TNPSC Thervupettagam
October 4 , 2019 1926 days 1125 0
  • ஆபத்தை யாராவது விலை கொடுத்து வாங்குவார்களா என்கிற கேள்விக்கு,  வாங்குகிறார்களே... என்கிறது அண்மைக்கால ஓர் ஆய்வறிக்கை. 
  • குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைப் பொருத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளிடம் வன்முறை எண்ணமும் சேர்ந்தே வளர்கிறது என்று அமெரிக்காவின் அண்மைக்கால உளவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 
குழந்தைகள் வளர்ப்பு
  • பிரம்பை மறைத்து வைத்தால் குழந்தை கெட்டுப்போகும் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை அடித்து வளர்க்கத் தொடங்கிய காலம் முதற்கொண்டே குழந்தைகள் குழந்தைகளாக வளரவில்லை என்பதுதான் உண்மை.  அதனால்தான், இன்றைய சிறார்கள் தங்களது இயல்பை இழந்தே வளர்கின்றனர்.
  • முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆசிரியர்-மாணவர் நல்லுறவு இன்றைக்கு அருகிப் போய்விட்டது. மாணவர்களிடமும் அடக்கம், பணிவு, கீழ்ப்படிதல், நல்லொழுக்கம் முதலிய நற்பண்புகளும் அழிந்து போய்விட்டன.  
  • அன்றைக்குப் பள்ளி, கல்லூரி ஆசிரியர், பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களையும், நன்னெறிகளையும் புகட்டியதன் பயனாக,  மிகப் பெரிய ஆளுமைகள் உருவாகி நாட்டுக்கும், வீட்டுக்கும், ஆசிரியருக்கும் பெருமை சேர்த்தனர்.
  • ஆனால், இன்றைக்கு அத்தகைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் காண்பதே அரிதாகிவிட்டது.
  • அண்மையில் நடந்த ஒரு சம்பவம்தான் பெற்றோர் பலரையும் பதற வைத்திருக்கிறது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பள்ளியில் முதல் வகுப்புப் படிக்கும் ஐந்து வயது சிறுமியை, தனிப் பயிற்சி (டியூஷன்) ஆசிரியை ஒருவர் கொடூரமாகத் தாக்கியதால், அந்த ஆசிரியைக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உதாரணம்
  • காலாண்டுத் தேர்வு எழுத முடியாமல் உடல் வலியால் துடித்த அந்தச் சிறுமியிடம் பள்ளி ஆசிரியர் காரணம் கேட்க, அதற்கு அந்தச் சிறுமி, டியூஷன்  ஆசிரியை தன்னை கரண்டி மற்றும் முள் கத்தியால் அடித்ததாகவும், தன் கையில் ஒரு விரலை முறித்ததாகவும் கூறி அழுதிருக்கிறார். அந்தச் சிறுமி தாக்கப்பட்டது குறித்த செய்தியும், நிழற்படமும் பத்திரிகைகளில் வெளியாகி, பெற்றோர் பலரையும் பதற வைத்திருக்கிறது. 
  • ஒரு குழந்தை தவறு செய்யும்போது அதைக் கண்டிப்பதாக நினைத்து அடிக்கிறார்கள்.
  • ஆனால், அது தவறு என்கிறது இந்த ஆய்வு. தொடர்ந்து வன்முறை செலுத்தப்படும் குழந்தைகள், அடிக்கடி அடித்து வளர்க்கப்படும் குழந்தைகள் சிலரைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆய்வு நடத்தியது அமெரிக்காவின் உளவியல் சங்கம். அதில் சில முக்கியமான  மருத்துவ முடிவுகள் தெரியவந்துள்ளன.
  • அந்தக் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் மூளையில் வித்தியாசமான சாம்பல் நிறப் பொருள்கள் மற்றும்  வெள்ளை நிறப் பொருள்கள் இருப்பதும், மூளைச் செயல்பாட்டுடன் தொடர்புடைய ஹார்மோன்களின் சுரப்பில் சில மாற்றங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன. 
ஹார்மோன்
  • நாம் மகிழ்ச்சியாக இருக்க மட்டுமல்ல, வேகமாகச் செயல்படவும் அட்ரினலின் என்கிற ஒரு ஹார்மோன் முதன்மையானது.
  • அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளையில் இந்த ஹார்மோனும், கார்ட்டிசால் எனும் ஹார்மோனும் சுரப்பதில் மாறுபாடு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
  • அதனால், அக்குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான கோபம், மூர்க்கத்தனம், தற்கொலை எண்ணம், போதைப் பொருள் பயன்படுத்தும் விருப்பம் ஆகியவை அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களின் ஹார்மோன் சுரப்பு மற்றும் மூளையின் பிற வேதியியல் சுரப்பு விகிதங்கள் மற்றவர்களைப்போல் இயல்பாக இருப்பதில்லை. இதனால்தான் பிறர் வதையில் மகிழ்ச்சி அடையும் குணங்கள் எல்லாம் பிற்காலத்தில் உருவாகின்றன.
  • இப்படி அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளில் சிலர் இந்தப் பிறவதைக்கு நேர் எதிர்குணமான சுயவதையிலும் ஈடுபடுகிறார்கள். சமூகத்துடன் ஒட்டாமல் வளர்கிறார்கள் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலையும் வெளியிட்டுள்ளது ஓர் ஆய்வறிக்கை.
  • குழந்தை உளவியல் என்கிற பேச்சுக்கே இன்று இடமில்லாமல் போய்விட்டது.
  • அதை இன்றைய பெற்றோரும், ஆசிரியர்களும் கற்றுக்கொள்ளவும் விரும்புவதில்லை. கற்றுக் கொண்டாலும் கடைப்பிடிப்பதில்லை. சாவி கொடுத்தால் இயங்கும் ஒரு பொம்மையைப் போலத்தான் குழந்தைகளைப் பார்க்கின்றனர்.
மாண்டிசொரி கல்வி முறை
  • ஆனால், மாண்டிசோரி கல்வி முறையில் இந்தப் பிரச்னைக்கே இடமில்லை. காரணம், குழந்தை உளவியல் அறிந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தக் கல்விமுறை அமைகிறது. இங்கு அன்பும், அரவணைப்புமே முதலில் போதிக்கப்படும் பாடம்.
  • இவர்கள் குழந்தைகளை அடிப்பதே இல்லை. மாணவர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்களை அருகில் அழைத்து அன்புடன் அரவணைத்து,  பக்குவமாக,  நயமாக எடுத்துக் கூறுகின்றனர். இந்தியாவின் இன்றைய தேவை இந்தக் கல்வி முறைதான்.
  • குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து முதலில் பாடம் எடுக்க வேண்டும். அடிப்பதைத் தவிர்த்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு அவர்கள் மாறவேண்டும்.
  • விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அக்காலத்தில் பத்து, பதினைந்து குழந்தைகளைப் பெற்றவர்கள்கூட தங்களுடைய குழந்தைகளைக் கண்டித்தோ, அடித்தோ, திட்டியோ வளர்க்கவில்லை. அந்த இளம் பயிர்களை இயல்பாக  வளர விட்டனர். அவ்வாறு இயல்பாக வளர்ந்ததால்தான் அந்த இளம் பயிர்களும் நல்ல விளைச்சலையே தந்தனர்.
  • ஆனால், முப்பது, நாற்பது ஆண்டுகாலமாக நாம் நல்ல பயிர்களை வளர்க்கத் தவறிவிட்டோம்; அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.
  • ஒவ்வோர் ஆண்டும் நாம் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளை (நவ.14) குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால், குழந்தைகளைக் கொண்டாடுவதில்லை.
கவிதை
  • இந்த அவலத்தை கவிஞர் அப்துல் ரஹ்மான், வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே... தினங்கள் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்? என்று கவிதையாக வடித்தார். 
  • குழந்தையின் சிறந்த வளர்ப்புக்கும் வளர்ச்சிக்கும் பெற்றோர், ஆசிரியர், அரசு ஆகிய மூவரின் ஆதரவு மிகவும் இன்றியமையாதது என்றார்,  சிறுவர் கதைக் களஞ்சியம் உருவாக்கிய எழுத்தாளர் பெரியசாமித்தூரன்.  
  • ப்ரோபெல் எனும் அறிஞர் ஒருவர்,  தன் கல்லறையில் விட்டுச் சென்ற வாசகம் என்ன தெரியுமா?  வாருங்கள் நம் குழந்தைகளுக்காக வாழ்வோம் என்பதுதான்!

நன்றி: தினமணி (04-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்