TNPSC Thervupettagam

குறைந்து வரும் கருவளம்: பாதிப்பும் தீர்வும்!

June 17 , 2024 208 days 245 0
  • இந்தியாவில் குழந்தைப்பேறு வருடந்தோறும் குறைந்துவருவதாக ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்விதழ் தெரிவிக்கிறது. ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் ‘மொத்தக் கருவுறுதல் விகிதம்’ (Total Fertility Rate - TFR) எனப்படுகிறது. இது ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும். இது 1950இல் இந்தியாவில் 6.18 ஆக இருந்தது. 2021இல் 1.91 ஆகக் குறைந்துவிட்டது. மேலும், இது 2050இல் 1.3 ஆகவும், 2100 இல் 1.04 ஆகவும் குறையக்கூடும் என்கிறது இந்த ஆய்விதழ்.
  • நாட்டில் மக்கள்தொகை நிலையாக இருக்க, ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும். இது ‘மாற்று நிலை’ (Replacement level) எனப்படுகிறது. இறக்கும் மக்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று சொல்லும் விகிதம் இது. இந்தியாவில், இதன் அளவு 2.1 ஆக இருக்க வேண்டும். இப்போது இந்த அளவு குறைந்துவிட்டதால், இனி மக்கள்தொகையும் குறைந்துவிடும்.
  • ‘தி லான்செட்’ ஆய்விதழின்படி, இந்தியாவில் 1950இல் 1.6 கோடிக்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2021இல் 2.24 கோடியாக உயர்ந்தது. இருப்பினும், அதற்குப் பிறகு இது குறையத் தொடங்கியது. அதன் அடிப்படையில், 2050இல் பிறப்புகளின் எண்ணிக்கை 1.3 கோடியாகவும் 2100ல் 0.3 கோடியாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல்:

  • இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் மொத்தக் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. 1950இல் சர்வதேசக் கருவுறுதல் விகிதம் 4.84 ஆக இருந்தது. இது 2021இல் 2.23 ஆகக் குறைந்தது. மேலும், இது 2100இல் 1.59ஆகக் குறையும் என்று 2021இல் நடத்தப்பட்ட உலகளாவிய நோய்ச் சுமை (GBD) - ஆபத்துக் காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) தலைமையிலான ஓர் ஆய்வும் சுட்டிக்காட்டியுள்ளன. 2050இல், சர்வதேச அளவில் முக்கால்வாசி நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆதரிக்கும் அளவுக்குக் கருவுறுதல் விகிதம் இருக்காது என்று இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • உலகின் 204 நாடுகளில் 155 நாடுகள் 2050இல் மக்கள்தொகை மாற்று நிலையைவிடக் குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டிருக்கும் என்றும், இது 2100இல் 198 நாடுகளாக அதிகரிக்கும் என்றும் மேற்சொன்ன ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் சர்வதேச அளவில் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

பிளவு காணும் உலகம்:

  • இந்தக் கருவுறுதல் ஆய்வானது, மக்கள்தொகையின் அடிப்படையில் உலக நாடுகளை இரு கூறுகளாகப் பிரிக்கிறது. 1950இல், உலகளாவிய பிறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் (Oceania) நிகழ்ந்தன. இருப்பினும், தற்போது இந்தச் செறிவு துணை-சஹாரா ஆப்ரிக்க நாடுகளுக்கு மாறியுள்ளது.
  • இந்த ஆய்வின்படி, உலகெங்கிலும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பிறப்புகளின் விகிதம் 2021இல் 18 சதவீதமாக இருந்தது. இது 2100இல் 35 சதவீதமாக அதிகரிக்கும். 2100இல், பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று துணை-சஹாரா ஆப்ரிக்காவில் பிறக்கும். பிறப்புகளின் விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் ‘மக்கள்தொகை ரீதியாகப் பிளவுபட்ட உலகத்துக்கு’ வழிவகுக்கும். அதிக வருமானமுள்ள நாடுகள் வயதானவர்களின் எண்ணிக்கை கூடுவதால் நோய்ச்சுமை கூடுவதை எதிர்கொள்ள வேண்டும்; இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதால், பணியாளர்கள் கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும். அதேவேளை, குறைந்த வருமானமுள்ள நாடுகள் அதிகப் பிறப்புகள் காரணமாக வளர்ச்சிக்குத் தேவையான உணவு, குடிநீர், எரிபொருள் போன்ற வளங்கள் கிடைப்பதற்குப் போராடும்.

வீழ்ச்சிக்கான காரணங்கள்:

  • உலகெங்கிலும் பெண்களுக்கான கல்வி மேம்பட்டதும், நவீனக் கருத்தடை முறைகளும், நகரமயமாக்கலும் கருவுறுதல் விகிதங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. வாழ்க்கைச் செலவுகளும் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளும் ரொம்பவே அதிகரித்துள்ளதால், தனிநபர்கள் சிறு குடும்பங்களையே விரும்புகிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிவரும் இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சவாலாக இருப்பதால், பணிக்குச் செல்லும் பெண்கள் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவது இயல்பாகிவிட்டது. சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் பெண்களுக்குத் திருமண வயது தாமதமாவதையும் காண்கிறோம். இந்தியாவில் பருவப் பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு, இவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்கும் வயதில் குழந்தை பெறுவதில்லை. முதல் கர்ப்பத்தின் சராசரி வயது முன்பு 20ஆக இருந்தது. இப்போது அது 30ஆக அதிகரித்துள்ளது.
  • ஆண்களுக்கு இணையாக அனைத்துப் பணிகளிலும் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. நிறுவனங்களில் வழங்கப்படும் நள்ளிரவைத் தாண்டிய பணிகளும், எல்லை மீறிய இலக்குகளும், அந்த இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கைமுறைகளும், அதிக மன அழுத்தம் தரும் பணிச் சுமையும், உறக்கம் குறைந்த இரவுகளும், அதிகரிக்கும் உளவியல் சிக்கல்களும், பாலியல் வன்முறைகளும் குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வத்தைத் தம்பதியினரிடம் குறைத்துவிடுகின்றன. கருவுறுதல் விகிதம் குறைந்ததற்குக் காலநிலை மாற்றமும் ஒரு காரணம். வழக்கத்துக்கு மாறான வெப்ப அலைகளால் கருவளம் குறைந்துவிடுகிறது என்கிறது இந்த ஆய்வு.

பாதிப்புகள் என்னென்ன?

  • இந்தியாவைப் பொறுத்தவரை, 2050-க்குள் மக்கள்தொகையில் முதியோரின் பங்கு 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். அதாவது, ஐந்தில் ஒருவர் முதியவராக இருப்பார். இது தேசிய சுகாதாரக் காப்பீட்டைப் பாதிக்கக்கூடும். மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், தேசிய சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் சுமையைக் கூட்டும். உழைக்கும் மனித வளம் குறையும். குறிப்பாக, இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியில் சிக்கலை உண்டாக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் மாற்றம் நிகழ இது வழிவகுக்கும். பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை குறையும்.

என்ன செய்யலாம்?

  • “இந்தச் சவால்கள் இந்தியாவுக்கு ஏற்பட இன்னும் சில தசாப்தங்கள் ஆகும் என்று அரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது” என்கிறார், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான பூனம் முத்ரேஜா. “இவற்றைச் சமாளிப்பதற்கு இப்போதே திட்டமிட வேண்டும். எதிர்காலத்துக்கான விரிவான அணுகுமுறைகள் தேவை. அதற்காக, அனைவரையும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் அதிகமான குழந்தைகளைப் பெறுவது பெரும்பாலான குடும்பங்களுக்குப் பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்றது. ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் கருவுறுதல் சவால்களைச் சமாளிக்கும் வகையில், குழந்தைப் பராமரிப்புக்குக் குறைந்த செலவில் ஏற்பாடுகள் செய்கின்றன. குழந்தைகள் சுகாதாரத்தில் அரசுகள் அதிகம் முதலீடு செய்து சாமானியக் குடும்பங்களை ஆதரிக்கின்றன. தென் கொரிய அரசு குழந்தைப்பேறு தொடர்பான அத்தனை செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவும் இதைப் பின்பற்றலாம்” என்கிறார் அவர்.
  • மேலும், “கருவுறுதல் விகிதங்கள் வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். முக்கியமாக, தனிமனித வருமானத்தைப் பெருக்குவது, அனைவருக்குமான பணி வாய்ப்புகளைப் பெருக்குவது, பணிப்பாதுகாப்பு, பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது, பாலின பேதத்தைத் தவிர்ப்பது, கல்வியறிவு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் போன்ற கருவளம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் திட்டங்கள் தேவை” என்கிறார் பூனம் முத்ரேஜா.
  • இது மிகவும் முக்கியமானது. தனிக் குடும்ப வாழ்க்கையில், கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில், வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் ஆண்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் தாய்மையைச் சுமையின்றி நிர்வகிக்க முடியும்; கருவுறுதலை விரும்பி ஏற்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்