- தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகப் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 9 ஆகக் குறைந்திருப்பது, குழந்தைகள் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டுக் குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. 2020 தரவின்படி தேசியச் சராசரியைவிட (28) தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் (13) குறைவு என்பதும் தமிழகத்தில் குழந்தைகள் நலக் கொள்கைகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருவதை உணர்த்துகிறது.
- கேரளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் 6 ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம் 2007 முதல் சீரான வேகத்தில் குறைந்துவந்துள்ளது. 2007இல் ஆயிரம் குழந்தைகளுக்கு 35 குழந்தைகளாக இருந்த இறப்பு விகிதம், படிப்படியாகக் குறைந்து 2017இல் 16ஆக மாறி, தற்போது 9ஆகக் குறைந்திருக்கிறது.
- அதேபோல் பிரசவத்தின்போது நிகழும் குழந்தைகளின் இறப்பும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 48 என்கிற அளவில் குறைந்திருக்கிறது. இதுவும் தேசியச் சராசரியைவிடக் குறைவு. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டங்களே இதற்குக் காரணம்.
- சில மாதங்களுக்கு முன் சென்னையில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவைத் தொடங்கிவைத்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குழந்தைகள் நலன் தொடர்பாக ஆறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள், பிரசவ நேரச் சிக்கல்களால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கே சென்று ஆய்வு செய்யும் திட்டமும் அவற்றில் ஒன்று.
- இதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பணியாளர்களும் அங்கன்வாடிப் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுபோன்ற தொடர் கண்காணிப்புகளும் பச்சிளங்குழந்தைகளின் இறப்புவிகிதம் குறைவதற்குக் காரணம்.
- பச்சிளங்குழந்தைகள் தாய்ப்பால் பற்றாக்குறையால் வாடுவதைத் தவிர்க்கச் சில அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மிக அதிகமான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச்செய்வதில் தமிழகம் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு மேம்பாடு காரணமாகப் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
- கர்ப்பிணிகளின் எடை அதிகரிப்பு, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பல மாவட்டங்களில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தைப் பிறப்பு நிகழ்கிறது. பிரசவ நேரச் சிக்கல்களை உடனுக்குடன் கையாள்வதாலும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறக்கின்றன.
- பிரசவத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சுவாசம் தொடர்பான வேறு சில கோளாறுகள் போன்றவையே பச்சிளங்குழந்தைகளின் இறப்புகளில் 60 சதவீதத்துக்குக் காரணமாக அமைகின்றன. எடை குறைவாகப் பிறப்பது, கருவிலேயே வளர்ச்சி குறைவாக இருப்பது, தீவிரத் தொற்று போன்றவையும் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் ஆபத்துக் காரணிகள்.
- அரசு இவற்றைக் கருத்தில்கொண்டு இவற்றுக்கான சிகிச்சைமுறைகளையும் வரும்முன் கண்டறிந்து தவிர்க்கும் வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும். 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை அரசு உறுதிசெய்து கண்காணிக்க வேண்டும்.
- கர்ப்பிணிகள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனரா, அவர்களுக்குத் தடுப்பூசியும் மாத்திரைகளும் போதிய இடைவெளியில் அளிக்கப்படுகின்றனவா என்பதையும் அரசு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். காரணம், தாயின் ஆரோக்கியக் குறைவு வயிற்றில் வளரும் குழந்தையை நேரடியாகப் பாதிக்கும்.
- குழந்தை பிறந்த பிறகு செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகள் விடுபடல் இன்றிச் செலுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பச்சிளங்குழந்தைகள் இறப்பு முற்றிலுமாக ஒழிக்கப்படுவதுடன் தாய் - சேய் நலன் காக்கப்படுவதும் அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 07 – 2024)