குரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்!
- ஆப்பிரிக்காவில் தற்போது வேகமாகப் பரவிவரும் ‘குரங்கு அம்மை’ (Monkey pox) எனும் வைரஸ் தொற்றுப் பரவலை, உலக அளவில் கவலை அளிக்கக்கூடிய பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததை ஒட்டி, உலக நாடுகள் பலவும் மீண்டும் கரோனா தொற்று பரவியதுபோல் பீதியில் உறைந்து கிடக்கின்றன.
- ஆப்பிரிக்க நாடுகளில் 2023 ஜனவரியிலிருந்து இது பரவிவருகிறது. இதுவரை 27,000 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் காங்கோ நாட்டில் மட்டும் 13,700 பேருக்குத் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 4,50 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது இந்தத் தொற்று பாகிஸ்தான் மற்றும் சுவீடன் நாட்டுக்கும் பரவிவிட்டது. வழக்கமாக இது பரவுகிற மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்துவிட்டு, இதுவரை பரவாத நாடுகளிலும் இது பரவிவருவதுதான் இந்தப் பீதிக்கு முக்கியக் காரணம்.
- குரங்கு அம்மை புதிய நோயல்ல. உலகில் இப்படி ஒரு நோய் இருப்பது முதன் முதலில் 1958இல் டானிஸ் ஆய்வகத்தில் இருந்த குரங்குகளிடத்தில் அறியப்பட்டது. அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. 9 வயது பையன்தான் இதற்கு முதல் நோயாளி. 1970இல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் இந்த நோயாளி காணப்பட்டார். 2003இல் அமெரிக்காவில் இது பெரிதாகப் பரவியதை வரலாறு பதிவுசெய்துள்ளது.
- ஆப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இது பரவத் தொடங்கியது அப்போதுதான். என்றாலும்கூட 81 பேருக்கு மட்டுமே இந்த நோய் அப்போது அங்கே பரவியது; இறப்பு எதுவும் இல்லை. இதைத் தொடர்ந்து, 2017இல் நைஜீரியாவில் 172 பேருக்குப் பரவியதுதான் உலகளாவிய பரவலில் இது உச்சம் தொட்டது. 2022க்குப் பிறகு இது 116 நாடுகளில் பரவியுள்ளது. ஏறத்தாழ 99,000 பேரைப் பாதித்துள்ளது. இதுதான் அநேகரையும் அச்சுறுத்துகிறது.
- சமீபத்தில் பாகிஸ்தானின் வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுவிட்டு பாகிஸ்தான் திரும்பியவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து சுவீடன் நாட்டுக்குத் திரும்பிய ஒருவருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் இதுவரை இந்த நோய் தடம் பதிக்கவில்லை என்பது நமக்கெல்லாம் ஓர் ஆறுதல். என்றாலும், பொதுச் சமூகத்தில் சரியான விழிப்புணர்வும் தடுப்பு ஏற்பாடுகளும் முன்னிறுத்தப்பட்டால், குரங்கு அம்மையின் பிடியிலிருந்து தப்பிப்பதும் எளிது.
அரிய வகை அம்மை
- ‘குரங்கு அம்மை’ என்பது மிக அரிய வகை வைரஸ் நோய். இது பெரியம்மையை (Smallpox) ஒத்துப்போகும் நோய். இதைத் தோற்றுவிக்கும் வைரஸுக்குக் ‘குரங்கு அம்மை வைரஸ்’ (Monkeypox virus) என்று பெயர். இந்த வைரஸ் விலங்கினங்களில் காணப்படுவதுதான் வழக்கம். மாறாக, இப்போது இது மனிதர்களுக்கும் பரவுகிறது. உலகச் சுகாதார நிறுவனம் இதைக் ‘குரங்கு அம்மை வைரஸ்’ என்று சொல்வது தவறு என்கிறது; ‘எம்பாக்ஸ்’ வைரஸ் (mpox virus - MPXV) என்றே அழைக்கச் சொல்கிறது.
- இந்தக் கிருமியில் ‘கிளாட் ஒன்’ (Clade I), ‘கிளாட் டூ’ (Clade II) என இரண்டு வகை உண்டு. ‘கிளாட் ஒன்’ வகை பாலுறவின் மூலம் பரவக் கூடியது; அதிக ஆபத்தானது. ‘கிளாட் டூ’ வகைத் தொற்று அதிக ஆபத்து இல்லாதது; நோயாளியுடன் நேரடி தொடர்புகொள்கிறவர்களுக்கு மட்டும் பரவக்கூடியது.
- 2022இல் இது இந்தியாவில் பரவியபோது ‘கிளாட் டூ’ வகை இந்தியாவில் கண்டறியப்பட்டது. அதுவும் அப்போது கேரளாவில்தான் முதன்முதலில் இது அறியப்பட்டது. ஆனால், இப்போது உலக நாடுகளில் பரவும் வகை ‘கிளாட் ஒன்’ வகையில் மரபணுப் பிறழ்வு ஏற்பட்ட ‘கிளாட் ஒன்பி’ (Clade 1b) எனும் துணை வகை. இது பாலுறவு மூலம் மட்டுமல்லாமல், நேரடி தொடர்பு மூலமும் பரவுகிறது. மேலும், இது வேகமாகப் பரவக்கூடியது; அதிக ஆபத்து உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகவேதான், உலகச் சுகாதார நிறுவனம் இந்த நோயை இரண்டாம் முறையாகப் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
அறிகுறிகள் என்னென்ன?
- குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது உடலுக்குள் தொற்று புகுந்த 5லிருந்து 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். குளிர்காய்ச்சல், தலைவலி, தசைவலி, தொண்டை வலி, உடல்வலி, முதுகுவலி போன்றவை தொல்லை தரும். உடற்சோர்வு கடுமையாகும். இந்த அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களில் உடல் முழுவதிலும் சிவப்பு நிறப் புள்ளிகளும் தடிப்புகளும் தோன்றும். அவற்றில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு உண்டாகும். பிறகு அவை கொப்புளங்களாக மாறும். அவற்றில் நீர்கோக்கும். உடலில் பல இடங்களில் நெறிக்கட்டிகள் தோன்றும்.
- பொதுவாக, இந்தத் தொற்று 2லிருந்து 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு கொப்புளங்கள் காய்ந்து பொருக்குகள் உருவாகி உதிர்ந்துவிடும். தானாகவே நோய் குணமாகிவிடும். மிக அரிதாகவே ஆபத்து நெருங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நோய் பல வாரங்கள் நீடிக்கும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது பரவினால் உயிர் ஆபத்து அதிகம்.
பரவுவது எப்படி?
- குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடமிருந்து மற்றொரு விலங்குக்குப் பரவுவதுதான் வழக்கம். முக்கியமாக, அணில்கள், எலிகள், முள்ளம்பன்றி போன்ற கொறித்து உண்ணும் பழக்கம் உள்ள விலங்கினங்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கு இந்த அம்மை நோய் பரவுகிறது. தொற்றுள்ள விலங்குகளோடு நெருங்கியத் தொடர்புகொள்ளும் மனிதர்களுக்கும் இது பரவுகிறது. குறிப்பாக, விலங்குக் கடிகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. விலங்கின இறைச்சிகளைச் சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இது பரவக்கூடும்.
- நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாகப் பழகும்போதும், சருமத்துடன் சருமம் உரசும்போதும் இது அடுத்தவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் காறித் துப்பும்போதும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய ஆடை, துண்டு, போர்வை போன்றவற்றின் வழியாகவும் இது பரவக்கூடும். வியர்வை, கொப்புளநீர், கண்ணீர் போன்ற அவரது உடல் திரவங்கள் மூலமும் காய்ந்த பொருக்குகள் மூலமும் இது அடுத்தவர்களுக்குப் பரவலாம். பாலுறவு மூலமும் இது பரவுவதாகச் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது.
என்ன பரிசோதனை உள்ளது?
- பயனாளியின் சளி, ரத்தம், கொப்புளம் நீர் போன்றவற்றின் மாதிரிகள் எடுத்து ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ (R.T.P.C.R.) பரிசோதனை செய்து இந்த நோயை உறுதிசெய்ய முடியும்.
சிகிச்சை என்ன?
- குரங்கு அம்மைக்கென தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பதே அநேக உலக நாடுகளின் நிலைப்பாடு. இந்த நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வழங்கப்படுவதும், அம்மைக் கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், ஊட்ட உணவுகள் மற்றும் திரவ உணவுகள் தாராளமாக வழங்கப்படுவதும் இப்போதுள்ள முக்கிய சிகிச்சைகள். ஐரோப்பாவில் மட்டும் குரங்கு அம்மைக்கு ‘டெக்கோவிரிமெட்’ (Tecovirimat) எனும் மருந்து பயன்பாட்டில் உள்ளது.
தடுப்பூசி உண்டா?
- பாதிக்கப்பட்டவரையும் அவரோடு தொடர்புகொண்டவர்களையும் 3 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தி உயர் சிகிச்சை அளிப்பது நோய் பரவுவதைத் தடுக்கும் வழிகளில் ஒன்று.
- அதோடு பெரியம்மைக்குச் செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த அம்மைக்கும் பயன்படுத்தினால் 85% பலன் கிடைக்கிறது. 1980இல் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு பெரியம்மைத் தடுப்பூசி செலுத்தப்படுவது உலக அளவில் நிறுத்தப்பட்டது. ஆகவே, 44 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது பரவும் வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முன்னுரிமை தரப்படுகிறது.
- அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘எம்விஏ-பிஎன்’ (MVA-BN), ‘எல்சி 16’ (LC 16), ‘ஆர்தோபாக்ஸ் வேக்’ (Orthopox Vac) எனும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஒன்றை 4 வார இடைவெளியில் இரண்டு தவணைகளில் செலுத்திக்கொள்ள வேண்டும். அம்மை நோயாளியைத் தொடர்புகொள்வதற்கு முன்போ, தொடர்புகொண்ட முதல் நான்கு நாட்களுக்குள்ளாகவோ இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால், குரங்கு அம்மை வருவது தடுக்கப்படுகிறது. ஆனாலும், இது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்னும் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இனிமேல் இது வரக்கூடும்.
நன்றி: அருஞ்சொல் (25 – 08 – 2024)