுவிவிழுவீர்கள். தொன்மையைப் பழமைக்குள் போர்த்திக்கொள்ளும் அருங்காட்சியகக் கட்டிடம்!
  • பொ.ஆ.மு. (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு நகர நாகரிகத்தைக் காட்டும் கீழடி தொல்பொருள்களில் பெரும்பாலானவை மண்பாண்டங்கள். வண்ணம், வடிவம், நேர்த்தி, அலங்காரம், மண்ணின் தரம், தொழில்நுட்பம், பயன் போன்றவை மண்பாண்டங்களை வகைப் படுத்திப் புரிந்துகொள்ள உதவும் சட்டகம்.
  • பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. (கி.பி.) மூன்றாம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய மண்பாண்ட மரபினை ஆய்வுசெய்த எஸ்.குருமூர்த்தி, இந்தப் பகுப்புச் சட்டகத்தின் வழியாகத் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் மண்பாண்டங்களை மிகச்சிறப்பாக ஒப்பிட்டுள்ளார் (சென்னைப் பலகலைக் கழகம், 1981).

துணைச் சட்டகம்

  • இந்தச் சட்டகத்தைக் கொஞ்சம் விரிவுபடுத்தும் வகையில், ஒரு எளிமையான துணைச் சட்டகத்தை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன். மண்பாண்டங்கள் திருகையிலேயே முழுமையாகச் செய்து அறுத்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது, திருகையில் செய்து உலர்த்தி, சரியான பதத்தில் கல்லும் தட்டுப் பலகையும் பயன்படுத்தித் தட்டிச் செய்யப்பட்டவையாக இருக்கலாம். முதலாவது வகையை ‘அறுப்பு’ என்பார்கள். இரண்டாவதற்குத் ‘தட்டு’ என்று பெயர். கீழடியில் இரண்டு வகைகளும் உள்ளன. இந்த வகைப்பாடு நான் முன்வைக்கும் துணைச் சட்டகத்தின் முதல் கூறு.
  • தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல் பாண்டங்களைச் செய்த குயவர்களின் கை வண்ணத்தையும் பார்க்க வேண்டும். இதர கைத்தொழில்களில் இதை ‘வேலைப்பாடு’ என்பார்கள். குயவர்களிடையே இதற்கு ‘பணதி’ - பண்ணும் திறன் - என்று பெயர். இதனைத் துணைச் சட்டகத்தின் இரண்டாவது கூறாகக் கொள்ளலாம். மண்பாண்டத் தொழில் சிறு சிறு மாறுதல்களோடு ஒரு தொடர் மரபாகத்தான் தரித்திருக்கிறது. மரபுத் தொடர்ச்சியின் அடையாளங்களை இன்று காண முடிகிறதா என்று பார்ப்பது, நான் சொல்லும் சட்டகத்தின் மூன்றாவது கூறு.

அரிதும் புதிரும்

  • தட்டு வகைப் பாண்டங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம். இவ்வகையில் பெரிய பாண்டங்களைச் செய்ய முடியும். இவற்றின் ஓடு மெலிதாக இருப்பதால் இவை எளிதில் உடையும். கீழடியில் அளவில் பெரிய பாண்டங்கள் கிடைக்காமல் இருப்பதற்கும், பெரும் குவியலாகப் பானை ஓடுகள் கிடைப்பதற்கும் இது ஒரு காரணம். பொதுவாக, மண் பாண்டங்களில் கழுத்துக்குக் கீழே கோடுகள் இழைத்திருப்பார்கள்.
  • இதற்கு ‘இழைப்பு’ என்று பெயர். கீழடி பாண்டம் ஒன்றில் கழுத்தையும் அதற்குக் கீழே நெஞ்சுப் பகுதியையும் தாண்டி புடை மடியும் இடத்தில் இரண்டு இழைப்புகள் உள்ளன; இது அரிது. தட்டுவகைப் பாண்டத்தின் புடையில் இழைப்புகளை உருவாக்க முடியாது. இன்னொரு பாண்டத்தின் புடை மடிப்பில் வரந்தை (Margin) வைத்திருப்பதைப் பார்த்தேன்; இது அரிது என்பதோடு புதிராகவும் உள்ளது.
  • கீழடி மண்பாண்டங்களில் ஆகச் சிறந்ததாக நான் கருதுவது ‘அழுத்தப் பெற்ற பெரும் கொள் மட்கலன்’ என்று தமிழ்நாடு அரசுத் தொல்லியல் நூலில் காட்டப்பட்டிருப்பது தான் (கீழடி, 2020. பக்.15). கழுத்து இவ்வளவு பதுங்கலாகவும், புடை இந்த வீச்சுக்குப் பரந்திருப்பதாகவும் அறுப்பு வகையில் செய்வது சாத்தியமில்லை. தட்டு வகையில் செய்வதும் மிகமிகக் கடினம். இதை ஈரப் பதத்தில் தட்டி, கவிழ்த்து உலர்த்தும்போது புடை புவி ஈர்ப்பில் சரிந்துவிடும்.
  • அப்படிச் சரியாமலிருக்கக் காய்ந்து இறுகும்வரை சுற்றிலும் முட்டுக் கொடுத்திருப்பார்கள். இதில் தண்ணீர், தயிர் அல்லது எண்ணெயை நிரப்பினால் மற்ற பாண்டங்களைப் போல் பானையின் தலையைக் கையால் பிடித்துத் தூக்க முடியாது. புடையை இரு கைகளாலும் கட்டித்தான் தூக்கலாம். சும்மாடு வைத்துத் தலையில் ஏற்றிக்கொண்டால் கையால் பிடிக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க இயலும்.
  • உறை கிணற்றின் உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது வழக்கம். கீழடியில் இருப்பவை கீழ் உறை ஒவ்வொன்றும் சரிபாதி மேல் உறைக்குள் செல்வதாகக் குந்தாணி போல் வாய் அகன்றும் அடி குறுகியும் உள்ளன. இப்படிச் செய்யும்போது ஏழடி ஆழத்துக்குப் பத்து உறைகள் தேவைப்பட்டிருக்கும். அடுக்கும்போது மேல் உறைகளின் பளுவால் கீழ் உறைகளின் வாய் விரிந்து உடைந்துவிடக்கூடும். இதை உறை கேணியின் இன்னொரு வகை என்று எடுத்துக்கொள்வதில் பிரச்சினை உள்ளது.

இல்லாமைக்கும் ஆய்வு

  • கீழடியில் கிடைத்திருக்க வேண்டிய, ஆனால் இதுவரை கிடைக்காத சிலவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே குயவர்கள் கூட்டமாக வாழ்ந்திருக்கிறார்கள். திருகை பயன்பட்டிருக்கிறது. திருகைக்கான அச்சு போன்ற கல் இதுவரை கிடைக்கவில்லை. மையத்தில் கூம்பு வடிவில் செதுக்கிய ஒரு அரைக்கோளக் கருங்கல் அச்சாகவும், அது பொருந்திச் சுழலுமாறு கீழ் நோக்கிய கூம்பாகக் குடைந்த இன்னொரு அரைக்கோளமும் இன்றுவரை திருகையாக உள்ளது.
  • இதுவோ, இதுபோன்ற எதுவுமோ கீழடியில் தட்டுப்படவில்லை. முன்பு குறிப்பிட்ட ‘தட்டு’ வகைப் பாண்டங்கள் கீழடியில் இருந்தும் தட்டுவதற்குப் பாண்டத்தின் உள்ளே பிடித்துக் கொள்ளும் கல் தென்படவில்லை. ஒய்.சுப்பராயலு எனக்கு அனுப்பிய வேறோர் இடத்தின் படத்தில், இந்தக் கல் இருக்கிறது. நெசவுத் தொழிலுக்கான கருவிகள் கிடைக்கும் கீழடியில் மண்பாண்டத்துக்கான இந்தக்கருவிகள் அகப்படாததற்கான நம் அனுமானம் என்ன?
  • மேலே சொன்னவை நான் முன்வைத்த துணைச் சட்டகத்துக்குள் அகப்பட்ட சில எடுத்துக் காட்டுகள். இந்தச் சட்டகம் கீழடி மண்பாண்டங்களை இன்னும் துல்லியமாகப் பகுக்கவும் புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.

நன்றி: தி இந்து (06 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்