- ‘குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமே தீர்வாகிவிடுமா?’ (06.03.2024) என்கிற தலைப்பில், கருத்துப் பேழை பகுதியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) மட்டுமே தீர்வாகிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். ஆனால், அது இல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
- 2020-21ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விவசாயிகளின் போராட்டத்தை, “இந்திய விவசாயிகளின் எழுச்சி, இந்த உலகுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்” என்று வர்ணித்தார் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி. இப்போது நடைபெறும் போராட்டம் அதன் தொடர்ச்சிதான். அதை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் போராட்டம் என்று சுருக்கிவிட முடியாது.
நடைமுறை நிதர்சனங்கள்
- வேளாண் விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்து, 1980 முதல் நாடு தழுவிய அளவிலும் டெல்லியிலும் பெரும் போராட்டங்களை விவசாயிகள் நடத்திவந்துள்ளனர்.
- அதன் விளைவாகவே, தற்போது 23 வகையான வேளாண் விளை பொருள்களுக்கு அரசு குறைந்தபட்ச விலையை அறிவிக்கிறது. ஆனால், அத்துடன் தனது கடமை முடிந்தது என்று அரசு ஒதுங்கிக்கொள்வதுதான் பிரச்சினை.
- மாறாக, அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறதா, இல்லையா? இல்லையென்றால் விலை அறிவித்து யாருக்கு என்ன பயன்? விலையை அறிவிப்பதால் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரே பலன் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடிவதுதான்.
- குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அறிவிக்கா விட்டால் தனக்குக் கிடைத்ததுதான் விலை என்று விவசாயி கருதிக்கொண்டிருப்பார். விவசாயச் செலவுகள் - விலைகள் ஆணையம் உற்பத்திச் செலவைக் கணக்கில் கொண்டுதான் குறைந்தபட்ச ஆதார விலையைப் பரிந்துரைக்கிறது.
- ஆனால், மத்திய அரசு அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விலையை உயர்த்தி அறிவிப்பதில்லை. மாறாக, கடந்த ஆண்டைவிடச் சிறிதளவு உயர்த்தி அறிவிப்பது என்பதைத்தான் நடைமுறையாக வைத்திருக்கிறது.
தொடரும் கேள்விகள்
- விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கொள்கை மத்திய அரசுக்கு முதலில் இருக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயத்தையும் விவசாயி களையும் சுமையாகத்தான் ஆட்சியாளர்கள் பார்ப்பார்கள்.
- முதலாளிகள் உற்பத்தி செய்யும் பல நூற்றுக்கணக்கான பொருள்களுக்கு நாடு தழுவிய அளவில் ஒரே விலையைத் தீர்மானித்து விற்பனை செய்ய முடிகிறபோது, ஏன் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருள்களுக்கு மட்டும் விலையைத் தீர்மானிக்க முடியாது? நாடு முழுவதும் வேளாண் இடுபொருள்களின் விலையை ஒரே சீராக வைத்து விற்பனை செய்ய முடியாதா? விவசாயத் தொழிலாளர்களின் கூலி தொடர்பான மத்திய சட்டத்தை உருவாக்கி, அவர்களின் கூலியைத் தீர்மானிக்க முடியாதா? இன்றைய நவீன யுகத்தில் உற்பத்திச் செலவு களைக் கணக்கிடுவது சிரமமான விஷயமல்ல.
- ஏற்கெனவே, வேளாண் பல்கலைக்கழகங்கள் உற்பத்திச் செலவு தொடர்பான விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
- குறைந்தபட்ச விலைக்கு விவசாயிகள் சட்டப் பாதுகாப்பு கோருவதன் நோக்கம், அதற்குக் குறைவாக வாங்கினால் குற்றம், குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள், தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை ஏற்படும்போது, இப்போது இருப்பதுபோல் அடிமாட்டு விலைக்கு வாங்குவது என்ற நிலைமை இருக்காது. அதிகத் தேவை ஏற்படும்போது கூடுதல் விலை கிடைப்பதிலும் எந்தச் சிக்கலும் இல்லை.
- பொருளை வாங்கக்கூடியவர்கள் அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்யும்போது, கூடுதல் லாபம் அவர்களுக்குக் கிடைக்கிறது. விவசாயிகளுக்கான ஒரே வருமானம் அவர் உற்பத்திசெய்து விற்கும் வேளாண் விளைபொருள் விற்பனை மூலம் கிடைப்பது மட்டும்தான்.
- அதற்கு இவ்வளவு காலமும் உத்தரவாதம் இல்லாமல் காலம் கடத்தப்பட்டுவந்தது. இப்போது விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு, லாபகரமான விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது.
- அதற்கொரு சிறந்த வழிமுறையை மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் உருவாக்கித் தந்துள்ளார். அதுதான் ‘சி2+50’ என்பது. உற்பத்திச் செலவுக்கு மேல் 50% உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும் என்பது. இதில் அரசுக்கு என்ன கஷ்டம்!
சாரமற்ற வாதங்கள்
- வேளாண் விளைபொருள்களை மூலப்பொருள்களாகக் கொண்டு தொழில் செய்யும் முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசு கவலைப்படுகிறதா? அப்போது விவசாயிகள் நஷ்டப்பட்டால் பரவாயில்லையா? பணக்கார விவசாயிகளுக்கே அது லாபமாக இருக்கும் என்று சிறு-குறு விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் மேற்கண்ட கட்டுரையில் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
- சிறு-குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கம் அரசுக்கு இருக்குமானால், அவர்களுக்கு வட்டியில்லாமல் முன்னுரிமை அடிப்படையில் விவசாயக் கடன் வழங்குவது, இடுபொருள்களை மானிய விலையில் வழங்குவது, கொள்முதல் செய்வதில் முன்னுரிமை, வேளாண் இயந்திரங்களை அரசு குறைந்த வாடகையில் வழங்குவது, முன்னுரிமை என எத்தனையோ வழிகளில் உதவ முடியும்.
- குறைந்தபட்ச விலையைத் தீர்மானிப்பது பணக்கார விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்குமானால், இருந்துவிட்டுப் போகட்டுமே? பெருமுதலாளிகள் பெருங்கொள்ளை லாபம் ஈட்டுகிறார்களே, அது குறித்துப் பொருளாதார அறிஞர்கள் கவலைப்படுகிறார்களா? எம்.எஸ்.பி உறுதிச் சட்டம் இயற்றப்பட்டால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை உருவாக்கும் எனச் சில பொருளாதார அறிஞர்கள் கூறிவருகிறார்களாம்.
- அந்த மேதைகள் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கலாமே! சாந்தகுமார் குழுவின் அறிக்கை ரேஷன் கடைகளை நம்பியிருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கு எதிரானது.
- உணவுக்காக மக்கள் தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்க வேண்டும், இல்லையேல் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் அறிக்கை அது. அதனால்தான் அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில், ரேஷன் கடைகள் பூட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் ஊழியர்கள் வேலையின்றியும், சம்பளமின்றியும் தவிக்கின்றனர்.
- அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ‘அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955’இல் மோடி அரசு திருத்தம் கொண்டு வந்தது; விவசாயிகளின் போராட்டம் காரணமாக அது திரும்பப் பெறப்பட்டது.
- இதெல்லாம் வரலாறு. நெல், கோதுமை இரண்டையும் அரசு கொள்முதல் செய்யாமல் போனால், ரேஷன் கடைகளுக்கு எங்கிருந்து அரிசியும் கோதுமையும் வரும்? எம்.எஸ்.பி-க்குச் சட்ட உத்தரவாதம் என்கிற கோரிக்கை மிக முக்கியமானது; அத்தியாவசியமானது.
- அதை ஏற்றுக்கொண்டு, சட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு குழுவை அமைப்பதாக அரசு வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இப்போதைய போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை.
- அத்துடன், கொள்முதல் உத்தரவாதம்; ஒருமுறை அனைத்துக் கடன்களிலிருந்தும் விவசாயிகளை விடுவிக்க வேண்டும்; மின்சாரச் சட்டம் 2023ஐத் திரும்பப் பெற வேண்டும்; இடுபொருள்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கைகளாகும். அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்போது விவசாயிகளின் துயரங் களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
- எம்.எஸ்.பி உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்டால், உலக வர்த்தக அமைப்பு நம்மை எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்கிறார் கட்டுரையாளர். உலகின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவை மற்ற நாடுகள்தான் சார்ந்து இருக்கின்றனவே தவிர, இந்தியா மற்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைமை இல்லை.
- நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்கு எதிராக அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உலக வர்த்தக அமைப்பு இருக்குமானால், அதிலிருந்து வெளியேறவும் இந்தியா தயங்கக் கூடாது. எனவே, குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதச் சட்டம் தவிர்க்கவே முடியாத ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2024)