TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை அவசியமே

December 14 , 2020 1499 days 688 0
  • வேளாண்துறையில் சீா்திருத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
  • மத்திய அரசின் இந்த மூன்று சட்டங்களும் வேளாண் சந்தையில் தனியாரின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து குறுகிய, விளிம்புநிலை விவசாயிகளை அழித்துவிடும் என்பதும், இந்தச் சட்டங்களின் வாயிலாக விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) கூட கிடைக்கப் பெறாமல் போய்விடும் என்பதும் விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டு.
  • விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய மத்திய அரசோ, வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும், பொது விநியோகத் திட்ட நடைமுறைக்கான கொள்முதல் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்றும், விவசாயிகளுக்கு மின் கட்டணத்தின் மீதான மானியம் தொடரும் என்றும் எழுத்துபூா்வமாக உறுதியளித்தது.
  • இதை ஏற்க மறுத்த விவசாயிகள், 23 வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூா்வமாக்கி, மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியாக இருக்கின்றனா். மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஆறு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை, எந்தவித பலனுமளிக்காமல் தோல்வியில் முடிந்தது.
  • தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அதிகப்படியாக அரிசி, கோதுமை கொள்முதல் செய்யப்படும் மாநிலங்களின் பட்டியலில் இந்த இரு மாநிலங்களும்தான் முதல் இரு இடங்களில் இருக்கின்றன.
  • இந்த மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம், விவசாயிகளின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2017-18 , 2018-19 ஆகிய காலகட்டங்களில் பஞ்சாபில் 88 % அரிசி உற்பத்தியும், ஹரியாணாவில் 70 % கோதுமை உற்பத்தியும் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • இதற்கு முரணாக, அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் 44 % அரிசி உற்பத்தி மட்டுமே பொது முகமையால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
  • கோதுமையை எடுத்துக் கொண்டால், அதன் கொள்முதல் சதவீதம் மிகவும் குறைவு. கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மத்திய பிரதேச, உத்தர பிரதேச மாநிலங்களில், கால் பங்குக்கும் குறைவாக, அதாவது 23 % கோதுமை உற்பத்தி மட்டுமே மத்திய அரசால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
  • இதன் மூலம் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பொது விநியோகத் திட்டத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலையையும் எந்த அளவுக்கு சார்ந்திருக்கின்றனா் என்பதை உணரலாம்.
  • இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கொள்முதலை தொடர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஏற்கெனவே நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 80 கோடி போ் பயனடைந்து வருகின்றனா்.
  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூடுதலாக எட்டு கோடி புலம்பெயா் தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை அளிக்க வேண்டியிருக்கிறது. ஆகையால், பொது விநியோகத் திட்டத்தைத் தடையின்றி தொடர வேண்டுமாயின், பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் 40 விழுக்காடும் (45 மில்லியன் டன்), கோதுமை உற்பத்தியில் 32 விழுக்காடும் (34 மில்லியன் டன்) பொது முகமையால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன.
  • கரோனா தீநுண்மி அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, இந்த ஆண்டும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் போதுமான உணவு தானியங்களை கொள்முதல் செய்து மத்திய அரசு இருப்பு வைத்தது. அந்த வகையில், நாட்டில் ஓராண்டில் விளையும் அரிசியில் 49 % அதாவது 58 மில்லியன் டன் அரிசியும், 37 மில்லியன் டன் கோதுமையும் (35 %) சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டன.
  • மத்திய அரசின் பொது விநியோகத் திட்ட நடைமுறையில் பொது முகமைகளுக்குத் தேவையான உள்ளீடுகளை அளிப்பதில் ஹரியாணாவும், பஞ்சாபும் எப்போதும் பிற மாநிலங்களுக்கு முன்னோடிகளாக இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 35 % அரிசியையும், 62 % கோதுமையையும், 50 % கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளத்தையும் இந்த இரு மாநிலங்களும் சப்ளை செய்து பொது விநியோகத் திட்ட நடைமுறையை சம நிலையில் வைத்திருக்கின்றன.
  • எனவே, இந்த இரு மாநிலங்களையும் தவிர்த்து விட்டு இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மத்திய அரசுக்கு நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று.
  • இதனால்தான் நாட்டின் பிற மாநில விவசாய குடும்பங்களைக் காட்டிலும் பஞ்சாபில் விவசாய குடும்பங்களின் சராசரி வருவாய் ஆண்டுக்கு ரூ. 2,16,708 என்கிற விகிதத்தில் இருக்கிறது. ஆயினும், நாட்டில் வெறும் ஆறு விழுக்காட்டு விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையால் பயனடைவதாகவும், எஞ்சிய 94 % விவசாயிகள் அதன் பயனை பெறவில்லை என்றும் சாந்தாகுமார் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
  • இதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன்பாட்டை விளிம்பு நிலை விவசாயிகளுக்கும் கொண்டு சென்று, அதன் அடிப்படையிலான கொள்முதல் தவிர்க்க இயலாதது என்பதை விவசாயிகளிடம் மத்திய அரசு எடுத்துரைத்து, அவா்களது சட்டரீதியான கவலைகளுக்குத் தீா்வு காண வேண்டும். இதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

நன்றி: தினமணி (14-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்