- ‘நடக்கும் என்பார் நடக்காது’ என்றொரு பாடல் உண்டு. காவிரிப் படுகை உழவர்களைப் பொறுத்தவரை, குறுவைக்கான பயிர்க் காப்பீடு என்பதும் அப்படியாகத்தான் இருக்கிறது.
- 2021-ல் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்யும் தருணத்தில் நிலவிய நெருக்கடிகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யில் 13-08-2021 அன்று கட்டுரை ஒன்று வெளியானது. 2022-லும் குறுவை சாகுபடியில் இந்த நெருக்கடி நீடிக்கிறது. இந்த ஆண்டு குறுவைக்கும் பயிர்க் காப்பீடு இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- இயல்பாகவே காவிரிப் படுகையில் சம்பா சாகுபடியைவிட குறுவை சாகுபடிதான் அதிக பலன் தரும் என்பதை ஆங்கிலேயர்கள் தங்களது ஆவணங்களில் பதிவுசெய்துள்ளனர். மேலும், நெல் சாகுபடியைப் பொறுத்தவரையில் அது எப்போதுமே இயற்கை ஏற்படுத்தும் சகலவிதமான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே பிரிட்டிஷ் காலத்து வருவாய்த் துறை ஆவணங்கள் அளிக்கும் செய்தி.
- பருவம் தவறிய மழையும், பயிர்கள் மூழ்கி அழுகிப்போவதும், கடும் வறட்சியினால் நிலம் பாளம்பாளமாக வெடிப்பதும், நெற்பயிர்கள் பதராகிப் போவதும் அப்போதும் சம்பவித்துள்ளன. ஆனால், விவசாயிகள் மகசூலில் பேரிழப்பைச் சந்தித்தபோது ஆங்கிலேய அரசு தொடர்ந்து வரித் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- சுதந்திர இந்திய அரசும் உழவர்களை இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற அவ்வப்போது பல திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், 1985-ல் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட பயிர்க் காப்பீட்டு திட்டங்கள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக, 2016-ல் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி பசிலி பீமா யோஜனா) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
- இதன்படி பயிர்க் காப்பீட்டு பங்கேற்பு விகிதாச்சாரம் மத்திய, மாநில அரசுகள் தலா 49% எனவும், பயனாளிகள் பங்கேற்பு விகிதாச்சாரம் 2% எனவும் இருந்தது. 2021-ல்மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணப் பங்கு, பாசனப் பகுதிக்கு 25% என்றும், மானாவாரிக்கு 30% என்றும் குறைக்கப்பட்டது.
- 2016-17-ல் மாநில அரசு பிரீமியப் பங்கு ரூ.566 கோடி என்றும், 2020-21-ல் ரூ.1,918 கோடி என்றும் நடப்பாண்டில் ரூ.2,500 கோடி என்றும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த நிதிச் சுமையை மாநில அரசால் தாங்க முடியாது என்றும், மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணம் முந்தைய அளவுக்கே இருக்க வேண்டும் என்றும் 2021-ல் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. 2021 குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு அறவே இல்லாமல் போனது.
- நடப்பு 2022 குறுவை சாகுபடிக்கேனும் 2021-க்குமுந்தைய காலம் போல் பயிர்க் காப்பீடு கிடைத்துவிடும் என்று விவசாயிகள் உறுதியாக நம்பினர். 07-06-2022 அன்று தஞ்சையில் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியது. வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
- இதேபோல் 03-07-2022 அன்று குறுவை தொகுப்புத் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று தமிழக அரசால் மீண்டும் நடத்தப்பட்டது. இதில் வேளாண்துறை இயக்குநரும் கலந்துகொண்டார். இக்கூட்டங்கள் யாவும் 2022 குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை உழவர்களிடம் உருவாக்கின. குறுவை நடவு பருவம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் குறுவைக்கான பயிர்க் காப்பீட்டு திட்ட அறிவிப்பு வரவில்லை.
- வேளாண் தொழில் சந்திக்கும் பெரிய சவால் இயற்கை ஏற்படுத்தும் பேரிடர்களே ஆகும். குறிப்பாக 2010முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குள்ளேயே காவிரிப் படுகை விவசாயிகள் 8 இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டனர். தானே, வர்தா, ஒக்கி, கஜா, பானி உள்ளிட்ட புயல்களால் விவசாயம் படுமோசமான வகையில் பாதிப்புகளைச் சந்தித்தது.
- வழக்கமாக இந்தச் சவால்களோடு கடந்த இரண்டாண்டுகளில் கரோனா பெருந்தொற்றையும் சமாளித்தபடி உழவுத்தொழில் வாகைச் சூடிதான் வருகிறது. உதாரணமாக பொதுவாக குறுவை சாகுபடி நடக்கும் அளவு காவிரி டெல்டாவில் 3.5 லட்சம் ஏக்கர் ஆகும். இதில் தஞ்சாவூர் மாவட்டம் 1.6 லட்சம், திருவாரூர் 1.02 லட்சம், நாகப்பட்டினம் 50,000 ஏக்கர், மயிலாடுதுறை 97,000 ஏக்கர், திருச்சி 12,400 ஏக்கர், கடலூர் 44,000 ஏக்கர், அரியலூர் 12,000 ஏக்கர் என மொத்தம் 4,23,400 ஏக்கரில் குறுவை சாகுபடி நெல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- வரக்கூடிய தகவல்களோ குறுவை சாகுடி அளவு 5.20 லட்சம் ஏக்கரை நெருங்கிவிட்டது எனக் கூறுகின்றன. குறுவைக்குத் தேவையான சிறப்புத் தொகுப்புத் திட்டமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தன் பங்களிப்பை 33% என்பதோடு நிறுத்திக்கொண்டது. மாநில அரசு எதுவுமே சொல்லவில்லை.
- சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் (IFPRI) எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அபாயகரமான பருவநிலை மாற்றங்களால் இந்திய உணவு உற்பத்தி 2030-ல்16% குறையும், பசித்திருப்போர் விழுக்காடு 23% ஆக உயரும் என அது குறிப்பிடுகிறது. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 23 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- தமிழகத்தில் குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு இல்லாமல் போனது குறித்து மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. குஜராத், மகராஷ்ர மாநிலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் நடத்த முன்வராத நிலையில் அந்தந்த மாநில அரசுகளே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. தமிழக அரசிடம் அத்தகு முன்முயற்சிகளும் இல்லை.
- ஆடி மாதம் என்பது காற்றுக்கு மட்டும்தான் பெயர்பெற்றது. இப்போதோ காற்றை விஞ்சி மழைப்பொழிவு இருக்கிறது. எப்போது என்ன பாதிப்பு நடக்குமோ என்ற அச்சமும் பீதியும் விவசாயிகளைப் பீடித்துள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகள் மனக்கலக்கத்தில் இருக்கிறார்கள்.
- குறுவைச் சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் இயற்கை இடர்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கரங்கள், கைவிட்டது ஏன்? இனிவரும் ஆண்டுகளிலும் இதே கதிதான் தொடருமா? தமிழக அரசு வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறது. ஜூன் 12-ல் மேட்டூரில் திறக்க வேண்டிய தண்ணீரை இந்த ஆண்டு முன்கூட்டி மே மாதத்திலேயே திறந்துவிட்டது. ஆனால், விவசாயிகளுக்கு மிகவும் அடிப்படையான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மட்டும் ஏன் தவிர்க்கிறது?
நன்றி: தி இந்து (05 – 08 – 2022)