- கரோனா தாக்குதலில் நிலை குலைந்துபோன கேரளம், சற்றே நிமிர்ந்துவரும் தருணத்தில், ‘நோரோ வைரஸ்’ (Norovirus) எனும் பெயரில் ஒரு புதிய அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது.
- அங்கு வயநாடு மாவட்டத்தில் பூக்கோடு கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்குத் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது.
- கரோனா, நிபா, ஜிகா என கேரளாவை மிரட்டிவரும் பலதரப்பட்ட வைரஸ்கள் வரிசையில் இப்போது புதிதாக நோரோ வைரஸ் இணைந்துள்ளது.
எது நோரோ வைரஸ்?
- நோரோ வைரஸ் விலங்குகள் மூலம் மக்களுக்குப் பரவும் வைரஸ். தமிழ்நாட்டில், மழைக் காலங்களில் குழந்தைகளின் குடலைக் கெடுக்கும் ‘ரோட்டா வைரஸ்’ போன்றதொரு வைரஸ் எனச் சொல்லலாம்.
- ஆனாலும், இது மக்களுக்குப் பரவும் வேகமும் விகிதமும் ரோட்டா வைரஸைவிடப் பல மடங்கு அதிகம். கைச்சுத்தம் காத்தால் இதனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது உண்மை தான்.
- ஆனாலும், தரமற்ற கைச்சுத்திகரிப்பான்களுக்கு இது கட்டுப்படாமல் தப்பிவிடும்.
- அதிலும், சமீபத்திய கனமழையைத் தொடர்ந்து குண்டும் குழியுமாகிப்போன இடங்களில் தேங்கியிருக்கும் அசுத்தங்களில் நோரோ வைரஸ் வளமாகக் குடித்தனம் நடத்தும்.
- இது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் முதியவர்களுக்கும், தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்; விடுதிகள், மக்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் மற்றும் நெருக்கமான வசிப்பிடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு எளிதாகத் தொற்றிவிடும்.
- நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலைபோல் இந்த வைரஸும் ஒரே நேரத்தில் பல பேரைத் தொற்றினால், மீண்டும் மருத்துவமனைகளைத் தேடிக் கும்பல்கும்பலாக மக்கள் அலைய வேண்டிய அவலம் ஏற்படும். அதனால்தான் இந்த வைரஸ் இப்போது நம் கவனத்தைப் பெறுகிறது.
- உலக அளவில் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிற 5 நோயாளிகளில் ஒருவருக்கு நோரோ வைரஸ் பாதிப்பே முதன்மைக் காரணமாக இருக்கிறது.
- ஆண்டுதோறும் 68.5 கோடிப் பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 20 கோடிப் பேர் 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள். வருடத்துக்கு 50 ஆயிரம் குழந்தைகள் இதன் தாக்குதலால் இறக்கின்றனர்.
- தென்னிந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இதன் பாதிப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அலட்சியம் ஆபத்தானது என்பதால் இது குறித்த எச்சரிக்கை இப்போது அவசியமாகிறது.
பரவுவது எப்படி?
- பாதுகாக்கப்படாத உணவு, சுத்தம் குறைந்த உணவு ஆகியவற்றின் வழியாக அடுத்தவர்களுக்கு இது பரவும்.
- இந்த வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கையாளும் உணவைச் சாப்பிடுவது அல்லது அவர் தொட்ட இடங்களைப் பிறர் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவலாம்.
- பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுக்கும்போது அது அருகில் உள்ளவர்மீது படும்போதும் அதன் நுண்ணிய துகள்கள் வைரஸ் பரவக் காரணமாகலாம்.
- சிறு துளி விழுந்தாலும் அது உணவிலும் தண்ணீரிலும் கலந்துவிடலாம். வெள்ளம் ஏற்படும் காலங்களில் அசுத்தமான தண்ணீரிலிருந்து இந்தக் கிருமிகள் குளத்து நீருடனும் ஆற்று நீருடனும் கலந்துவிடும். சாக்கடை நீர் குடிநீருடன் கலந்துவிடும்போதும் இது நிகழும்.
- அந்த அசுத்த நீரைச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போது அப்பகுதிவாழ் மக்கள் பலருக்கும் ஒரே நேரத்தில் இந்தத் தொற்று பரவக்கூடும். ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், பல்லிகள் போன்றவையும் இந்தக் கிருமிகள் பரவக் காரணமாகலாம்.
அறிகுறிகள் என்னென்ன?
- திடீரென்று தொடங்கும் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும்தான் இந்த வைரஸ் பாதிப்புக்கான முதன்மை அறிகுறிகள்.
- இவற்றோடு, உடல்வலி, வயிற்றுவலி, காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்றவையும் உடனிருக்கும்.
- இதைச் சாதாரண வயிற்றுப்போக்கு என நினைத்து வீட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால், உடல் நலன் சட்டென்று மோசமாகிவிடும்.
- அதாவது, அளவுக்கு அதிகமாக நீரிழப்பு ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்து, நோயாளி மயக்க நிலைக்குத் தள்ளப்படுவார்.
என்ன சிகிச்சை? எப்படித் தடுப்பது?
- சாதாரண மலப் பரிசோதனையில் நோரோ வைரஸ் தெரியாது. ‘RT-PCR’ பரிசோதனையில்தான் இதைக் கண்டறிய முடியும். தொற்றாளரை வீட்டில் தனிமைப்படுத்தியோ மருத்துவமனையில் அனுமதித்தோ தான் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
- இதற்கென சிறப்புச் சிகிச்சை எதுவுமில்லை; தடுப்பூசியும் இல்லை. இதன் பாதிப்பு 3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அதுவரை உயிர்காக்க உதவும் ஆதார சிகிச்சைகளே வழங்கப் படும். காய்ச்சிய தண்ணீரும் ‘ORS’ கரைசலும் அவசரத்துக்கு உதவும்.
- எவ்வளவு விரைவாக உடலின் நீரிழப்பைச் சரிசெய்கிறோமோ அவ்வளவு விரைவாக இதன் பாதிப்பு கட்டுப்படும்; உயிராபத்து விலகும்.
- மாசடைந்த குடிநீரும் உணவும்தான் நோரோ வைரஸ்களை மக்களுக்கு எடுத்துச்செல்லும் முக்கிய வாகனங்கள்.
- அசுத்தமான இடங்களும் சுற்றுப்புறமும்தான் அவை விரும்பிச் செல்லும் வழித்தடங்கள். இவற்றைச் சரிசெய்வதே நோரோ வைரஸுக்குப் போடப்படும் சரியான கைவிலங்குகள்.
- அதற்கு முதலில் குடிநீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும். சமையலறையை வெகு சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காய்கறிகளையும் பழங்களையும் தண்ணீரில் கழுவுவதைவிட வினிகரில் கழுவினால் இந்தக் கிருமிகள் ஒழியும்.
- அசைவ உணவை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். சமைத்த உணவை ஈக்கள், எறும்புகள் மொய்க்காமலும், பல்லி, பூச்சிகள் கலந்துவிடாமலும் பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும்.
- சாப்பிடும் முன்பும் மலம் கழித்ததும் அல்லது குழந்தைகளுக்கு டயாப்பரை மாற்றி முடித்ததும் கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
- தொற்றாளரின் ஆடை, துண்டு, கைக்குட்டை, பாத்திரம், படுக்கைவிரிப்பு போன்றவற்றைச் சலவைத் தூள் கொண்டு தொற்று அகற்றுதலும், வீட்டிலும் அலுவலகத்திலும் அறைகளைத் தினமும் 2 முறை ‘சோடியம் ஹைப்போகுளோரைட்’ தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டியதும் முக்கியமான தடுப்புமுறைகளாகும்.
- மாநில எல்லைகளில் நோய்க் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது, மக்களுக்கு இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நாட்டில் பொதுக் கழிப்பறைகளையும் குடிநீர்க் கிணறுகளையும் தண்ணீர் சேமிப்புத் தொட்டிகளையும் சுத்தமாகப் பராமரித்து ஒவ்வொரு குடிநபருக்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்க உறுதிசெய்வது போன்றவை அரசுக்குத் தற்போதுள்ள அதிமுக்கியக் கடமைகளாகும்.
- நோரோ வைரஸ் மட்டுமல்ல, புதிய தொற்று எதுவானாலும் மக்களும் அரசும் எச்சரிக்கையாக இருந்து கரம் கோத்தால், அதன் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிடலாம்! கரோனா நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 - 11 - 2021)