TNPSC Thervupettagam

குழந்தைகளிடம் அதிகரிக்கும் புற்றுநோய்

August 31 , 2024 137 days 151 0

குழந்தைகளிடம் அதிகரிக்கும் புற்றுநோய்

  • காலரா, மலேரியா, பெரியம்மை, போலியோ போன்ற தொற்று நோய்கள் 20 ஆம் நூற்றாண்டில் நம்மை அச்சுறுத்தி வந்தன. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தொற்று நோய்களின் தாக்கம் வெகுவாகக் குறைந்து தொற்றா நோய்கள் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன.
  • குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளன.
  • புற்றுநோய் வந்தோருக்கான பதிவறிக்கையின்படி, இந்தியாவில் கண்டறியப்படும் ஒட்டுமொத்தப் புற்றுநோயாளர்களில் 4% பேர் 14 வயதுக்குள்பட்டோராக உள்ளனர். பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளிடம் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்படுகிறது.
  • இதில் லுகேமியா (ரத்த மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய்), பர்கிட் லிம்போமா (நிணநீர் மண்டலப் புற்றுநோய்), ஹாட்ஜ்கின் லிம்போமா (வளர் இளம் பருவத்தினருக்கு அதிகம் ஏற்படும் நிணநீர் மண்டலப் புற்று நோய்), ரெட்டினோ ப்ளாஸ்டோமா (கண் விழிப்படலப் புற்றுநோய்), வில்ம்ஸ் புற்றுநோய் (சிறுநீரகம் சார்ந்த புற்றுநோய்) லோ கிரேடு க்ளையோமா (குறைவான வேகத்தில் வளரும் மூளைப் புற்றுக் கட்டி) போன்ற புற்றுநோய்களால் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
  • மேற்கூறிய புற்றுநோய்கள் குழந்தைப் பருவத்தினருக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 50-60% ஆகும். இந்தப் புற்றுநோய்களை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

லுகேமியா:

  • லுகேமியா என்பது எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்த செல்களில் ஏற்படும் புற்றுநோய். நமது உடலில் உள்ள எலும்புகளினுள் எலும்பு மஜ்ஜை உள்ளது. இதிலிருந்து ரத்த செல்கள் உற்பத்தி செய்யத் தேவையான ஸ்டெம் செல்கள் (குருத்தணு செல்கள்) உருவாகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் இரண்டு வகைகளில் உருவாகின்றன.
  • முதல் வகை மயலாய்டு ஸ்டெம் செல்கள், இவை முதிர்ச்சி அடைந்து மயலோப்ளாஸ்ட் ஆகின்றன. இவற்றில் இருந்துதான் உடலில் சிவப்பணுக்கள், ஈசினோஃபில்கள், நியூட்ரோ ஃபில்கள், பேசோஃபில்கள், ப்ளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் உருவாகின்றன.
  • இரண்டாம் வகை, ஸ்டெம் செல்களான லிம்பாய்டு ஸ்டெம் செல்கள். இவற்றிலிருந்து லிம்போ ப்ளாஸ்ட்டுகள் உருவாகின்றன. இந்த லிம்போ ப்ளாஸ்டுகள் முதிர்ச்சி அடைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வெள்ளை அணுக்கள் உண்டாகின்றன.
  • குழந்தைகளிடையே ஏற்படும் லுகேமியாவில், தீவிர லிம்போப்ளாஸ்டிக் லுகேமியாதான் (Acute lymphoblastic leukemia ) அதிகம். இதில் லிம்போ ப்ளாஸ்ட் செல்கள் மிக அதிகமாக உற்பத்தியாகி ஏனைய செல்களான சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை முறையாக உற்பத்தி ஆக விடாமல் செய்துவிடுகின்றன. இதே போன்று மயலோ ப்ளாஸ்ட் செல்கள் மிக அதிகமாக உற்பத்தி ஆவதைத் தீவிர மயலாய்ட் லுகேமியா (Acute myeloid leukemia) என்கிறோம்.
  • தீவிர எலும்பு வலி, மூட்டு வலி, தாங்கித் தாங்கி நடப்பது, ரத்த சோகையால் நாக்கும் தோலும் வெளிறிப் போவது, உடல் சோர்வு போன்றவை இதன் அறிகுறிகள்.
  • எதிர்ப்பு சக்தி குன்றுவதால் அடிக்கடி காய்ச்சல், சளி, வாய்ப்புண் போன்றவை ஏற்படும். சிறு காயம் ஏற்பட்டாலும் அதிக ரத்தக் கசிவு ஏற்படும். உடல் எடை மெலிதல், பசியின்மையும் உண்டாகும்.

லிம்போமா புற்றுநோய்:

  • ‘லிம்ஃப்’ என்பது நிறமற்ற நீர் போன்ற திரவமாகும். ரத்தம் எப்படி உடலில் அதன் நாளங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதோ அதே போல இந்த நிணநீரும் அதற்குரிய நிணநீர் நாளங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிணநீர் ஓட்டம் வழியாக உடல் முழுமைக்கும் லிம்போசைட்ஸ் எனும் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான செல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லிம்போசைட்களில் பல வகையுண்டு.
  • இதில் பி லிம்போசைட்டுகள் நமது உடலில் கிருமிகளுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகளை உருவாக்குகின்றன. இதில் பி லிம்போசைட்கள் அதிகமாக உற்பத்தியாவதால் பர்கிட் லிம்போமா ஏற்படுகிறது. மேலும், எப்ஸ்டின் பார் வைரஸ் தொற்றினால் இந்தப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா (Hodgkin lymphoma) என்பது நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் மற்றொரு புற்றுநோய். இது 15 முதல் 19 வயதினருக்கு அதிகம் கண்டறியப்படுகிறது.
  • எடை இழப்பு, தீராத காய்ச்சல், சளி, இருமல், இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது, உடல் சோர்வு, கழுத்து , கக்கம், அக்குள், வயிற்றுப் பகுதிகளில் கழலைக் கட்டிகள் வீக்கம் ஆகியவை லிம்போமா புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

ரெட்டினோ ப்ளாஸ்டோமா:

  • ரெட்டினோபிளாஸ்டோமா என்பது கண் களின் உள்ளறையில் ரெட்டினா எனும் விழிப் படலத்தில் ஏற்படும் புற்றுநோய். இது ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் அதிகம் கண்டறியப்படுகிறது. இதில், மரபணுவழி பரவும் வகை, பரவா வகை என்று இரண்டு வகை உண்டு.
  • கண்களில் ஒளி பீய்ச்சிப் பார்க்கப்படும் போது ஆரோக்கியமான கண்களின் பாப்பாவில் சிவப்பு நிறத்தில் ஒளி தெரியும். ஆனால், ரெட்டினோப்ளாஸ்டோமா பாதிக்கப் பட்ட கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி தெரியும். பார்வைக் குறைபாடு, கண் வலி, கண் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள் .

வில்ம்ஸ் புற்றுநோய்:

  • வில்ம்ஸ் என்பது சிறுநீரகச் செல்களில் ஏற்படும் புற்றுநோய். இந்தப் புற்றுநோய் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளிடம் கண்டறியப்படுகிறது. இடுப்புப் பகுதியில் வலி, வீக்கம் கூடவே சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது ஆகிய மூன்றும் வில்ம்ஸ் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள். இவை தவிர்த்து, தீராத காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிதல் போன்றவையும் ஏற்படும்.
  • லோ கிரேடு க்ளையோமா (புற்றுநோய்க் கட்டிகள்) - குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளில் 40% - லோ கிரேடு க்ளையோமாக்களைச் சேர்ந்தவை. தலைவலி, குமட்டல்/ வாந்தி, பார்வை மங்குதல் பொருள்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல், தலைசுற்றல், வலிப்பு, பேச்சுக் குழறுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

மரபணுக் காரணிகள்:

  • மேற்கூறிய புற்றுநோய்கள் ஏற்பட 10% மரபணுரீதியான காரணிகள் உண்டு. பிரச்சினைக்குரிய மரபணுக்களைப் பரம்பரைப் பரம்பரையாகக் கடத்துவதன் மூலம் குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருப்பின் மற்றவருக்குப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம்.

பரிசோதனைகள், சிகிச்சைகள்:

  • ரத்தப் பரிசோதனைகள், ஊடுகதிர் பரிசோதனைகளான (எக்ஸ்ரே , சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, பெட் ஸ்கேன்) அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், கட்டிகளின் சிறு பகுதியை எடுத்துப் பரிசோதனை செய்யும் பயாப்சி, புற்றுநோய் செல்களில் உள்ள மரபணுக்கூறுகளைக் கண்டறிதல் போன்றவை புற்றுநோய்க்கான பிரதான பரிசோதனைகள். புற்றுநோய் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற் றாற்போல் புற்றுநோய் செல்களை அழிக்கும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • புற்றுநோய்க் கட்டி ஓர் இடத்தில் இருக்குமானால், அதை அறுவை சிகிச்சை செய்து நீக்குதல், கதிரியக்கம் கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அழித்தல் போன்ற சிகிச்சைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குன்றச் செய்து அதன் வழி புற்றுநோய்ப் பரவலையும் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவது போன்ற சிகிச்சைகளும் உள்ளன. இவை தவிர்த்து லுகேமியா போன்ற நோய்களுக்கு ஸ்டெம் செல்களை வழங்கும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் நல்ல பலனளிக்கிறது.
  • பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை பயனாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கான சிகிச்சையை இலவசமாக வழங்கிவருகின்றன.
  • குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் பெரும்பாலும் மரபணுக்கள் மூலம் தோன்றினாலும் ஆரோக்கியமான உணவு முறை, உடல் உழைப்பு, போதுமான உறக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இவற்றைத் தடுக்க முடியும். புற்றுநோய் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தால் விரைவாகக் கண்டறிந்து முழுவதுமாகக் குணப்படுத்த முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்