TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை

November 23 , 2017 2429 days 2908 0
குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை

- - - - - - - - - - - - - - - -

செய்தி என்ன?

         2017 செப்டம்பர் மாதத்தில் குருகிராமில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான்.

         பள்ளிக்கூட வளாகத்தில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாததும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு கூறுவதை நடைமுறைப்படுத்த மாநில அரசு தவறியதும் நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடரும் குற்றங்கள்

         நகர்ப்புற பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து ஆளாகி வரும் நிகழ்வுகளில் மிகவும் சமீபத்தியது குருகிராம் நிகழ்வு. இவ்வாறு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவது என்பது சிறுமிகள், சிறுவர்கள் இருவருக்குமே ஏற்படுகிறது என்பது முக்கியமான விஷயம் ஆகும். குழந்தைகளை பாலின ரீதியாக பாகுபடுத்தி காவல் காப்பதை விட அமைப்புரீதியாக இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டும்.

         பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குழந்தைகள் மீதான  பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும், 53.22% குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய 2007ஆம் ஆண்டின் ஆய்வு கூறுகிறது.

         ஆய்வில் பங்கேற்ற 12,000 குழந்தைகளில் 50% தங்களது பள்ளிகளில் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், 13 மாநிலங்களில் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளான குழந்தைகள் 69% பேர் என்றும், இவர்களில் 54.68% பேர் சிறுவர்கள் என்றும், பெரும்பாலான குழந்தைகள் இவற்றை யாரிடமும் சொல்வதில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 2015 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அறிக்கை இந்த மிக மோசமான நிலையை சுட்டிக்காட்டியிருக்கிறது.

குழந்தைகளின் பாதுகாப்பில் உள்ள குறைகள்

         குழந்தைகளை உண்மையான ஆபத்திலிருந்தோ அல்லது ஆபத்து என்று தோன்றக் கூடியதிலிருந்தோ அல்லது அவர்களது உயிருக்கோ, குழந்தைத்தன்மைக்கோ ஆபத்து வருவதிலிருந்து காப்பாற்றுவது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு திட்டமானது (ஐசிபிஎஸ்) செயல்படுகிறது.

         குழந்தைப் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் பொறுப்பு ஆகும். சமூகம், அரசாங்கம் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவற்றின் ஆதரவு இதற்குத் தேவை. இந்த ஆதரவு வலைப்பின்னலின் மிகவும் முக்கியமான பகுதி பள்ளிக்கூடங்கள் ஆகும். தங்களது குழந்தைப்பருவத்தின் பாதியை பள்ளிக்கூடங்களில் கழித்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் நிறுவனங்கள் என்ற வகையில் பள்ளிக்கூடங்கள் உண்மையில் பொறுப்பாளியாக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

         குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் பள்ளிக்கூடங்களின் பங்கினைப் பற்றி சட்டத்தில் நிலவும் குழப்பமானது ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைகள் சட்டத்தில் சிறந்த பாடத்திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் ஆளாகும் யதார்த்தம் மற்றும் அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது பற்றியும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசப்படவில்லை.

         பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமானது பள்ளிக்கூடங்களை அல்லது அவற்றின் நிர்வாகத்தைப் பற்றி பேசவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றி  பேசும் போது உடல், உணர்வு, அறிவு ரீதியாக குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பற்றி பொதுவாகக் குறிப்பிடுவதோடு நின்றுவிடுகிறது. சிறார் நீதிமுறை (குழந்தைகளுக்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டமானது அநாதையான, தொலைந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனதிற்கொண்டு இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் மிக மோசமான வன்முறை அல்லது இழப்புகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியது. குழந்தைகளை கவனித்துக் கொள்வது பள்ளிக்கூடங்களின் பொறுப்பு என்பதை இது குறிப்பிடத் தவறிவிட்டது.

என்ன செய்ய வேண்டும்?

         வெகுகாலமாக நடத்தப்படாதிருந்த குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உரையாடல்களை குருகிராம் பள்ளி விவகாரமானது விரைவுபடுத்தியிருக்கும் வேளையில் இன்னும் செய்யப்படுவதற்கு நிறைய இருக்கின்றன.

         கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் இயக்குனரின் அறிக்கையின் படி “குழந்தைகள் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவது பற்றியும் அவற்றை பள்ளிக்கூடங்களில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அதற்குண்டான பாடங்களை அறிமுகப்படுத்துவது” அவசியம் எனத் தெரியவருகிறது. குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பாரத யாத்திரையை தொடங்கியிருக்கிறார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி.

         பணியாளர்கள் குறித்த தகவல்களை காவல்துறை சரிபார்ப்பது என்பது ஹரியானாவில் இனி எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான குழுக்கள் அமைக்கப்படும், பள்ளிக்கூட வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இவை முதல் கட்ட நடவடிக்கைகள், ஆனால் போதுமானவை அல்ல.

         நல்ல கண்காணிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்களின் பொறுப்பை வற்புறுத்தும் சட்டங்கள் அவசியம் தேவை. இறுதியாக குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதியையும் கல்வியையும் தவிர்த்து வேறு விஷயங்களும் தேவைப்படுகின்றன.

  1. எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பாளராக இருந்து அரசாங்கம் தனது பங்கினை ஆற்ற வேண்டும்.
  2. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை (குறிப்பாக தனியார் பள்ளிக்கூடங்களில்) அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், பள்ளிக்கூடங்களை தொடங்குவது என்பது நல்ல வர்த்தமாகியுள்ள தற்போதையச் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பொறுப்புகளைப் பற்றி குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் தெளிவான விதிகள் இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
  3. எந்த வகுப்பில் படிக்கிறார்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்களா அல்லது நகரத்தைச் சேர்ந்தவர்களா என்ற பாகுபாடில்லாமல் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற, கற்பதற்கான சூழலானது பள்ளிக்கூடங்களிலும், வீட்டிலும், போக்குவரத்திலும் மிகவும் இன்றியமையாத தேவையாகும்.
 

நன்றி: EPW (Economic and Political Weekly) தமிழ்

- - - - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்