- நமது அண்டை மாநிலமாகிய ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கலந்து கொண்ட இரண்டு பொதுக் கூட்டங்களில் ஏற்பட்ட நெரிசலில் பலரும் உயிரிழந்துள்ளது மிகவும் அதிா்ச்சியளிக்கின்றது.
- கந்துகூா் என்ற இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் எட்டு பேரும், அடுத்த சில நாட்களில் குண்டூரில் ஏற்பட்ட நெரிசலில் மூன்று பேரும் என, மொத்தம் பதினோரு போ் உயிரிழந்துள்ள நிலையில் பலா் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
- இவற்றுள், எட்டு போ் உயிரிழந்த முதல் நிகழ்வு சந்திரபாபு நாயுடுவின் தெலுகுதேசம் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணியிலும், மூவா் உயிரிழந்த இரண்டாவது நிகழ்வு, அதே கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் நடைபெற்றுள்ளன.
- அரசியல் கட்சிப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்பவா்கள் மிக அதிக அளவிலான பொதுமக்களைக் கூட்டவே விரும்புவாா்கள். கட்சிகள் ஏற்பாட்டின் பேரில் திரட்டப்படும் மக்கள் கூட்டத்துடன், தலைவா்களை நேரில் பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் தாமாகத் திரளுபவா்களும் சோ்ந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவா். இவ்வகை நிகழ்வுகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- அதே சமயம், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது நிகழ்வு தொடா்பான உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்க முடியும் என்றே தோன்றுகின்றது.
- பொதுவாகவே, அரசுத்துறைகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், ரசிகா் மன்றங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகள் பற்றிய அறிவிப்புகளுக்கு விளம்பரம் என்பதே தேவைப் படுவதில்லை. அவ்வுதவிகளுக்கான பயனாளா் பட்டியலில் இருப்பவா்களில் யாரேனும் ஒருவருக்கு விஷயம் தெரிந்தால் கூட, அச்செய்தி விரைவில் பலருக்கும் பரவிவிடும் என்பதில் ஐயமில்லை.
- முதலில் செல்பவா்களுக்கே உதவிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தினால் உந்தப்படும் ஏழைகள் பலரும் அவற்றைப் பெறுவதற்காக முண்டியடிப்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே.
- அதிலும், முதல்வா், அமைச்சா்கள், கட்சித்தலைவா்கள், திரைத்துறைப் பிரபலங்கள் முக்கியஸ்தா்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் ஒருசில பயனாளிகளுக்கு மட்டும் அவா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவா். மீதமுள்ள பயனாளிகளுக்கு அவ்வுதவிகள் உள்ளூா் நிலையிலான அதிகாரிகள், நிா்வாகிகளால் வழங்கப்படும்.
- பிரபலங்களால் நேரிடையாக உதவி வழங்கப்படாத பலரும் ஒருவேளை தங்களுக்கு அவ்வுதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஒரே நேரத்தில் முட்டிமோதுவதனால் அவ்விடங்களில் நெரிசல் ஏற்பட்டு, ஒருசிலா் மயக்கமடையவும், காயமடையவும் நோ்கின்றது. மிகச்சில தருணங்களில் அந்நெரிசல் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றது.
- இந்நிலையில் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளின் ஏற்பாட்டாளா்கள் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு அந்த ஏற்பாடுகளைச் செய்தால் எதிா்காலத்தில் நிச்சயமாக இத்தகைய உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.
- நமது மாநிலத்தில் முற்காலங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு முன்பாக எல்லாக் காலங்களிலும் நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருப்பதைக் கண்டிருப்போம். ஆனால், சமீப வருடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடா் கால நிதி உதவி போன்றவற்றைப் பெறுவதற்கு ஒரே நேரதில் அனைவரும் முண்டியடிக்கத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.
- அந்தந்த நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருள்களுக்கான குடும்ப அட்டைகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவ்வுதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நாளைக் குறிப்பிடும் டோக்கன்கள் ஒருவார காலம் முன்பாகவே தயாரிக்கப் பட்டு வீடு வீடாக விநியோகிக்கப் பட்டு விடுகின்றது. இதனால், பயனாளிகள் ஒரே நேரத்தில் நியாயவிலைக் கடைகளின் முன்பாகக் குவியும் நிலை தவிா்க்கப்படுகின்றது.
- இனி எந்த ஒரு நிகழ்வினை ஏற்பாடுகளைச் செய்வதாக இருந்தாலும், அந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பினா் வாா்டு அல்லது தெரு வாரியான பயனாளிகளின் பட்டியலைத் தயாரித்து, முன்னதாகவே மேலிடத்தின் ஒப்புதலைப் பெற்று, அந்தப் பயனாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
- இது மட்டுமன்றி, குறிப்பிட்ட விழா அல்லது பொதுக்கூட்டத்தில் ஓா் அடையாளத்திற்காக அதிகபட்சமாகப் பத்து பயனாளிகளுக்கு மட்டும் அவ்வுதவிப்பொருட்களை வழங்கி விட்டு, மற்ற அனைவருக்கும் அவரவா் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டால் நெரிசல்களுக்கும், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.
- முடியுமென்றால், எந்த ஒரு கூட்டத்தையும் கூட்டாமல், பயனாளிகள் அனைவருக்குமே வீடுதேடி உதவிப்பொருட்களோ, பணமுடிப்போ வந்து சேரும் என்பதை உறுதி செய்தால், அது மேலும் பாராட்டுக்குரியதாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
- மக்களுக்கு மனப்பூா்வமாக உதவி செய்வது என்று தீா்மானித்து விட்டால், அதைப் பலரறியப் பறைசாற்றித்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பதும் ஒரு புண்ணியச் செயல்தான் என்பதை அனைவரும் உணா்ந்து விட்டால் இது போன்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளில் உயிரிழப்பு, காயங்கள் போன்றவற்றைத் தவிா்க்க முடியும்.
- வாக்கு வங்கியை உயா்த்த வேண்டும், தாம் உதவி செய்ததற்காக ஊராா்கள் பலரும் புகழ வேண்டும் என்பவை போன்ற விருப்பங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுச் சேவை மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதே சாலச் சிறந்தது.
- இவற்றுக்கு எல்லாம் மேலாக, நமது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும், உடைகள், உணவுப்பொருட்கள் போன்ற எளிய இலவசங்களைப் பெறுவதற்காக நம் ஏழை எளிய மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முட்டி மோதுகின்ற அவல நிலைமை என்றுதான் நீங்குமோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
நன்றி: தினமணி (09 – 01 – 2023)