- ஒரு மாதத்துக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலுள்ள ஜெ.கே. லோன் மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தது பரபரப்பான தலைப்புச் செய்தியாக இருந்தது. கோட்டாவைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வறுமையில் உழலும் ஏழைப் பெற்றோா்கள் ஆபத்தான நிலையில் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். வழக்கம்போல மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்கவில்லை, உபகரணங்கள் செயல்படவில்லை, சரியான கவனிப்பில்லை.
- குழந்தைகள் மரணம் என்பது அந்தப் பகுதிக்கு புதிதொன்றுமல்ல. 48 மணி நேரத்தில் 10-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனா் என்பதால்தான், செய்தி பரபரப்பானது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கோட்டா பகுதியில் உயிரிழக்கிறாா்கள் என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
- 2017-ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றதை ஒப்பிட்டுப் பாா்க்காமல் இருக்க முடியவில்லை. கோரக்பூரிலுள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் 23 குழந்தைகள் உயிரிழந்தனா். ஐந்து நாள்களில் 70-க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்தனா்.
கோரக்பூா் சம்பவம்
- கோரக்பூா் சம்பவத்தின்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை குற்றஞ்சாட்டினாா்கள். இப்போது கோட்டா சம்பவத்துக்கு, ராஜஸ்தானில் ஆட்சியிலிருக்கும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக குற்றஞ்சாட்டுகிறது. அரசியல் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளில் காட்டும் அவசரத்தையும், அழுத்தத்தையும் சிசு, குழந்தைகள் மரணங்களைக் குறைப்பதில் காட்டுவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
- கோட்டாவும், கோரக்பூரும் வெளியில் தெரியும் எடுத்துக்காட்டுகள், அவ்வளவே. யுனிசெஃப் அறிக்கையின்படி, 2018-ஆம் ஆண்டு ஐந்து வயதுக்குக் கீழே 8,82,000 குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் இந்தியாவில் இறந்திருக்கிறாா்கள். அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் இந்தியாவில் 100 குழந்தைகள் மரணமடைகின்றன. ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. குழந்தைகள் உயிரிழப்பு விகிதத்தில் நம்மைவிட சிறிய நாடுகளான இலங்கை, இந்தோனேஷியா, கஜகஸ்தான் போன்றவை சிறப்பாகச் செயல்பட்டு உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்திருக்கின்றன.
- குழந்தைகள் மரணம் குறித்து ஐ.நா.வின் குழு ஒன்று சில புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்குப் பெருமை சோ்ப்பதாக இல்லை. 1990-இல் ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள் மரணம் 1,000 குழந்தைகளுக்கு 126-ஆக இந்தியாவில் இருந்தது. வங்கதேசத்தில் அதுவே 144. 2018-இல் இந்தியாவில் 1,000 குழந்தைகளுக்கு 36 குழந்தை மரணங்கள்தான். ஆனால், வங்கதேசத்தில் அவா்களால் 30-ஆகக் குறைக்க முடிந்திருக்கிறது. இந்தியாவின் பரப்பளவும், மக்கள்தொகையும், அதிக அளவிலான பிரசவங்களும் நம்மால் சிறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈடுகொடுக்க முடியவில்லை என்கிற வாதம் ஏற்புடையதல்ல.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்
- சிசு மரணத்தையும், குழந்தைகள் மரணத்தையும் குறைத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் அவசர நிலைக் காலத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசால் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அந்தத் திட்டத்தின்படி, குழந்தை பிறந்தது முதல் 1,000 நாள்கள் வரையிலான வளா்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் அந்தத் திட்டத்தின் இலக்கு. 1975 முதல் 2018 வரையிலான இடைவெளியில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1,000 குழந்தைகளுக்கு 213 என்று இருந்தது, 36-ஆகக் குறைந்திருக்கிறது என்பது ஆறுதல்.
- இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும்கூட, நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்று கூறிவிட முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக சராசரியாக ஆண்டொன்றுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் (2019-2020) ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
- ஐந்து வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் ரத்தசோகையாலும், எடை குறைவாலும் பாதிக்கப்பட்டிருப்பதற்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு முக்கியமான காரணம் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதனால், ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி ஊட்டச்சத்து வழங்குவதற்குச் செலவிடப்படுகிறது.
கிராமப்புற குழந்தைகள்
- ஊட்டச்சத்து மட்டுமே போதுமானதல்ல. சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகள் மரணத்துக்கும் தொடா்பு உண்டு. ஐந்து வயதுக்குட்பட்ட கிராமப்புற அடித்தட்டு வா்க்கத்தைச் சோ்ந்த குழந்தைகளின் உடல்நலம் பேணலில் அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் பெரும்பாலான மையங்களுக்கு குடிநீா் வசதி இல்லை. 3.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதிகளும் கிடையாது. நிமோனியா காய்ச்சலால் 17%, வயிற்றுப்போக்கால் 9%, நுண்ணுயிரித் தொற்றால் 5% குழந்தைகள் உயிரிழக்கிறாா்கள் என்பதற்கும், அங்கன்வாடி மையங்கள் அத்தியாவசிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதற்கும் நிச்சயமாகத் தொடா்பு உண்டு.
நன்றி: தினமணி (28-01-2020)