- ஆண்டுதோறும் மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தால், இந்திய குற்றங்கள் அறிக்கை வெளியிடப்படுகிறது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2017-க்கான இந்திய குற்ற அறிக்கை வெளியிடப்பட்ட மூன்றாவது மாதத்திலேயே, கடந்த வாரம் 2018-க்கான இந்திய குற்றங்கள் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த அறிக்கையைப்போல், காலதாமதமாக வெளிக்கொணராமல் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கியதற்கு மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தைப் பாராட்ட வேண்டும்.
மகளிர் பாதுகாப்பு
- மகளிர் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகி இருப்பது, இந்திய குற்றங்கள் அறிக்கை 2018-இல் குறிப்பிட வேண்டிய அம்சம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குகளின் தண்டனை விகிதம் 50% அளவை எட்டியிருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும், அதே அளவிலான தண்டனை அளவு மகளிருக்கு எதிரான குற்றங்களில் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
- பாலியல் குற்றங்களில் 27% வழக்குகள்தான் தண்டனையில் முடிந்திருக்கின்றன. அதேபோல, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. 85% பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பெருமிதப்படலாம். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வெறும் 13.3% வழக்குகளில்தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன என்பது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அப்பாவிப் பெண்களுக்கு வழங்கப்படும் அநீதி.
- பாலியல் வன்கொடுமை வழக்குகளில், முன்பு போல் அல்லாமல் அதிவிரைவாகச் செயல்பட்டு குற்றத்தைப் பதிவு செய்வதால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடுவதில்லை. பதிவு செய்யப்பட்ட 10 வழக்குகளில் 7 வழக்குகளில் பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது காவல் துறையும், அரசு வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் வழக்குகளை முன்வைக்கவில்லை என்பதைத்தான் எடுத்துரைக்கிறது.
இந்தியக் குற்றங்கள் அறிக்கை
- இந்திய குற்றங்கள் அறிக்கையின்படி, 94% பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாக அறிமுகமானவர்களாக இருப்பது, வழக்குகள் விடுதலையில் முடிவதற்கு முக்கியமான காரணம். வழக்கு விசாரணை உடனடியாக முடிக்கப்படாமல் தொடரும்போது, குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது அழுத்தம் செலுத்துவது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
- 2017-இல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது என்பதை இந்திய குற்றங்கள் அறிக்கை 2018 வெளிப்படுத்துகிறது.
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொல்லப்படுவது 30% அதிகரித்திருக்கிறது. உன்னாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் எதிர்கொண்ட சவால்கள் எந்த அளவுக்கு பாதுகாப்புக் குறைபாடு காணப்படுகிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
குற்ற வழக்குகள்
- இந்திய குற்றங்கள் அறிக்கையின்படி, மிக அதிகமான குற்ற வழக்குகள் கேரளத்திலும், தலைநகர் தில்லியிலும் பதிவாகியிருக்கின்றன. கேரளத்தில் லட்சம் பேருக்கு 1,463.2 வழக்குகளும், தில்லியில் லட்சம் பேருக்கு 1,342.5 வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன என்பதிலிருந்து இந்த இரண்டு மாநிலங்களிலும் காவல் துறை விரைந்து செயல்பட்டு வழக்குகளைப் பதிவு செய்வது வெளிப்படுகிறது. அதேபோல வழக்குகளை விரைந்து நடத்தி, தண்டனை பெற்றுக் கொடுப்பதிலும் கேரளமும், யூனியன் பிரதேசமான தில்லியும் முன்னிலை வகிக்கின்றன.
- தேசிய அளவில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இந்த அளவு 66% அதிகரித்திருக்கிறது. தில்லியில் 20.8% குறைந்திருப்பதற்கு 2012 நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும், விழிப்புணர்வும் முக்கியமான காரணமாக இருக்கக் கூடும்.
2017 இந்திய குற்றங்கள் அறிக்கையில், கடந்த ஆண்டு அறிக்கையைப் போலவே, வடகிழக்கு மாநிலங்களில் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. ஜார்க்கண்ட், ஹரியாணா இரண்டு மாநிலங்களிலும் கவலை அளிக்கும் விதத்தில் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
- வன்முறை, கலவரங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளும், மத - ஜாதிக் கலவரங்கள், அரசியல் வன்முறை உள்ளிட்டவையும் பெரிய அளவில் 2018-இல் அதிகரிக்கவில்லை. ஆனால், தொழில்துறை தொடர்பான வன்முறைகளும், தனிப்பட்ட பிரச்னைகளால் உருவாகும் குற்றங்களும் சற்று அதிகரித்திருக்கின்றன.
விரைவு நீதிமன்றங்களைவிட வழக்கமான நீதிமன்ற விசாரணைகளில் தீர்ப்புகள் வழங்கும் விகிதம் அதிகமாக இருப்பது வியப்பளிக்கிறது. பதிவு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்டனைகளும் வழங்கப்படும்போதுதான் காவல் துறையும் நீதித்துறையும் முறையாகச் செயல்படுகின்றன என்று கருத முடியும்.
விரைவு நீதிமன்றங்கள்
- விரைந்து தண்டனைகள் வழங்கும்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும். விரைவு நீதிமன்றங்களிலேயே ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் 21.5%-ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விசாரணையில் இருக்கும் வழக்குகள் 17%-ஆகவும் இருக்கும் நிலையில், குற்றங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
- குற்றங்கள் அறிக்கையின் புள்ளிவிவரங்கள் நீதிபரிபாலனத்தை மேம்படுத்தாமல் போனால், அவை வீண் முயற்சி... வெற்றுக் காகிதம்!
நன்றி: தினமணி (18-01-2020)