கூடிக் கொண்டாடப்படுகிறதா கிராம சபை?
- கல்லூரிகளில் முதலாண்டு பட்ட வகுப்புகள் தொடங்கும்போது சில கல்லூரிகளில், சில துறைகளில் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அது, ஒருநாள் முதல் மூன்று நாள்கள் நடைபெறும். பயிற்சி முகாமில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் படிக்கும்போது, படித்து முடிக்கும்போது மாணவர்களுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்பதை எங்கள் துறையில் பரிசோதனை செய்து பார்த்ததில்லை. மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் அப்படி ஒரு கலந்தாய்வை நடத்தினோம். முடிவுகள் அதிர்ச்சியளித்தன. 90 விழுக்காடு மாணவர்கள் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளில் என்ன நடந்தது என்பதையே மறந்துவிட்டிருந்தனர்.
தொடர் செயல்பாடுகள்:
- புத்தாக்கப் பயிற்சி வகுப்பு அவசியம் என்பதை உணர்ந்த அதேவேளையில், அதனைத் தொடர் செயல்பாடுகள் வழியாக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் வகையில் திட்டமிட்டோம். அதன் விளைவாக, மூன்று தொடர் செயல்பாடுகளுக்குத் திட்டமிட்டோம். 1. மாணவர்கள் தங்கள் சொந்த செலவில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) ஆகிய நாளேடுகளுக்கு ஆண்டு சந்தா செலுத்தி, வகுப்பறையிலேயே வாசிக்க வைத்தல்.
- அவ்வப்போது, அந்த வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வைத்தல். 2. மாதம் ஒரு நாள் மூன்று மணி நேரம் ஏதேனும் ஒரு நூலைத் தேர்வுசெய்து வாசித்தல், அது குறித்து விவாதித்தல். இதற்கு நூலாசிரியர் அல்லது ஒரு தேர்ந்த வாசகரை அழைத்து வந்து தொகுப்புரை ஆற்றுதல். 3. கிராம ஊராட்சி நிர்வாகத்தைப் பற்றியும் அதில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் - குடிமக்கள் கடமைகள், பொறுப்புகளை அறிந்துகொள்ளுதல்.
- வகுப்பறையில் நடைபெறும் தொடர் செயல்பாடுகளில் அனைவரும் பங்கேற்க வைப்பது. மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 11 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களது பின்னூட்டத்தை எழுதி வாங்கி, இதர மாணவர்களோடு பகிர்ந்துகொண்டோம். இந்த ஆண்டும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தனர்.
- கிராம ஊராட்சியின் முக்கியத்துவம், அதன் நோக்கங்கள், பணிகளை எங்களுக்கு எடுத்துக்கூறி, பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலாக்கப்படும் விதம், அதன் சாதக பாதகங்களை எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களோடு பயணிக்கும் மாணிக்கசுந்தரம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் பங்கேற்றுவரும் கிராம ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்க இந்த முறை அழைத்துச் சென்றார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று 60 மாணவர்கள், நான்கு பேராசிரியர்கள் அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். கிராமத்தில் வாழ்ந்து வந்தாலும் கிராம சபைக் கூட்டம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில்தான் பலர் இருந்தனர்.
- கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் - 1. ஊராட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை ஊருக்கு உணர்த்துவது. 2. ஊராட்சி நிர்வாகத்தின் சமூகப் பொறுப்புகளை அதிகரிக்கச் செய்தல். 3. கிராம ஊராட்சி நிர்வாகத்திலும் முடிவெடுத்தலிலும் மக்கள் பங்கேற்பை அதிகரித்தல். 4. ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்- மக்களுக்கு இடையேயான தொடர்புகளையும் பிணைப்பையும் அதிகரித்தல்.
முக்கியச் செயல்பாடுகள்:
- 1.கிராம வளர்ச்சித் திட்ட அறிக்கை தயாரித்தல்; வரவு- செலவுக் கணக்குகளை மக்கள் முன்வைத்து விவாதித்தல், ஒப்புதல் பெறுதல். 2. ஊராட்சியின் தேவைகள், பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தித் தீர்க்க முயற்சி செய்தல். 3.இருக்கும் வளங்களைச் சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்தல். 4. திட்டப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் கண்காணித்தல்.
- நாங்கள் பங்கேற்ற கிராம சபை, பெண் தலைவர் பொறுப்பேற்று நடத்தும் கிராம ஊராட்சி. கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை தலைவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரது மகனே தலைவராகக் கூட்டத்தை நடத்தினார். கேள்விகளுக்குப் பதில் அளித்தார். தேர்வானது முதல் அந்தப் பெண் தலைவரின் கணவர் இந்தப் பணிகளைச் செய்துவந்ததாகவும் அவரது மறைவுக்குப் பின்னர் மகன் பொறுப்பேற்றுச் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
- வரவு- செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. ஓரிரண்டு விளக்கங்களோடு அது முடிந்துவிட்டது. அதன் நகல்களைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குதல், விவாதம் நடத்திப் பின்னர் அதனை ஒருமனதாக நிறைவேற்றித் தருதல் என்கிற நடைமுறைகள் இல்லை. கூட்டத்தின் குறிப்பேட்டைக் கூட்டத்துக்கு எடுத்து வருதல், முந்தைய கூட்ட முடிவுகளை வாசித்தல் போன்ற நடைமுறைகள் இல்லை.
- கிராம சபைக் கூட்டத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று கிராம வளர்ச்சித் திட்ட அறிக்கையை மக்கள் பங்கேற்போடு தயாரித்தல். அது பற்றி வந்திருந்தவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர் ஒருவர், “நான் கேட்டுக்கொண்ட எதையும் நீங்கள் செய்து தரவில்லை. இந்த மன்றத்தின் ஆயுள்காலம் முடிவதற்குள் எனது வார்டில் ஒரு கிராம சபைக் கூட்டம் நடத்துங்கள் என்று கேட்டுப் பார்த்தேன். அதனைக்கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. அடுத்த முறை எப்படி மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பது?” என ஆதங்கப்பட்டார். அதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.
- கிராம சபையின் மின்சாரம், தண்ணீர்க் கட்டணம் பெருமளவு பாக்கி இருப்பதால், அதனை ஒட்டிய பணிகளுக்கு உடனடியாகச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுக முடியவில்லை எனத் தலைவராகச் செயல்படுபவர் கூறினார். கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பலரிடம் பேசியபோது, அவர்கள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை.
- அதே பகுதியில் அர்ப்பணிப்பு உணர்வு உள்ள சில குடிமக்கள் உள்ளனர். அவர்களின் தொடர் பங்கேற்பு அனுபவம் வாயிலாகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். “கிராமப் பஞ்சாயத்துச் செயலரைத் தாண்டி எதுவும் நடப்பதில்லை. இந்த விஷயத்தை அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டோம். எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றனர்.
- சென்னையில் உள்ள கிராம வளர்ச்சி இயக்கத்திலிருந்து கூட்டப் பொருள் வந்துவிடுகிறது. அதனைத் தாண்டி எந்தக் கூட்டப் பொருளையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை. மக்கள் முன்மொழியும் எந்தத் தீர்மானமும் அங்கேயே விவாதம் செய்யப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்படுவதில்லை. கிராம சபைக் கூட்டக் குறிப்பேட்டில் ஏற்றுவதும் இல்லை என்றார்கள். கிராம ஊராட்சி மன்றச் செயலாளர் கடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவரது உதவியாளரே கலந்துகொண்டார். கேட்கப்பட்ட விவரங்கள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
- மாணவர்கள், பேராசிரியர்களோடு கல்லூரி முதல்வரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். “கிராம சபையின் வாயிலாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்தால், எங்கள் கல்லூரி மாணவர்களை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார். மாணவர்கள் பெருத்த உற்சாகம் அடைந்தனர். அவர்கள் எல்லோருக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது.
- சில குறிப்பிட்ட, பிரத்யேகமான சூழ்நிலையில் மட்டுமே, கிராம சபையே நில ஆக்கிரமிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டது போன்ற சூழலில் மட்டுமே கிராம சபைக் கூட்டங்களின் தீர்மானங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். அப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட கிராம சபைக் கூட்டங்கள் எவ்வளவு சிறப்பாக நடைபெற வேண்டும்? கிராமப் பஞ்சாயத்து மக்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கொண்டாடி மகிழ வேண்டிய திருவிழாவாக கிராம சபைக் கூட்டங்கள் மாறுவது எப்போது?
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 10 – 2024)