குடியரசாகட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள்
- மக்கள் நலனில் ஓர் அரசு அக்கறை செலுத்துகிறதா, மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவருகிறதா என்பதைப் பொறுத்துதான் அது நல்லாட்சியா இல்லையா என்பதை முடிவுசெய்கிறோம். ஜனநாயக வழிமுறையில் நமது ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மக்களின் கைகளில்தான் இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.
- பொறுப்புடன் செயல்படும்போதுதான் மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவார்கள். அதன் பிறகு மக்களாட்சிக்குத் தேவையான ‘பொதுமக்கள் விழிப்பு’ (Public Vigilance) அவர்களுக்கு வந்துவிடும். அப்போது மக்கள் அரசாங்கத்தைக் கண்காணிப்பார்கள், சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். அப்போதுதான் நேர்மையான ஆட்சி நடைபெறும். நிர்வாகம் சிறக்கும்.
மாற்றம் நிகழாதது ஏன்?
- நம் சமூகத்தை மாற்றிச் செயல்பட வைக்க உருவாக்கப்பட்டதுதான் புதிய உள்ளாட்சி அரசாங்கம். இங்குதான் மக்களை அறிவார்ந்த மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்க வைத்து, ஒரு சுயசார்புமிக்க வாழ்க்கையைக் கட்டமைக்க வாய்ப்புக்களை உருவாக்கியது மத்திய அரசு.
- இவ்வளவு ஆற்றலையும், சக்தியையும் பெற்ற உள்ளாட்சி அரசாங்கத்தைக் கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு சடங்காகவும் ஒரு சம்பிரதாயமாகவும் நடத்த முடிந்ததே தவிர, அடிப்படை மாற்றங்களைக் கிராம மக்களின் வாழ்க்கையில் கொண்டுவரவில்லை என்பதை அரசாங்கமே தன் அறிக்கைகளில் ஒப்புக்கொள்கிறது.
- இதன் காரணத்தை ஆய்ந்து பார்த்தால் ஓர் உண்மை வெளிப்படும். இவ்வளவு ஆற்றல் பொதிந்த உள்ளாட்சியை மக்கள் பங்கேற்றுத் தங்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான புரிதலைப் பஞ்சாயத்துத் தலைவர்களால் உருவாக்க முடியவில்லை.
- அதற்குக் காரணம் அந்தப் புரிதல் உள்ளாட்சித் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பதுதான். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிப் புரிந்துகொண்டு, அவற்றைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டு மக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு பொறுப்புமிக்க தலைமை தேவை.
- இந்தியக் கிராமங்களைப் புனரமைத்து அவை ஒவ்வொன்றையும் ஒரு குட்டிக் குடியரசாக உருவாக்க வேண்டுமென்றால், அது அந்தந்தக் கிராமத்து மக்களால் மட்டுமே முடியும். அத்துடன் மத்திய, மாநில அரசுகளால் தொட முடியாத மக்கள் குழுக்களைத் தொட்டு அவர்களின் மேம்பாட்டுக்காகச் செயல்பட வேண்டியதே இந்தப் புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தின் அடிப்படைப் பணி.
- இந்த அரசாங்கம் விளிம்புநிலை மக்களை அதிகாரமிக்கவர்களாக இந்த அரசாங்கத்துக்குள் கொண்டுவருகிறது. பெண்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எல்லாப் பதவிகளிலும் இடஒதுக்கீடு வழங்க இது வகைசெய்கிறது. இவர்கள் இந்த அரசாங்க அமைப்புக்குள் பொறுப்பாளர்களாக வரும்போது பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் சந்தித்துவந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உருவாகிறது.
பஞ்சாயத்துத் தலைவரின் கடமைகள்:
- குறிப்பாக, ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் தங்களின் மேம்பாட்டுக்கான ஒரு கனவுத் திட்டத்தை மக்கள் பங்கேற்போடு உருவாக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தியுள்ளது. கிராம மேம்பாட்டுப் பணிகளில் மக்களைப் பொறுப்பெடுக்க வைக்கத் தயார் செய்யும் பணியில் தேவையான விழிப்புணர்வையும் அறிவையும் மக்களிடம் அந்தத் தலைவர் உருவாக்குவார்.
- அரசு தரும் பணத்துக்காக அவர் காத்திருக்க மாட்டார். அரசு தரும் பணத்தைச் செலவழிப்பதைப் பணியாகப் பார்க்க மாட்டார். மக்கள் பயனாளியாகத் தங்களைப் பாவிக்காமல் கிராம மேம்பாட்டில் பங்காளியாகவும், பங்குதாரராகவும் பொறுப்பெடுக்கும் மனநிலையுடன் செயல்படத் தேவையான மனோபாவத்தையே அவர் உருவாக்குவார். மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் மனநிலையையும் உருவாக்குவார்.
- கிராமசபையை ஒரு சடங்காக நடத்தாமல் அதை ஒரு விவாத ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மாமன்றமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, நம் மக்களாட்சி பங்கேற்பு மக்களாட்சி என்ற மாற்றத்தைக் கொண்டுவருவார். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திய மக்கள் பங்கேற்பு கிராமத் திட்டத்தை அறிவியல்பூர்வமாக உருவாக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வையும் பார்வையையும் உருவாக்கி ஒரு உன்னத கிராமத் திட்டத்தை உருவாக்குவார். மாநில அரசுகளின் 17 துறைகளையும் அதை நிறைவேற்றச் செய்திடுவார்.
- இந்தத் திட்டமிடுதலுக்கான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க அருகில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தை அணுகி, மத்திய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனத்துக்கு உருவாக்கப்பட்ட ‘உன்னத் பாரத்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கிச் செயல்பட வைப்பார்.
- அப்படிப் புள்ளிவிவரம் சேகரிக்கும்போது கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் பொருளாதார நிலை, கிராமத்தில் உள்ள வளங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் சேகரித்து அந்தக் கிராமம் பொருளாதார வளர்ச்சியில், குடும்ப மேம்பாட்டில் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டுவார்.
- அதன் மூலம், உன்னத மாதிரிக் கிராமத்தை உருவாக்க மக்களிடம் கருத்தரங்கம் நடத்திக் கருத்துகளையும், தேவைகளையும் சேகரித்து அவர்களுடன் ஒருங்கிணைத்து ஐந்தாண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்குவார். அதற்குக் கிராமசபையில் மக்களின் ஒப்புதலைப் பெற்று ஒரு சட்டபூர்வமான திட்டத்தை உருவாக்குவார்.
வழிகாட்டும் தலைமை:
- இந்தத் திட்டம் வெறும் கட்டிடங்களையும், சாலைகளையும் உருவாக்கும் திட்டமாக மட்டுமல்லாது, பொருளாதார மேம்பாட்டுக்கும், சமூக மேம்பாட்டுக்கும், இயற்கை வள மேம்பாட்டுக்கும், சமூக நீதிக்கும், வறுமை ஒழிப்புக்கும் வழிவகுப்பதாக இருக்கும். இந்தப் பணிகளை அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வார்டு உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தச் சமூகக் குழுக்களும் இணைந்து மக்களுடன் கைகோத்து ஒரு கோயில் தேரை இழுப்பதுபோல் செய்துகாட்டுவார்கள்.
- ஒரு குட்டிக் குடியரசை ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உருவாக்கக் கிராம மேம்பாட்டுக்கான புத்தகங்களை வாசித்து, அதை எப்படிச் சட்டப்படி நடத்துவது என்பதைப் புரிந்துகொண்டு மக்களுக்கு வழிகாட்டக் குழுவாகச் செயல்பட ஆரம்பித்தால், மக்களுக்கு வழிகாட்டும் தலைமையாக மாற முடியும். அதுதான் இன்று நமக்குத் தேவை. அந்தத் தலைமைதான் மாற்றுத் தலைமை. அதுதான் இன்றைக்குத் தேவையான வழிகாட்டும் தலைமை.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 08 – 2024)