- தேனீ அற்புதமான பூச்சி. ஒரு கூட்டில் ஒரே ஒரு இராணித்தேனீ இருக்கும். அது நூற்றுக்கணக்கான முட்டைகள் இடும். அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளி வரும். அவற்றில் ஒரே ஒரு இராணித்தேனீ குஞ்சு இருக்கும். பருவம் அடைந்ததும் அந்தக் குஞ்சுகள் பறந்து செல்லும். தகுதியான இடத்தில் தங்கும். வாழ்வைத் தொடங்கும். இது புதுக்குடியேற்றம்.
- மாந்த இனத்திலும் இந்தக் குடியேற்றம் - புலம்பெயர்தல் நடைபெற்றது. வணிகம், இனப்பெருக்கம், இயற்கைப் பேரிடர், அரசியல் அடக்குமுறை இவை காரணமாக மனிதர் அயலிடங்களுக்குச் சென்றனர். வாழ்வைத் தொடங்கினர். நெடுங்காலத்திற்கு முன்பு, தமிழர், உலகின் வடமேற்குப் பகுதிக்குச் சென்றார்கள். அவர்களைச் சுமேரியர், பொனீஷியர், மாயன்கள் என்று வரலாறு குறிப்பிட்டது.
- குமரிக்கண்டத்தில் பழந்தமிழர் வாழ்ந்தனர். ஆழிப்பேரலை, அந்த நிலப்பகுதியை விழுங்கிய காலகட்டத்தில், தமிழர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று, பண்டை இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவினார்கள். எனவே, இந்தியா முழுவதும் பரவிய மொழியாகத் தமிழ் அமைந்தது. இந்த உண்மையை ஆய்வாளர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
- ஒரு காலகட்டத்தில் தமிழர் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தனர் என்று ஜே.எச். ஹட்டன் கூறினார். வட இந்தியா முழுவதும் தமிழர் பரவி வாழ்ந்தனர். பிறகு அவர்கள் தென்னிந்தியாவுக்குத் தள்ளப்பட்டனர் என்று தாமஸ் டிராட்மன் கூறினார். ஃபேர் சர்விஸ், சகோந்தர தோவ், ஹிவிட், இராட்லர் முதலிய அயலக அறிஞர்களும் அவ்வாறே அறிவித்தார்கள்.
- அம்பேத்கர், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், பந்தர்கர், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, ந.சி. கந்தையா பிள்ளை, ஆனந்த குமாரசாமி, சாத்தூர் சேகரன், பி. இராமநாதன் முதலிய அறிஞர்களும், இந்த உண்மையை உரைத்தார்கள்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலியவை பண்பட்ட திராவிட மொழிகள். குருக், கோண்டி, கூயி, கோபா, மால்தோ, பெங்கோ முதலியவை பண்படாத திராவிட மொழிகள். இந்த மொழிகள் தமிழோடு தொடர்பு உடையவை. இந்த மொழிகளைப் பேசுவோர் இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் வாழ்கின்றார்கள். ஆகவே, பண்படாத தமிழ்மொழி பேசியோரும் இந்த நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்தனர் என்பது தெரிகிறது.
- ஊர் என்பது நல்ல தமிழ்ச்சொல். இதனுடன் "ப்' என்ற எழுத்து சேர்ந்தால் "பூர்' என்றாகும். "பூர்' என்று முடியும் ஊர்கள் இந்த நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. (ஜெய்ப்பூர், கான்பூர், கர்த்தர்பூர், கரக்பூர்). இந்த ஊர்கள் பழந்தமிழரின் வாழிடங்களாக இருந்தன. "கோட்டை' என்ற தமிழ்ச் சொல் வட நாட்டில் "கோட்' என்னும் இறுதிப் பகுதியாக வழங்குகிறது. (அமர்கோட், பதான்கோட், சியால்கோட்).
- தமிழ்ச் சொற்களான சில ஊர்ப் பெயர்கள் வடபுலத்தில் உள்ளன. மத்திய பிரதேசத்தில் சிந்துவாரா மலைப்பகுதியில் ஏர்க்காடு, பாலக்காடு, தேக்கடி, இடுக்கி முதலிய ஊர்கள் உள்ளன. தமி, தமிழி, தமியா என்ற பெயர்களும் இருக்கின்றன. இன்றைய பாகிஸ்தானில் கொற்கை, ஆமூர், வஞ்சி, மாந்தை என்ற தமிழ்ப் பெயர் ஊர்கள் இருக்கின்றன என்று ஆர். பால கிருஷ்ணன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
- பிகார் மாநிலத்தில் "தமிழ்க்கோடா' என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ளோரின் வாழ்க்கை முறை பழந்தமிழரின் முறையை ஒத்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். தமிழ்நாட்டில் "பட்டு', "பட்டி' என்று முடியும் ஊர்ப் பெயர்கள் உள்ளன. இவை வடநாட்டில் "பட்' என்று முடிகின்ற ஊர்ப்பெயர்களாக உள்ளன. (பானிப்பட், சோனிப்பட்). காடு என்ற ஒட்டுப்பெயர் வடக்கே கார் என்று திரிந்தது (அலிகார், சண்டிகார்).
- பார்ப்பவரை மலைக்க வைக்கும் தன்மை கொண்டதால் மலை என்பது காரணப் பெயர். மலை என்ற சொல், சமோலி, கட்வால், கும்லா முதலிய வட இந்திய மாவட்டங்களில் உள்ளன. "மலை' என்பது "மாலா' என்று திரிந்து, அல்மோரா, பீர்பூம், ஜலந்தர் முதலிய அயலகத்து மாவட்டங்களில் உள்ளன. வரை என்றால் மலை. இந்த வரை என்ற சொல்லைத் தன்னுள் கொண்ட ஊர்கள் வல்சட், தாணே, காங்ரா ஆகிய மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்து நகரங்களின் பெயர்கள் வடக்கே திரிபுற்று வாழ்கின்றன (பட்டினம் - பாட்னா, மதுரை - மதுரா).
- சில தமிழ்ச்சொற்கள் வடபுலத்தில் மாறுபட்ட நிலையில் உள்ளன. வணிகர் என்ற தமிழ்ச் சொல், அங்கே பனியா என்று திரிந்துள்ளது. வணிகரில் சிறந்து விளங்கிய திறனாளர்களுக்கு முன்பு எட்டி என்ற பட்டம் தரப்பட்டது. இந்தச் சொல் கன்னடத்தில் ஷெட்டி என்று உருமாறியது. இது வடபுலத்தில் சேட் என்று நிலைத்துவிட்டது.
- பாண்டியர் தமிழகத்தின் முந்தைய மாமன்னர்கள். இன்றைய மகாராஷ்டிரத்தில் முன்பு தமிழ் இருந்தது. அங்கே பாண்டியர் என்ற சொல்லாட்சி வாழ்ந்தது. அந்தப் பாண்டியர் என்ற சொல், இப்போது அங்கே பாண்டே என்ற வடிவில் அமைந்துள்ளது (மனோஜ் பாண்டே, ஹர்த்திக் பாண்டே, அநன்யா பாண்டே).
- மொகஞ்சதாரோவின் சிந்துவெளி நாகரிகம் தொல் தமிழருக்கு உரியது. அங்கு வாழ்ந்த மொழி தமிழ் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன், மதிவாணன், பூரணசந்திர ஜீவா முதலிய அறிஞர்கள் ஆய்ந்து உரைத்தார்கள். சிந்துவெளியில் பட எழுத்து இருந்தது. இந்த எழுத்துகள் தமிழகத்து கீழ்வாலையில் இருப்பதை கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்தார்.
- தமிழ்நாட்டின் பல இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் சிந்துவெளி எழுத்துகள் காணப்பட்டன. துலுக்கர்பட்டியிலும் இத்தகைய எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. கீழடியிலும் சிந்துவெளிப் பட எழுத்து கொண்ட பொருள்கள் கிடைத்துள்ளன. ஆகவே, ஒரு காலகட்டத்தில் தமிழ் மொகஞ்சதாரோ நிலப்பகுதி வரை நிலவியது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- பெருவேந்தன் அசோகன் காலத்தில் பிராமி என்ற எழுத்து வகை இருந்தது. சிந்துவெளி எழுத்துகளிலிருந்தே, பிராமி எழுத்து முறை தோன்றியிருக்க வேண்டும் என்பது லாங்டன் ஹண்டர், அலெக்சாண்டர் ஆகியோரின் முடிபாகும். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே சம்ஸ்கிருதம் என்றார் வில்லியம் ஜோன்ஸ்.
- இந்த மொழி கிரேக்க இலத்தீன் எழுத்து முறையைக் கொண்டிருக்கவில்லை. இதன் எழுத்தமைப்பு முறை தமிழை ஒட்டியே உள்ளது. தொடர் அமைப்பில் எல்லா இந்திய மொழிகளும் தமிழ் மொழியை ஒத்துள்ளன என்று எஸ்.கே. சாட்டர்ஜி அறிவித்தார்.
- இடப்பெயர்வு, வணிகம், சமயம், அயலவரின் ஆட்சி முதலியவை காரணமாக மொழிக்கலப்பு ஏற்படும். சில தமிழ்ச் சொற்கள் பல இந்திய மொழிகளிலும் திரிபடைந்த நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளன. தொன்மைப் பெருஞ்சிறப்புடைய வடமொழியில் தமிழ்ச் சொற்கள் உள்ளன என்றார் கால்டுவெல். பர்ரோ, எமனோ ஆகிய அறிஞர்களும், மயிலை சீனி வேங்கடசாமி போன்றோரும் அம்மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்டினார்கள்.
- இந்தியாவின் வடகோடியிலுள்ள காஷ்மீரி மொழியிலும் தமிழ்ச் சொற்கள் திரிந்த நிலையில் இருப்பதை சாத்தூர் சேகரன் குறிப்பிட்டுள்ளார். கொச்சா (குச்சி), மா - (அம்மா), சந்தன் (சந்தனம்). இமயமலையின் அடிவாரத்தில் பேசப்படும் மொழிகளில் மாறுபட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று பட்டாச்சாரியா கூறினார்.
- தாகூரின் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் முத்தையா வங்க மொழியில் வாழும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றைச் சொன்னார் முக் (முகம்), காவோ (காகம்), பாத் (பாதை). தமிழராகிய ஏசுதாஸ் பாதிரியார், அஸ்ஸாம் பகுதியில் வேறுபாட்டுடன் வாழும் தமிழ்ச்சொற்களைத் தெரிவித்தார் மேஹ் (மேகம்), குடி (குடிசை), தீப் (தீபம்).
- பல்தேவ் ராஜ்குப்தா என்ற பஞ்சாபி அறிஞர், தன் தாய்மொழியில் வாழும் தமிழ்ச் சொற்களைக் கூறினார் குட் (குதி), அம்மா (அம்மா), மர் (மயில்). ஒடிய மொழியிலுள்ள தமிழ்ச் சொற்கள் சில பனசா (பலாப்பழம்), சந்தன் (சந்தனம்), ஆயி (ஆய் - அதாவது தாய்). கித்வானி என்ற சிந்தி மொழி அறிஞர் அம்மொழியில் அமைந்துள்ள தமிழ்ச்சொற்களை அறிவித்தார், காணோ (கண்), நுருறு (நுதல் = நெற்றி), சிம்டோ (சம்மட்டி). விசுவநாத் கைரே, மராத்திய மொழியில் கலந்துள்ள தமிழ்ச்சொற்களை வெளிப்படுத்தினார் ஹரரா (ஆரல் - கருமணல்), எளி (எள்ளு - இகழ்), குறட்ட (குறு - சிறிய).
- சமயத்துறையிலும் தமிழரின் செயல் முறை இந்தியா முழுவதும் பரவியது. தமிழர் பெரிதும் போற்றிய கடவுள் சிவபெருமான். சிவ வணக்கம் வடநாட்டவரால் ஏற்கப்பட்டது. சிவலிங்க வழிபாடு உள்ள கேதார்நாத் கோயில் சிவலிங்கமும், அமர்நாத் குகை லிங்கமும் பெரும்புகழ் பெற்றவை. ஜோஷிமட்டிலுள்ள படிகலிங்கமும் பல்லோரால் தொழப்படுகிறது.
- பாம்பு வழிபாடு தமிழருக்குரியது. இது இந்திய நாட்டில் பரவியது. இந்தியப் பண்பாட்டுத் துறையிலும் தமிழ் ஆட்சி செய்தது. இந்திய நாகரிகத்தின் எல்லாக் கூறுகளும் திராவிட (தமிழ்) பண்பாட்டையும் மொழியையும் அடித்தளமாக்கிக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று எஸ்.ஏ. டைலர் கூறினார்.
- ஆதி இந்திய நாகரிகத்தை உருவாக்கியவர் திராவிட (தமிழ்) மொழியைச் சார்ந்தவர்கள் என்று கோந்தரதோவ் தெரிவித்தார். வடமொழி பண்பாட்டுக்கு மூலம் தமிழ்நாகரிகமே என்று தேவதத்தி பட்டி அறிவித்தார்.
- அகழாய்வுத்துறையும் சான்று கூற முன் வருகிறது. யோக நிலையில் இருந்த சிந்துவெளிச் சின்னம், இந்தியா முழுதும் பரவி அந்தப் பெருமை முறையை நிலை நிறுத்திவிட்டது. சங்கப் பெண்கள் சங்கு வளையல் அணிந்தனர். வங்காளத்தில், திருமணப் பெண்ணுக்குத் தாலி அணிவதில்லை. சங்கு வளையலே மாட்டப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் கோழிச் சண்டை இன்று இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.
- இலக்கியச் சான்றும் துணைக்கு வருகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஒரு சேர மன்னன் போற்றப்பட்டான். "குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட' என்று சிலப்பதிகார உரைப்பாட்டு உரைக்கிறது. இப்படி பல்வேறு சான்றுகள், ஒரு கால கட்டத்தில் தமிழ்மொழி இந்தியா முழுவதும் பரவி இருந்ததை அறிவிக்கின்றன. இது வியப்பைத் தருகிறது; தமிழுக்கு உயர்வும் வருகிறது; என்றும் தமிழ் வாழும் என்ற நம்பிக்கையும் வளர்கிறது.
நன்றி: தினமணி (12 – 07 – 2023)