- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதிபெறுவதற்கான ‘கேண்டிடேட்ஸ்’ போட்டித் தொடரில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். செஸ் விளையாட்டில் இந்தியாவின் தலைசிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
- பொதுவாக செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டிக்கு நடப்பு சாம்பியன் நேரடியாகத் தகுதி பெற்றுவிடுவார். அவருடன் போட்டிபோட வேண்டியவர் யார் என்பது கேண்டிடேட்ஸ் போட்டித் தொடரின் மூலம் தீர்மானிக்கப்படும்.
- இந்த ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டித் தொடர், கனடா தலைநகர் டொரண்டோவில் நடைபெற்றது. உலகத் தரவரிசையில் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ள இத்தாலியின் ஃபாபியானோ கருவானா, அமெரிக்கரான ஹிகாரு நாகமுரா, முந்தைய இரு கேண்டிடேட்ஸ் தொடர்களில் வென்றவரான ரஷ்யாவின் இயான் நிபோம்னிஷி ஆகியோரில் யாரேனும் ஒருவர்தான் இதில் வெற்றிபெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
- ஆனால், இறுதிச்சுற்றில் ஹிகாரு நாகமுராவை எதிர்கொண்ட குகேஷ், 71ஆவது காய் நகர்த்தலின்போது போட்டியைச் சமன்செய்து முடித்து முதலிடம் பெற்றார். இதன் மூலம் சீனாவில் நடைபெறவிருக்கும் இந்த ஆண்டின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனுடன் குகேஷ் மோதுவார்.
- 17 வயதாகும் குகேஷ், செஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் விளையாடத் தகுதிபெற்றவர் என்னும் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
- இதற்கு முன் 1984இல் ரஷ்யாவைச் சேர்ந்த கேரி கேஸ்ப்ரோவ் 22 வயதில் உலக சாம்பியன் போட்டியில் விளையாடியதே உலக சாதனையாக இருந்தது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலக சாம்பியன் போட்டிக்குத் தகுதிபெறும் இரண்டாவது இந்தியரான குகேஷ், 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்.
- குகேஷின் வெற்றி, செஸ்ஸில் அதிவேகமாக முன்னேறிவரும் இந்தியாவின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல். குகேஷ் மட்டுமல்லாமல் இந்தியாவின் சார்பில் இந்த ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்களும் சிறப்பாகவே விளையாடியுள்ளனர். ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகிய இருவரும் சில வெற்றிகளைப் பெற்றனர். மகளிர் பிரிவில் கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி இருவரும் முறையே இரண்டாம், நான்காம் இடங்களைப் பெற்றனர்.
- இந்தச் சாதனைகள் தொடர வேண்டும். இந்திய அரசும் செஸ் கூட்டமைப்பும், செஸ் விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் பிற அமைப்புகளும் செஸ் விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வலுவூட்ட இந்தச் சாதனைகளைப் பயன்படுத்த வேண்டும். சென்னையில் 2023 டிசம்பரில் நடத்தப்பட்ட சூப்பர் கிராண்ட்மாஸ்டர் போட்டித் தொடர், அவசரகதியில் ஒருங்கிணைக் கப்பட்டிருந்தாலும் அதன் நோக்கத்தை நிறைவேற்றியது.
- அதில் குகேஷ் வெற்றிபெற்றதால்தான் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்; தகுதியும்பெற்றார். ஆனால், அத்தகைய போட்டித் தொடர் அதற்கு முன்பு இந்தியாவில் நடத்தப்பட்டதே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
- ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும் பல ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி செஸ் வீரராகத் திகழ்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவில் இத்தகைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றதே இல்லை. இந்தியாவில் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான தொடர்கள் உள்பட சர்வதேசப் போட்டித் தொடர்கள் அதிகமாக நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் செஸ் உலகில் இந்தியாவின் வெற்றிக்கொடி உயரப் பறக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 04 – 2024)