- 18 வயதுக்கு உள்பட்டவர்களைக் குழந்தைகள் என்றே நம் சட்டம் சொல்கிறது. அந்த வயதுக்குள் திருமணம் செய்விப்பதோ குழந்தை பெறுவதோ - இரண்டுமே ஏற்க இயலாதவை. சட்டரீதியான கண்காணிப்புகள் இருந்தபோதிலும், குடும்பச் சூழல், வறுமை போன்றவற்றை முதன்மைக் காரணங்களாக்கிப் பதின்பருவத்திலேயே அதாவது - பள்ளிப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்கதையாவது வருத்தமளிக்கிறது.
- இந்த நவீன யுகத்திலும் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதும் எண்ணத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பெண் குழந்தை என்றாலே வயிற்றில் கட்டியிருக்கும் நெருப்பென்ற போக்கையும் மாற்றிக்கொள்ளவில்லை. பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே யாரோ ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற சிந்தனையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
- தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இத்தகைய சட்ட மீறல்கள் நிகழ்கின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. முன்பெல்லாம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இத்தகைய மீறல்கள் ஓரளவு நிகழாமல் கண்காணிப்பவையாகவும் இத்தகைய திருமணங்களைத் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தியாகவும் இருந்தன. பள்ளிகளிலும் கண்காணிப்புகள் ஆசிரியப் பெருமக்களால் நிகழ்ந்துகொண்டிருந்தன. இவர் களை எல்லாம் மீறி எவ்வாறு பதின்பருவத் திருமணங்கள் நிகழ்கின்றன என்பது பெரும் கேள்விக்குறிதான்.
- பொதுமுடக்கம் அளித்த பரிசு: கடந்த மூன்று ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 1,448 சிறுமிகள் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,104 பிரசவங்களும் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 347 பிரசவங்களும் நடந்துள்ளன என்ற அதிர்ச்சிகரமான செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ளது.
- கரோனா பொதுமுடக்கக் காலகட்டம் என்பது மிகவும் நெருக்கடி மிகுந்தது. 2020 மார்ச் மாதத்தில் மனிதர்கள் மட்டும் வீட்டுக்குள் முடங்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சேர்ந்தே முடங்கியது. தொழில்கள், வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி வெறுமையாகக் கழிந்த அக்காலத்தின் நீட்சியே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக் கல்வியைத் துறந்து குழந்தைத் தொழிலாளர்களாக மாற வேண்டிய கடுமையான நிலையை உருவாக்கியது.
- பெண் குழந்தைகள் திருமண பந்தத்துக்குள் வலிந்து திணிக்கப்பட்டார்கள். அதன் விளைவுதான் இது என எளிதாகக் கடந்துவிட முடியாது. ஒரு மாவட்ட அளவில் மட்டும் இத்தகைய நிலை எனில், தமிழ்நாடு முழுமையும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் என்ன நிலை என்ற வினா எழுகிறதல்லவா?
- சாதி என்னும் பெரு வியாதி: கரோனா மட்டுமல்லாமல், சாதி என்ற பெரு வியாதியும் பிடித்து ஆட்டத்தான் செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஆண் - பெண் நட்பும், அவர்கள் இணைந்து பழகுவதும் தவிர்க்க இயலாதவை. ஆனால், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் தங்கள் சுய சாதியை விடுத்து வேறொரு சாதிக்காரருடன் இயல்பாகப் பழகுவதையும் நட்பு கொள்வதையும் ஏற்கவியலாத மனநிலை பெற்றோர்களைப் பேயாய்ப் பிடித்தாட்டுகிறது.
- இதற்கான தீர்வாகவும் இளம் பருவத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அரசு இத்தகைய போக்கு குறித்துத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவையும் இதைத் தடை செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
- உடல்-மன வளர்ச்சி முக்கியமில்லையா? - மருத்துவரீதியாகவும் இத்தகைய இளம் வயதுத் திருமணங்கள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியவை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குக் கர்ப்பம் தாங்கக்கூடிய அளவுக்குக் கருப்பையின் வளர்ச்சியும் மிகமுக்கியம். 20 வயது வரையும் இத்தகைய உடல் வளர்ச்சிகள் உண்டு.
- எலும்பு வளர்ச்சி முழுமை அடையாத நிலையில் சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தையைப் பெறும் நிலை ஏற்படும். அத்துடன் கர்ப்ப காலத்தில் உயர்ரத்த அழுத்தம் மிகுவதும் அதன் விளைவாகக் கர்ப்பிணிக்கு வலிப்பு ஏற்படும் ஆபத்துகளும் அதிகம். இவற்றை மனதில் கொண்டாயினும் குழந்தைப் பருவத் திருமணங்களையும் பிள்ளைப்பேற்றையும் தவிர்ப்பது நலம்.
- உடல் வளர்ச்சியுடன் மனரீதியான முதிர்ச்சியும் புரிதலும் அவசியம் என்பதால், 20 வயதுக்குப் பிறகான திருமணமும் கர்ப்பமுமே ஆரோக்கியமானவை. “நம் முன்னோர்கள் சிறு வயதில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கவில்லையா?” என்ற கேள்விகள் எழலாம்.
- முந்தைய காலத்தில் எத்தனைப் பெண்கள் பிரசவத்தில் குழந்தைகளையும் பறிகொடுத்து, உயிரையும் இழந்தார்கள், எத்தனைப் பெண்கள் இளம் வயதில் கைம்பெண்கள் ஆனார்கள் என்பதற்கும் ஏராளமான கதைகளும் புள்ளிவிவரங்களும் உண்டு. வளர்ச்சியும் முன்னேற்றமும் அடுத்த நிலையை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, பின்னோக்கிச் செல்வதும் பழைமையை ஆராதிப்பதும் கூடாது.
- திருமண வயதின் வரலாறு எளிதானதல்ல… வன்பாடுபட்டுக் கொண்டுவரப்பட்ட பெண் கல்வி இத்தகைய திருமணங்களால் தடைபட்டுவிடக் கூடாது. பால்ய விவாகம் என அழைக்கப்பட்ட குழந்தைப் பருவத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவர பெரும் சட்டப் போராட்டம் தேவைப்பட்டது. தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கும் நடைபழகிக்கொண்டிருந்த குழந்தைக்கும் திருமணங்கள் நிகழ்த்தி வைக்கப்பட்ட கொடுங்காலம் அது.
- அத்தகைய சூழலில், 1928–29ஆம் ஆண்டுகளில் இந்தியச் சட்டமன்றத்தில் குழந்தைப் பருவத் திருமணங்களைத் தடுப்பதற்காக ராவ் சாஹிப் ஹரிபிலாஸ் சார்தா கொண்டுவந்த மசோதா, சென்னை மாகாணச் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் பல்வேறு கூட்டங்கள், ஆலோசனை களுக்குப் பின் திருமண வயது 14 என உயர்த்தப்பட்டு அது 1928இல் சட்ட வடிவமும் பெற்றது.
- இம்மசோதாவைத் தாக்கல் செய்த ராவ் சாஹிப் ஹரிபிலாஸ் சார்தா பெயரிலேயே அது ‘சார்தா சட்டம்’ என்றும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அதுவே 16, 18 எனப் படிப்படியாக வயது உயர்த்தப்பட்டு இப்போது 21இல் வந்து நிற்கிறது.
- பெண் கல்வி, பெண்ணின் திருமண வயது நிர்ணயம் இவற்றுக்கெல்லாம் நம்மிடம் மிக நீண்ட வரலாறுகள் உண்டு; என்றாலும் ’உங்கள் சட்டங்கள் எங்களை என்ன செய்துவிடும்?’ என்பது போல்தான் இருக்கின்றன சட்டமீறல் நடைமுறைகள். இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2024)