- நம்முடைய மாநிலங்கள் வழி இந்தியா செல்ல வேண்டிய திசையை மீண்டும் சுட்டுவதாக அமைந்திருக்கிறது, 2019-ம் ஆண்டுக்கான ‘குன்றா வளர்ச்சி இலக்கு அட்டவணை’.
- ‘நிதி ஆயோக்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த அட்டவணையில் மாநிலங்களின் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.
- அட்டவணை வெளிப்படுத்தும் தகவல்களில் வியப்பளிக்கும் வகையிலான புதிய அம்சங்கள் ஏதுமில்லை என்றாலும், சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றன.
வளர்ச்சி இலக்குகள்
- ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த, 2030-க்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களுடன் இமாசல பிரதேசம், சிக்கிம், கோவா ஆகியவை சேர்ந்துள்ளன. வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
- மேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரமும் குஜராத்தும் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மாநிலங்களைவிட மேம்பட்ட நிலையில் உள்ளன.
- காற்று மாசைக் குறைக்கும் வகையிலான மின்சார உற்பத்தி, சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் உத்தர பிரதேசம் 2018-19-ல் கவனிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும் போதவில்லை; வறுமை ஒழிப்பு, உடல் ஆரோக்கியம், வளமான வாழ்க்கை ஆகியவற்றில் இந்தியாவின் வெவ்வேறு திசைகளில் உள்ள மாநிலங்களிடையே இன்னமும் குறிப்பிடத்தக்க வேறுபாடு நீடிக்கிறது. ஆனால், எந்தத் திசை மாநிலங்களானாலும் பாலின சமத்துவத்தில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.
- பொதுவாக, தொழில்மயம், புதுமையான கண்டுபிடிப்புகள், அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றோடு சமூக வளர்ச்சிக் குறியீடுகளிலும் தென்மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.
காரணங்கள்
- இந்த அடிப்படையில் நாம் யோசிக்கத் தொடங்கினால், மாநில அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடர்ந்தும் பெரிய அளவிலும் நிறைவேற்றும் முனைப்பும்தான் முக்கியம் எனப் புரிந்துகொள்ள முடியும். தென் மாநிலங்களில் இது ஒரு கலாச்சாரமாகவே தொடர்வதற்கு முக்கிய காரணம், இங்குள்ள அரசியல், சமூக இயக்கங்களின் தீவிரச் செயல்பாடுகளும் அவற்றின் செல்வாக்கால் மக்களுக்கிடையே ஏற்பட்ட விழிப்புணர்வும் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.
- மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து தரும் நல்வாழ்வுத் திட்டங்கள், மருத்துவ உதவி அதற்கான கட்டமைப்புகள், கல்வி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்கும் அதிகாரமளிக்கும் திட்டங்கள் போன்றவற்றால் வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. மாநிலங்களுக்குக் கிடைத்திருக்கும் அதிகாரங்களின் விளைவு இது. மாநிலங்களுக்குக் கூடுதலான அதிகாரம் சாத்தியமாகும்போது முன்னேற்றத்திலும் விரைவு ஏற்படலாம் என்பதையே இது சுட்டுகிறது.
- மேலதிகம் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான இடம் பாலினச் சமத்துவம். ஒவ்வொரு அம்சத்திலும் நம் சமூகத்தில் ஆண்-பெண் இடையிலான பாகுபாடுகள் குறையும்போதே நாடு குன்றாத வளர்ச்சி நோக்கிப் பாய்ச்சலில் செல்ல முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13-01-2020)