TNPSC Thervupettagam

குற்றம்சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

November 15 , 2024 7 hrs 0 min 11 0

குற்றம்சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

  • வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவது தள்ளிவைக்கப்படுவது அதிகரித்துவரும் சூழலில், ‘குற்றம்சாட்டப்படுபவர் கோரும் பிணை ஒருநாள் தாமதிக்கப்பட்டாலும், அது அவரது அடிப்படை உரிமையைப் பாதிக்கக்கூடியதாகும்’ எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
  • சட்ட நடைமுறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் தீர்ப்பு இது! இந்திய நீதித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்களை ‘தக்ஷ்’ (Daksh) என்னும் அமைப்பு முன்வைத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2021-2022 நிலவரப்படி 1,24,682 பிணை மனுக்கள் நிலுவையில் இருந்ததாக இவ்வமைப்பு கூறுகிறது.
  • பிணை மனுக்களை நிலுவையில் வைக்கும் உயர் நீதிமன்றங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆகியவை முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. பிணை மனுக்கள் முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா, நிராகரிக்கப்பட்டனவா என்றுகூட ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள முடியாத அளவுக்குத் தெளிவற்ற நிலை நிலவுவதாகச் சொல்கிறது தக்ஷ்.
  • நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி நிற்பதும், ஆண்டுக்கணக்கில் தொடர்வதும் அடுத்த சிக்கல். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2022இல் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் 76 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இந்த நிலையில்தான், வாஜித் என்பவர் தொடுத்த ஒரு வழக்கு, நவம்பர் 8 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வாஜித் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்கில், பிணை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் பிணைக்கு விண்ணப்பித்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ‘பிணை குறித்து முடிவெடுக்கப்படுவது காரணமே இல்லாமல் தள்ளிவைக்கப்படுகிறது. இது எனது சுதந்திரத்தையும் உரிமையையும் கேள்விக்கு உள்படுத்துவதாக உள்ளது’ என வாஜித் தரப்பில் முறையிடப்பட்டது.
  • உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், ‘வாஜித் பிணை மனு மீண்டும் விசாரணைக்கு வரும் நாளிலிருந்து இரு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக் கைதியாக ஒரு நாள் கூடுதலாகச் சிறையில் வைத்திருப்பினும், அது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்தான்’ என அறிவுறுத்தியுள்ளது.
  • குற்றம்சாட்டப்பட்டவர் தப்பிச்செல்வதற்கோ, சாட்சியங்களைக் கலைப்பதற்கோ வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே பிணை மறுக்கப்படலாம் எனவும், வழக்கு ஆவண சாட்சியங்கள் தொடர்பானவை எனில், பிணையில் விடுவிக்கப்படுவது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறை எனவும் ஏற்கெனவே டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி போன்றவர்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஏற்கெனவே கூறியுள்ளன. இந்தப் பின்னணியில், பிணை குறித்து முடிவே எடுக்கப்படாதது பொறுத்துக்கொள்ள முடியாதது என்பதைத் தற்போது உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்த்திவிட்டது.
  • வாஜித் வழக்கில் பிணை உரிமையை உறுதிப்படுத்தியுள்ள பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான், ஆகஸ்ட், 2024இல் ‘டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எதிர் அமலாக்கத் துறை’ வழக்கிலும் அவருக்குப் பிணை மாதக் கணக்கில் தாமதிக்கப்படுவதைக் கண்டித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
  • அரசமைப்புச் சட்டத்தின் 21ஆம் கூறு முன்வைக்கும் விரைவான விசாரணைக்கான உரிமையையும் இவ்விரு நீதிபதிகளும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்படும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற நடவடிக்கை, தனிமனிதச் சுதந்திரத்தைக் காப்பதுடன், சிறைகளில் அளவுக்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்படும் நெருக்கடிக்கும் தீர்வாக அமையும். குற்றம்சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்