TNPSC Thervupettagam

கூட்டாட்சியில் நிதிப் பகிர்வு: உள்ளாட்சிகளுக்குப் பொருந்தாதா?

November 7 , 2024 66 days 94 0

கூட்டாட்சியில் நிதிப் பகிர்வு: உள்ளாட்சிகளுக்குப் பொருந்தாதா?

  • கனிம வளங்கள் மீதான வரியை வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கா மத்திய அரசுக்கா என்பது தொடர்பான வழக்கில், மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் என உச்ச நீதிமன்றம் அளித்​திருக்கும் தீர்ப்பு பெரும் கவனம் ஈர்த்திருக்​கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிப​திகள் கொண்ட அமர்வின் இந்த உத்தரவு, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் மிகவும் முக்கிய​மானது. இந்த விவாதத்தின் நீட்சியாக, உள்ளாட்சி நிர்வாகத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் பேசப்பட வேண்டும்.

மாநிலச் சட்டங்​களின் வலிமை:

  • அரசமைப்புச் சட்டக்கூறு 246, அட்டவணை 7, மத்திய அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 1), மாநில அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 2), மத்திய - மாநில அரசுகள் இரண்டுக்​குமான ஒருங்​கிணைந்த அதிகாரங்கள் (பட்டியல் 3) ஆகியவற்றை விளக்கு​கிறது.
  • மத்திய அரசுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் பட்டியல் 1, வரிசை எண் 54இல் (Entry 54 of List I) சுரங்​கங்கள், கனிமங்​களின் வளர்ச்சியை ஒழுங்​குபடுத்​தவும் மேம்படுத்​தவும் நாடாளு​மன்றம் வகுக்கும் சட்டத்தால் அறிவிக்​கப்​படும் அளவுக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனக் குறிப்​பிட்​டுள்ளது.
  • இந்தப் பட்டியல் 1, வரிசை எண் 54இல் குறிப்​பிடப்​பட்​டிருப்பவை மாநில அரசுகள் வரி விதிக்கும் அதிகாரத்தைக் கட்டுப்​படுத்துமா இல்லையா என்பதே முக்கிய கேள்வியாக எழுந்தது. இங்கு​தான், மாநில அரசுகளுக்குக் கனிம வளங்கள் மீதான வரி விதிப்பு குறித்து அதே ஏழாவது அட்டவணைப் பட்டியல் 2, வரிசை எண் 50இல் (Entry 50 of List II), கனிம மேம்பாடு தொடர்பான சட்டத்தின் மூலம் நாடாளு​மன்​றத்தால் விதிக்​கப்​படும் வரம்பு​களுக்கு உட்பட்ட கனிம உரிமைகள் மீதான வரிகள் விதிப்​ப​தற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிடு​கிறது.
  • பட்டியல் இரண்டு, வரிசை எண் 50இல் உள்ள இதனைக் குறிப்​பிட்டு, கனிம வளங்களை ஒழுங்​குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருந்​தாலும் வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது எனத் தீர்ப்பு வழங்கப்​பட்டு இருக்​கிறது. தங்களுக்கு வகுத்​தளிக்​கப்​பட்​டுள்ள அதிகாரங்​களுக்கு உட்பட்டு மாநில அரசுகள் இயங்கும்​போது, அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதை மிகத் தெளிவாக இந்த அமர்வு குறிப்​பிட்​டிருக்​கிறது. மேலும், மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்​களுக்குக் குறைவானவை அல்ல என்றும் நீதிப​திகள் சுட்டிக்​காட்​டி​யிருக்​கின்​றனர்.

உள்ளாட்​சிகளின் நிலை என்ன?

  • மாநிலங்​களுக்கு எதிரான மத்திய அரசின் பாரபட்ச நிதிப் பகிர்வு முறையை தமிழ்​நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் சுட்டிக்​காட்டும் அதே நேரத்​தில், தங்கள் நிதிப் பகிர்வை எதிர்​பார்த்துக் காத்திருக்கும் தங்கள் உள்ளாட்​சிகளுக்கு உரிய நிதி ஒதுக்​கீட்டினை அம்மாநிலங்கள் செய்திருக்​கின்றனவா என்பதையும் பார்ப்பது அவசியம்.
  • உள்ளாட்​சிகளுக்கான நிதிப் பகிர்வில் முன்னு​தா​ரணமாக இருக்கும் கேரள அரசு, இன்றளவும் தனது உள்ளாட்​சிகளுக்குச் சுமார் 27% வரை நிதி ஒதுக்​கிவரு​கிறது. ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதும் கேரள ஊராட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் நிதி வெளிப்​படையாக ஓர் இணைப்புப் பட்டிய​லாகவே தாக்கல் செய்யப்​படு​கிறது. இதற்கு மாறாக, தமிழ்நாடு அதிகபட்சமாக 10% நிதியைத்தான் உள்ளாட்​சிகளுக்கு ஒதுக்​கிவரு​கிறது. 1996இல் 8%ஆக இருந்த உள்ளாட்​சிகளுக்கான மாநில அரசின் ஒதுக்​கீடு, கடந்த 25 ஆண்டு​களில் 2% அளவுக்கே உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது.
  • மேலும், மாநில நிதிக் குழு நிதி (SFC) ஓர் ஊராட்​சிக்கு எவ்வளவு ஒதுக்​கப்​பட்டு இருக்​கிறது என்பதில் வெளிப்​படைத்​தன்மை இல்லாமல், எப்போது, எவ்வளவு தொகை வரும் என்று கணிக்க முடியாத நிலையில், அது எப்போது வேண்டு​மானாலும் நிறுத்​தியும் வைக்கப்​படலாம் என்கிற போக்குதான் தமிழ்​நாட்டில் தொடர்ந்து நிலவிவரு​கிறது. இதனால், சிறிய ஊராட்​சிகள்​கூடத் தங்கள் நிதி வருவாயைத் திட்டமிட முடியாத சூழல் நீடிக்​கிறது.
  • இவ்வாறு மிகக் குறைவாக ஒதுக்​கப்​படும் மாநில நிதிக் குழு ஒதுக்​கீட்​டினை​யும்கூட முழுமையாக ஊராட்​சிகள் பெற முடிவ​தில்லை. ஊராட்​சிகளுக்கு நேரடியாக வர வேண்டிய மாநில நிதிக்​குழு, நிதி ஒதுக்​கீட்டில் குறிப்​பிட்ட தொகையை உள்ளாட்​சிகளின் எந்தவித ஒப்பு​தலும் இல்லாமல் மாநில அளவிலேயே பிடித்​துக்​கொண்டு, வேறு திட்டங்​களுக்கு ஏறத்தாழ ரூ.900 கோடி வரை திருப்​பி​விடப்​பட்​டிருக்​கிறது. இது 2023 – 24ஆம் நிதி ஆண்டில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்​சிகளுக்காக ஒதுக்​கப்பட்ட மொத்த மாநில நிதிக்குழு நிதியில் (ரூ.6,578.5 கோடி) கிட்டத்தட்ட சுமார் 13% நிதியாகும்.
  • பல ஆண்டுகளாக உள்ளாட்​சிகளின் அடிப்​படைப் பணிகளுக்கு மிகவும் உதவியாக இருந்த முத்திரைத்தாள் வரி, சிறுகனிம வரி, கேளிக்கை வரி உள்ளிட்​ட​வற்றின் தொகுக்​கப்பட்ட நிதியையும் தமிழ்நாடு அரசு விட்டு வைக்க​வில்லை. ஊராட்​சிகளுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்​காமல், தன்னிச்​சையாக முடிவெடுத்து இந்த நிதியின் ஒரு பகுதியை மாநில அரசின் திட்டத்​துக்கு மாற்றிக்கொண்டு​விட்டது.
  • மேலும், மாநில நிதிக் குழு நிதி எந்தெந்த வகையில் பயன்படுத்​தப்பட வேண்டும் என்கிற வரையறை சென்னை​யிலேயே நிர்ண​யிக்​கப்​பட்டு விடுகிறது. அவை ஊராட்​சியில் நிர்ண​யிக்​கப்​படு​வதற்கான சாத்தியம் மிகக் குறைவு. அதோடு, கிராம ஊராட்​சிகள் பராமரித்துவந்த சொந்த வருவாய்​களுக்கான வங்கிக் கணக்கு​களைக்​கூடப் பராமரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்​பட்டு, சென்னையில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கில் தமிழ்​நாட்டின் அனைத்து ஊராட்​சிகளுக்​குமான நிதி பராமரிக்​கப்​பட்டு வருகிறது.

நிதிச் சுதந்​திரம்:

  • உள்ளாட்​சிக்கான நிதிப் பகிர்வு தொடர்பான மாநில அரசின் கட்டுப்​பாடுகள் ஒரு பக்கம் இருக்க, ஊராட்சி ஒன்றிய அலுவலக அளவில் வரும் வாய்மொழி உத்தர​வு​களும், அரசியல் அழுத்​தங்​களும் உண்மையில் நேரடி​யாகவும் மறைமுக​மாகவும் ஊராட்​சியின் நிதிச் சுதந்​திரத்தைக் கேள்விக்​குள்​ளாக்கி இருக்​கின்றன. உள்ளாட்​சிக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்ததைப் போன்ற ஒரு போராட்​டத்தை நடத்த வேண்டும் என்றால், தினம் தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்திலோ சேப்பாக்​கத்திலோ உள்ளாட்​சிகள் போராட்​டங்களை நடத்திக்​கொண்​டுதான் இருக்க வேண்டி​யிருக்​கும். அப்படி இருக்​கிறது உள்ளாட்சிகளின் நிதி நிலை!

கடமைகளை நிறைவேற்ற முடியுமா?

  • கனிம வளங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தர​வில், ‘அரசமைப்பு வழங்கி உள்ள பொறுப்பு​களைச் செயல்​படுத்து​வதற்கு மாநில அரசுகளுக்கு உரிய நிதி ஆதாரங்கள் இருக்க வேண்டும்’ எனச் சுட்டிக்​காட்​டப்​பட்​டுள்ளது. கூட்டாட்சி நிர்வாகத்தில் முறையான நிதிப் பகிர்வு முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக இருக்கும் இந்தக் கருத்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பொருந்​தக்​கூடியது​தான். நிதி ஆதாரங்கள் இல்லாமல் அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ள பொறுப்புகளை எவ்வாறு உள்ளாட்​சிகளால் செயல்​படுத்த முடியும்?
  • தமிழ்நாடு ஊராட்​சிகள் சட்டம் 1994 பிரிவு 110 இன்படி குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு அமைத்தல், கிராமப்புறச் சந்தைகளை அமைத்தல், சுடுகாடு/ இடுகாடு அமைத்தல், குளங்கள் பராமரிப்பு, பொதுக் கழிப்​பறைகள் - தனிநபர் இல்லக் கழிப்​பறைகளை அமைத்தல், கழிவு நீர்க் கால்வாய்கள் - மழைநீர்க் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் ஒரு கிராம ஊராட்சி தன் மக்களுக்​காகச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளாகக் குறிப்​பிடப்​பட்டுள்ளன.
  • இந்தக் கட்டாயக் கடமைகளை நிறைவேற்று​வதற்கான நிதி இல்லாமல் என்ன செய்ய முடியும்? மக்களிடம் தினம் தினம் வசைமொழிகளைத்தான் வாங்க முடியும். அதுதான் நடந்து​கொண்​டிருக்​கிறது தமிழ்​நாட்டு உள்ளாட்​சிகளில்!

மாற்றம் வருமா?

  • அரசமைப்புச் சட்டக்கூறு 246 இன்படி, மாநில அரசுகளுக்கு வகுத்​தளிக்​கப்​பட்​டுள்ள அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் உறுதி​செய்​துள்ளது. அதேவேளை, கிராமப்புற / நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கு உரிய நிதிகளை​யும், நிர்வாகி​களை​யும், பணிகளை​யும், அதிகாரங்​களையும் அவை தன்னாட்சி பெற்ற அரசுகளாகச் செயல்​படு​வதற்கு வழங்க வேண்டும் என அதே அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 243இல் குறிப்​பிடப்​பட்​டிருப்​பதைத் தமிழ்நாடு அரசு பல வேளைகளில் மிகச் சாதாரணமாக எடுத்​துக்​கொள்​கிறது அல்லது மறந்தே​விடு​கிறது.
  • சட்டப்​படியான நிதிப் பகிர்​வு​களைப் பெற மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமை உள்ளாட்​சிகளுக்குக் கிடையாதா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசமைப்புச் சட்டக்கூறு 246ஐ நடைமுறைப்​படுத்​தும்​போது, சட்டக்கூறு 243ஐயும் உள்ளபடி நடைமுறைப்​படுத்து​வதுதானே முறையாக இருக்​கும்?

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்