TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

November 6 , 2020 1536 days 1043 0
  • குழந்தைகளை "தெய்வம் தந்த பூ' என்று வர்ணித்துள்ளார் ஒரு கவிஞர். ஆனால் அப்படி பூப்போன்று பேணி வளர்க்கப்பட வேண்டிய குழந்தைகளில் சிலர், வன்முறைக்கு ஆளாகி தங்கள் குழந்தைப் பருவத்தையே இழந்து விடுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.  
  • தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிடும் ஆண்டறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, "சைல்ட் ரைட்ஸ் அண்டு யூ' எனும் குழந்தை உரிமை தன்னார்வ அமைப்பு, நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நாள்தோறும் 350 குற்றங்கள் நிகழ்வதாக மதிப்பிட்டுள்ளது.
  • 2015-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 21.1 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விகிதம்,  2016-ஆம் ஆண்டில் 24.0,  2017-ஆம் ஆண்டில் 28.9, 2018-ஆம் ஆண்டில் 31.8,  2019 -ஆம் ஆண்டில் 33.2 என்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.
  • தேசிய குற்றப் பதிவு ஆணையம் வழங்கும் புள்ளிவிவரங்களின்படி, நமது நாட்டில் 2019-ஆம் ஆண்டில் 1,48,185 குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5  விழுக்காடு அதிகரித்துள்ளன.
  • நமது நாட்டில் குழந்தைகள் பிறப்பிலிருந்தே, சொல்லப்போனால் பிறப்பதற்கு முன்பிலிருந்தே பல விதமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்திய தண்டனை சட்டம், சிறப்பு-உள்ளூர்  சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக  பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்கள் யாவை என்று பார்ப்போம் . 
  • குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கருக்கலைப்பு செய்து குழந்தை பிறக்காமல் தடுப்பது, பிறந்த குழந்தையைக் கொலை செய்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்கள்.
  • இந்தக் குற்றங்களை செய்பவர்கள் பெரும்பாலும் "பெண் குழந்தை வேண்டாம்' என்று நினைப்பவர்கள். பிறக்கப் போவது பெண் குழந்தை என்று தெரிந்தால் ஒரு சில பகுதியினர் கருக்கலைப்பு செய்யவும், பெண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தையை கொல்லவும் தயங்குவதில்லை.     
  • இரண்டாவது வகையான குற்றங்கள் குழந்தைகளை கொலை செய்வது மற்றும் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு துணைபோவது அல்லது தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவது போன்றவை.
  • நமது நாட்டில் ஏழ்மையின் காரணமாக அல்லது கடன் சுமை தாங்க முடியாமல் "குடும்பத்துடன் தற்கொலை' அல்லது "குழந்தைகளைக் கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை' போன்ற துயரச் செய்திகள் அவ்வப்பொழுது நம் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
  • குழந்தைகளை அவர்களது பெற்றோர் அல்லது  பாதுகாவலர்கள் வீட்டை விட்டு துரத்தி விடுவது அல்லது அவர்களை கைவிடுவது போன்ற செயல்களும் தண்டனைக்குரிய குற்றங்களே.
  • குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதும் இந்தச் சட்டங்களின்படி குற்றமாகவே கருதப்படுகின்றது.
  • குழந்தைக் கடத்தல் என்பது நமது நாட்டில் சர்வதேச அளவில் நடந்துகொண்டிருக்கும் பெரும் மோசடி.
  • குழந்தையைக் கடத்தி வைத்துக் கொண்டு, அக்குழந்தையின் பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பது, குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் பிச்சை எடுக்க வைப்பது, குழந்தைத் தொழிலாளிகளாக நியமித்து கொத்தடிமைகளாக நடத்துவது, போதைப் பொருட்களைக் கடத்த பயன்படுத்துவது, 18 வயதை எட்டாத பெண் குழந்தையை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைப்பது, கடத்தி கொண்டு போய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பது, சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.
  • பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் குழந்தைகளை விற்பது, வாங்குவது இரண்டுமே இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 372 மற்றும் 373-இன் கீழ் குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
  • இந்த எல்லா குற்றங்களையும் விட தற்பொழுது நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் கொடுமை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே.
  • வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் ஆறு மாத பெண்குழந்தையைக் கூட விட்டு வைப்பதில்லை. சற்றே வளர்ந்த குழந்தை விஷயத்தில், அந்தக் குழந்தை தங்களை காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயத்தில், அக்குழந்தையைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை இந்தக் கொடியவர்கள்.
  • இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களைத் தவிர, சிறப்பு - உள்ளூர் சட்டங்களின் கீழ், குழந்தைத் திருமணங்களை மற்றும் குழந்தைத் தொழிலாளிகளை பணியில் அமர்த்துவதைத் தடுக்கும் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அப்படி இருந்தும் பிகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும், பழங்குடியினர் மற்றும் சில பட்டியல் வகுப்பினரிலும் இந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
  • அதே போல் குழந்தைத் தொழிலாளி (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1986 அமலில் இருந்தும், நமது நாட்டில் சுமார் 33 மில்லியன் குழந்தைத் தொழிலாளிகள் உள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  • இவர்கள் தீப்பெட்டி, பட்டாசு  உற்பத்தி, பீடி சுற்றுவது  போன்ற ஆபத்தான தொழில்களிலும், ஆயத்த ஆடைகள் மற்றும் கம்பளங்கள் தயாரிப்பது, செங்கல் சூளைகள், வேளாண்மை சார்ந்த பணிகள், உணவகங்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலகங்களிலும் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றுகிறார்கள் .
  • 2019-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள குழந்தைகளுக்கு எதிரான தண்டனைக்குரிய குற்றங்களில், குழந்தைகளைக் கடத்தும் குற்றம் முதலிடம் (46.6%) வகிக்கிறது.
  • அதற்கு அடுத்தபடியாக போக்úஸô சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் அதிகமாக (35.3%) பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிராக பதிவாகியுள்ள குற்றங்களில் 80% குழந்தைக் கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள்தான்.  
  • நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடர்ந்து, நமது அரசு 2012-ஆம் ஆண்டு  நிறைவேற்றிய சட்டம்தான் "போக்úஸô' எனப்படும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்.
  • இந்தச் சட்டத்தின் கீழ், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் சீண்டல், துன்புறுத்தல், தாக்குதல், வன்கொடுமை, அவர்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்தல் போன்ற குற்றங்கள் இழைப்போர்க்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது.
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வரையில் வழங்குவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
  • போக்úஸô சட்டத்தின் கீழ் 2019-ஆம் ஆண்டு 48,043 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2018 -ஆம் ஆண்டில் 40,810ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 18 சதம் அதிகரித்திருப்பதற்கு, மக்களிடையே அதிகரித்துள்ள விழிப்புணர்வு காரணமாக  இருக்கலாம் என்றாலும்,  இது கவலைக்குரிய விஷயமே.
  • சென்ற ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில்தான் போக்úஸô சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாக (7,444) பதிவாகி உள்ளன. அடுத்தபடியாக மகாராஷ்டிரத்திலும் (6402)  மத்திய பிரதேசத்திலும் (6053) அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளில் 90 விழுக்காட்டினர், குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படும் குழந்தையைவிட பன்மடங்கு வயதில் மூத்தவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • மத்திய அரசு வெளியிட்ட ஒரு தகவலின்படி, இந்தியாவில்தான் மிக அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கிறார்கள் என்றும், இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இதில் முதலிடம் வகிக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
  • குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது மட்டும் குற்றமில்லை, குழந்தைகளுக்கு ஆபாச படங்களைக் காண்பிப்பதும் போஸ்கோ சட்டத்தின்படி குற்றமே. 
  • நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான கசப்பான அனுபவம் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலியல் கொடுமைகளுக்கு, அதுவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
  • குற்றம் இழைப்பவர்கள், இக்குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அறிமுகமானவர்கள் என்பதனால் வெளியே சொல்ல முடியாமல் வெட்க உணர்வுக்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாகிறார்கள். தங்கள் சுய மதிப்பை இழக்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பீதியுடனும் பதட்டத்துடன் வாழ்கிறார்கள்.
  • அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொன்னாலும், குடும்ப கெüரவம் கருதி விஷயம் மறைக்கப்படுகிறது.
  • குழந்தை என்பது பெற்றோருக்குக் கிடைக்கும் அரிய பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைப் பருவத்தில் வன்முறைகளுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகும் குழந்தைகள், குறிப்பாக ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் சமூக விரோதிகளாகவும், குற்றவாளிகளாகவும் தலையெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பிற்காலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம். 
  • குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து அடுத்த தலைமுறையினரை நல்ல பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தின் மற்றும் சமூகத்தின்  கடமையாகும்.

நன்றி : தினமணி (06-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்