TNPSC Thervupettagam

குன்றக்குடி அடிகளார்: சமூக அக்கறை கொண்ட ஆன்மிகச் செம்மல்!

July 11 , 2024 184 days 175 0
  • சாதி வேறுபாடுகள் அற்ற சமயம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட குன்றக்குடி அடிகளாரின் (தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரியார்) பிறந்த நாள் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. ஆன்மிகத்துக்கும் சமூகத்துக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்த அடிகளாரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம்.
  • சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்தவர் குன்றக்குடி அடிகளார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து அந்த ஆதீனம் பல ஆக்கபூர்வச் செயல்பாடுகளுக்காகத் தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
  • சிவன் கோயில்களில் தேவாரமும் திருவாசகமும் ஓதித் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், அதைச் செயல்படுத்த முனைந்ததும், ஓர் ஒளிவட்டத்துக்குள் தன்னை இருத்திக்கொள்ளாமல் மக்களால் எளிதில் அணுகத்தக்கவராக இருந்ததும் அடிகளாரின் அடையாளங்கள் ஆகின.
  • திருவள்ளுவர் திருநாள், தமிழ்த் திருநாள் போன்றவை நடைபெற ஏற்பாடு செய்தார். அக்காலத்தில் ஒரு மடம் இந்நிகழ்வுகளை முன்னின்று நடத்துவது வழக்கத்தில் இருந்திருக்கவில்லை. குன்றக்குடி திருமடம், மக்கள் உரிமையோடு வந்து செல்லும் இடமாக மாறியது.
  • பறம்புமலையில் அடிகளார் தொடங்கிய ‘பாரி விழா’வில் திரு.வி.க., கவிமணி தேசிக விநாயகம், தெ.பொ.மீ. உள்படத் தமிழறிஞர் பலர் கௌரவிக்கப்பட்டனர். அடிகளார் தோற்றுவித்த அருள்நெறித் திருக்கூட்டம் சமயத்தை நிலைநிறுத்தும் பணிகளில் இறங்கியது; ‘அருள்நெறித் திருப்பணி மன்றம்’ கல்வியைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டது. சம்பிரதாயங்கள் காலந்தோறும் மாறக்கூடியவை எனக் கருதியதால், அவை தன்னைக் கட்டுப்படுத்த அடிகளார் அனுமதிக்கவில்லை.
  • சமூக நோக்கிலான பணிகளில், கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்பிய பெரியாருடனும் அடிகளாரால் இணைந்து செயல்பட முடிந்தது. தனக்கு வழங்கப்பட்ட தங்க உத்திராட்ச மாலையை, இந்தியா-சீனப் போரை ஒட்டி மத்திய அரசுக்கு நிதி அளிக்க ஏலம் விட்டவர் அவர்.
  • 1967 இல் அவர் முன்னெடுத்த ‘திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம்’, தனது முதல் மாநாட்டில் ‘கோயில் கருவறைக்குள் அனைவரும் சாதி வேறுபாடு இன்றி நுழைந்து வழிபாடு செய்வது’ எனத் தீர்மானம் நிறைவேற்றியது. கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அடிகளார் அங்கு சென்றார்.
  • 1969இல் அன்றைய முதல்வர் கருணாநிதியின் விருப்பத்தை ஏற்று, சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்; எனினும் மதுவை அரசு மீண்டும் அறிமுகம் செய்தபோது, அதற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தார். 1979இல் மண்டைக்காடு கலவரத்தை அடுத்து அவர் ஆற்றிய அமைதிப் பணி அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் சட்டமன்றத்தில் பாராட்டப்பட்டது.
  • தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களின்பொருட்டுத் தன்னை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருந்தார். குன்றக்குடியைச் சமூக நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் சிறந்த ஊராக ஆக்குவதற்கு அவர் செய்த பணிகளை, ‘குன்றக்குடி மாதிரி’ என இந்தியத் திட்டக்குழு பாராட்டியது. கிராமங்களைத் தன்னிறைவு பெற்றவையாக மாற்றுவதில் முனைப்புக் காட்டிய அடிகளாரின் அணுகுமுறை, பின்னாள்களில் சில உள்ளாட்சித் தலைவர்களால் பின்பற்றப்பட்டு நல்ல விளைவைத் தந்தது.
  • இன்று சமூகம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களை, அடிகளார் இருந்திருந்தால் எப்படி அவற்றை எதிர்கொண்டிருப்பார் என நம்மில் சிலரை எண்ண வைத்ததே அவரது ஆளுமையின் சிறப்பு. சமயம் என்பது சக மனிதனை நேசிப்பது என்பதே அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையின் சாரமாக இருந்தது. அக்கருத்தை ஆழப் பதியவைக்கும்வகையில் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்க இந்தத் தருணத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்