- அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.75 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகளும் பதிவாயின. இது கடந்த 2017-இல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளைக் காட்டிலும் குறைவாகும். கடந்த தேர்தலின் போதும் இதே 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
- தொழிற்சாலைகள் நிறைந்த நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. கட்ச் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த காந்திதாம் தொகுதியில் 47.8 சதவீத வாக்குகளே பதிவாகின. ஆனால் அதிகப்படியான கிராமங்களைக் கொண்ட தேதியபடாவில் 82.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இத்தகைய நிலை அண்மைக்காலமாக அனைத்து தேர்தல்களிலும் நிலவுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் இதே நிலைதான். இம்மாநிலத்தின் சிம்லா தொகுதியில் 2017 தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 62.53 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
- எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வாக்குப்பதிவும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. ஆனால் வாக்குப்பதிவுக்குப் பின்னர் எழுத்தறிவுக்கும், வாக்குப்பதிவுக்கும் தொடர்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
- நாட்டில் 18.33 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்த நிலையில் 1952-இல் நம்நாடு முதல் பொதுத்தேர்தலைச் சந்தித்தபோது 44.87 சதவீத வாக்குகள் பதிவாயின. அன்றைய தேர்தலில் திருப்தியளிக்கும் வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அமைந்திருந்தது.
- ஆனால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 74.04 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 67.40 சதவீத வாக்குகள் பதிவாயின. 2021-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாயின.
- தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 64.71 சதவீத எழுத்தறிவுடன் கடைசி இடத்திலிருந்த தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகளும், 90.33 சதவீத எழுத்தறிவுடன் இரண்டாமிடத்தில் இருந்த சென்னை மாவட்டத்தில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- எழுத்தறிவு பெற்றோர், வசதி படைத்தோர் வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே வாக்குப்பதிவு குறைந்து வருகிறது. சென்னை மாவட்டம் 100 சதவீதம் நகர்ப்புற பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் 82.67 சதவீதம் கிராமப்புற பகுதியாகவும், 17.33 சதவீதம் நகர்ப்புற பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
- அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல், அரசியல் பற்றிய தெளிவு, கட்சிகளின் கொள்கை, கோட்பாடுகள் பற்றிய புரிதல் ஆகியவை நகர்ப்புற வாக்காளர்களிடையே இருந்தாலும் வாக்களிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதில்லை. நகர்ப்புறங்களில் வாக்களிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், தாங்கள் வாக்களிப்பதால் எவ்வித மாறுதலும் ஏற்படப் போவதில்லை என்று பலர் எண்ணுவதாகும்.
- பதிவாகும் லட்சக்கணக்கான வாக்குகளில் தனது ஒரு வாக்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எண்ணுகின்றனர். இதுபோன்று அனைவரும் எண்ண ஆரம்பித்துவிட்டால் வாக்குரிமை அளித்திருப்பதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. ஒரே ஒரு வாக்கிற்கும் மிகப்பெரிய சக்தி உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது காண முடியும்.
- நாட்டைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அதிகளவில் வாக்களிப்பதில்லை. இவர்கள் வாக்களிக்காததால் இவர்களைப் பற்றி ஆட்சிக்கு வருவோரும் கவலைப்படுவதில்லை. அதனால் இவர்கள் வாக்களிப்பதிலிருந்து தொடர்ந்து விலகியே இருக்கின்றனர். இத்தகைய வட்டம் அண்மைக்கால தேர்தல்களில் உருவாகியுள்ளது.
- நகர்ப்புற வாக்காளர்கள் பற்றி அரசியல் கட்சிகள் கவலைப்படாததற்கு மற்றொரு காரணம் கிராமப்புற மக்களிடையே காணப்படும் அதீத ஆர்வம்தான். இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் வசிப்பதாலும், வாக்களிப்பின் மீதான அவர்களின் அதீத ஆர்வத்தாலும் அரசியல் கட்சிகள் கிராமப்புற வாக்காளர்களை குறிப்பாக பெண் வாக்காளர்களை கவர்வதில் கவனம் செலுத்துகின்றன.
- 1971 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் கிராமங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களின் வாக்களிப்பு 6 சதவீதமும், ஆண்களின் வாக்களிப்பு 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- வாக்களிக்கும் தகுதிபெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வாக்களிக்கும் வயதை எட்டியதும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்யும் ஆர்வம் கிராமப்புற மக்களிடையே இருக்கின்ற அளவுக்கு நகர்ப்புற மக்களிடம் இருப்பதில்லை.
- வாக்களிக்கத் தகுதிபெற்ற, 18 வயது நிறைவடைந்த எத்தனையோ பெண்கள் வாக்காளராகப் பதிவு செய்யாமல் இருப்பதும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு விடுபட்டுப் போன பெண் வாக்காளர்கள் என்பது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 38 ஆயிரம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- பொருளாதார ரீதியாக முன்னேறிய, கல்வியறிவு அதிகம் உள்ள நகரங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பது வருத்தமான ஒன்றாகும். தேர்தல் ஆணையத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகர்ப்புறங்களையே அதிகம் மையப்படுத்தி உள்ளன. ஆயினும் வாக்குப்பதிவு குறைவாக இருப்பது முரணாக உள்ளது.
- தேர்தலில் வாக்களிப்பதில் முதியவர்கள் அளவிற்கு இளைஞர்களோ முதன்முறை வாக்காளர்களோ ஆர்வம் காட்டுவதில்லை. கிராமங்களில் வசிப்போரிடம் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை எனும் எண்ணம் உள்ளது.
- மேலும், கிராமப்புற வாக்காளர்கள் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதியின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால் நகர்ப்புற வாக்காளர்களிடம் இத்தகைய நம்பிக்கையைக் காண இயலாது.
- இதற்கு நகர்ப்புறங்களில் வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படைத் தேவைகள் எவ்வித கோரிக்கையும் இன்றி நிறைவேற்றப்படுவது தான் காரணமாகும். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாதபோதும் நகர்ப்புறங்களில் எந்த திட்டமும் தடைபடவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது திட்டங்கள் முடங்கிவிடுகின்றன.
- வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டுமெனில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை பள்ளிகளில் இருந்தே தொடங்க வேண்டும். 18 வயதை எட்டிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை சோதனை அடிப்படையிலாவது கட்டாயமாக்கலாம்.
நன்றி: தினமணி (08 – 12 – 2022)