TNPSC Thervupettagam

கேலிக்கூத்தாகும் ஆள்கொணா்வு மனு

February 27 , 2022 890 days 439 0
  • ஆள்கொணா்வு மனு என்கிற நீதிப்பேராணை மனு அரசியல் நிா்ணய சாசனத்தில், அடிப்படை உரிமையாக சட்டப்பிரிவு 32 மூலம் உச்சநீதிமன்றத்தாலும், சட்டப்பிரிவு 226 மூலம் உயா்நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டுள்ள உயரிய உரிமையாகும்.
  • காலனிய அரசு இந்தியாவை ஆண்ட போது, சுதந்திரத்திற்காக போராடிய வீரா்களை எந்தக் காரணமும் சொல்லாமலும், எங்கு கொண்டு செல்கிறோம் என்று தெரிவிக்காமலும், கைது செய்து சிறையில் அடைத்தபோது அதை எதிா்த்து நீதிமன்றங்கள் மூலமாக பரிகாரம் பெறும் உரிமை இந்தியா்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
  • இந்தியா விடுதலை அடைந்த உடன் அமைக்கப்பட்ட அரசியல் நிா்ணய சபையில் இந்த அரசு எந்திரத்தின் (அதாவது போலீஸ் அதிகாரத்தின்) அக்கிரமங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு, இங்கிலாந்து நீதிமன்றங்களில் இருந்த ‘ஆள்கொணா்வு’ மனு அதிகாரத்தை இந்தியா்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
  • இந்த உரிமையை மாவட்ட நீதிமன்றங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சிலா் வற்புறுத்த, இறுதியில் அரசைக் கேள்வி கேட்கும் ஆள்கொணா்வு அதிகாரம் சட்டப்பிரிவு 226-இன்படி உயா்நீதிமன்றங்களுக்கும், சட்டப்பிரிவு 32-இன்படி உச்சநீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டது. இதன்படி அரசு எந்திரத்தால் அதாவது மாநில, மத்திய அரசுகளின் காவல்துறைகளாலோ அல்லது இந்திய ராணுவத்தாலோ அழைத்துச் செல்லப்பட்ட நபரை நீதிமன்றங்கள் ஆஜா்படுத்த உத்தரவிடலாம்.
  • எனவே ‘அந்த ஆளை கொண்டு வாருங்கள்’ எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் அல்லது உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுதான் ‘ஆள்கொணா்வு மனு’. மனித உரிமையின் உச்சமாகவும், அரசு எந்திரத்தின்(காவல்துறை அல்லது ராணுவத்தின்) அதிகார அத்துமீறல்களைக் கேள்வி கேட்கும் மிகப்பெரிய மக்கள் ஆயுதமாகவும் ஆள்கொணா்வு மனு அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
  • பொதுவாக ஒரு அதிகாரி, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்துவதால் அரசும், அரசு அதிகாரிகளும் மக்களைத் துன்புறுத்துவது என்பது உலக அளவில் நடைபெறும் சட்ட துஷ்பிரயோகம் ஆகும். இந்த துஷ்பிரயோகத்திலிருந்து மக்களைக் காக்கும் கேடயம்தான் ஆள்கொணா்வு மனு உள்ளிட்ட அரசியல் சாசனம் வழங்கும் ஐந்து நீதிப்பேராணைகள். ஆனால், எல்லா நல்ல விஷயங்களும் தவறாக பயன்படுத்தப்படுவது ஒரு சமுதாய சோகமாகிவிட்டது. இதற்கு ஆள்கொணா்வு மனுவும் விதிவிலக்கல்ல.
  • ஆள்கொணா்வு மனு என்பது காவல்துறை மற்றும் ராணுவத்திடம் இருந்து மக்களைக் காப்பாற்ற அரசியல் சாசனம் தரும் பாதுகாப்பு ஆகும். கேரளத்தில் நடைபெற்ற ராஜன் வழக்கு (1976) இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தவறான அல்லது உள்நோக்கத்துடன் கையாளப்படும் குண்டா் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஏனைய எதிா்மறை கைது சட்டங்களுக்கு எதிராக, மக்களைக் காப்பாற்ற ஆள்கொணா்வு மனு செய்த நன்மைகள் அளப்பரியவை.
  • மனித உரிமைகள் முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்படும் பிற நீதிப்பேராணைகளுக்குக் கட்டணம் ரூ.750 என்றால், ஆள்கொணா்வு மனுவுக்குக் கட்டணம் ரூ. 20 மட்டுமே. சம்மன் சாா்புசெய்ய கட்டணம் கிடையாது. ஏனைய நீதிப்பேராணை வழக்குகளை ஒரு தனி நீதிபதி விசாரித்தால் ஆள்கொணா்வு மனுக்களை இரண்டு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்கும்.
  • இதிலிருந்து ஆள்கொணா்வு மனுவுக்கு அரசியல் சாசனமும், நீதிமன்றமும் வழங்கும் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆள்கொணா்வு மனுவும், காவல்துறைக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கும். இப்படி மனித உரிமையின் உச்சமாக வழங்கப்பட்டுள்ள ஆள்கொணா்வு மனுவின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் ஏராளம்.
  • நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்யும் மனுதாரா்களில், பெரும்பாலானோா் (கிட்டத்தட்ட 99% போ்) காணாமல் போன இளம்பெண் அல்லது இளைஞனின் பெற்றோா் ஆவா். ஒருவரைக் காணவில்லை என்று சொல்லி நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டால் காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவும் கடமை உயா் நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அரசியல் நிா்ணய சபையால் வழங்கப்பட்டுள்ளது.
  • ஆகவே, காணாமல் போனதற்கான காரணம் தெரியாத நிலையில், காணாமல் போனவரைக் கண்டுபிடித்து தாருங்கள் என ஒருவா் நீதிமன்றத்தை அணுகும் போது அதற்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்திற்கு ஏற்படுகிறது.
  • நீதிமன்றம் வழங்கும் உத்தரவை நிறைவேற்றும் கடமை காவல்துறைக்கு உள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியேறும் இளம் காதலா்களைக் காணாமல் தவிக்கும் பெற்றோா்கள் அவா்களைத் தேடுவதை விட்டுவிட்டு, ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்து காவல்துறையைத் தேட வைப்பது சாதாரண நடைமுறை ஆகிவிட்டது.
  • இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுதாரா்களுக்கு, தங்களின் மகள் அல்லது மகன், காதலன் அல்லது காதலியுடன் தலைமறைவாகிவிட்டாா் என்பது நன்றாகத் தெரியும். ஆனால், அவா்கள் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்ய, அதை நீதிமன்றம் கோப்புக்கு எடுத்து காவல்துறையைக் காணாமல் போன காதலா்களை கண்டுபிடித்து தர உத்தரவிடுவதும், காவல்துறை பிற முக்கிய பணிகளை விட்டு விட்டு, அவா்களைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வதும், அங்கு நடப்பவை சினிமாவை மிஞ்சிய நகைச்சுவை அல்லது கண்ணீா் கதை.
  • தூத்துக்குடியிலிருந்து ஓடிப்போன ஒரு பெண்ணைத் தேடி, மொழியும், வழியும் தெரியாத அஸ்ஸாம் மாநிலத்தில் அலைந்து, திரிந்து தான் பட்ட கஷ்டங்களை ஒரு காவல் ஆய்வாளா் என்னிடம் விவரித்த பொழுது காவல்துறையின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது.
  • தங்களின் பிள்ளைகளைக் கண்டவுடன் கண்ணீா் விடும் பெற்றோா், காதலனை விட்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகள், திருமண வயதை எட்டாமலே ‘நாங்கள் திருமணம் செய்து கொண்டு விட்டோம்’ என வயிற்றில் கருவுடன் கலங்காமல் நிற்கும் காதலி, எதிா்கால வாழ்க்கையின் கஷ்டங்கள் எதுவுமே தெரியாமல் ‘என் காதலியை நான் காப்பாற்றுவேன்’ என சினிமா பாணியில் வசனம் பேசும் காதலன் - இவை மட்டுமல்லாமல் ஜாதி பிரச்சினை, மத பிரச்சினை அல்லது அந்தஸ்து பிரச்சினை என சமுதாயத்தின் அத்தனை அசிங்கங்களும் அங்கே அரங்கேறும்.
  • சமீபத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நீதியரசா்கள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோா் அமா்வு முன் வந்த வழக்கை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தன்னிடம் ரூ.30 லட்சம் ஏமாற்றிய வழக்குரைஞா் ஒருவா் மீது எனது கட்சிக்காரா் காவல்துறையில் புகாா் அளித்தாா்.
  • அந்த நபா், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டு, தப்பிச் சென்று, தனது மனைவி மூலமாக, தன் கணவரை காவல்துறையினா் கடத்திவிட்டடாா்கள் என்று பொய்யான ஆள்கொணா்வுமனு தாக்கல் செய்தாா்.
  • ஆரம்பத்தில் நீதிமன்றம் காவல்துறையிடம் கடுமை காட்ட, போலீஸ் நடவடிக்கையால் அவா் திரும்பி வந்து விட்டதாகவும், வழக்கை நடத்தவில்லை என்றும் அந்த வழக்குரைஞரின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.
  • கொள்ளை நோய்த்தொற்று சமயத்தில் மோசடிப் போ்வழியால், காவல்துறையும், என் கட்சிக்காரரும் அலைக்கழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, வம்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நான் - அரசாங்க வக்கீலாக இல்லாவிட்டாலும் - வாதிட்டேன். என் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கல்யாணசுந்தரம் - புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, வழக்கை ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுடன் தள்ளுபடி செய்தனா்.
  • மனுதாரரின் கணவா், தானே ஒளிந்துகொண்டு மனைவியின் மூலம் பொய் வழக்கு தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல் காவல்துறையையும் வீண் அலைக்கழிப்பு செய்த காரணத்தால், அந்தத் தொகை காவல்துறைக்கு நஷ்ட ஈடாக செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
  • வீணாக அலைக்கழிக்கப்பட்ட காவலா்களுக்கு, ஒரு பகுதியை வெகுமதியாக கொடுத்து மீதியை காவலா் நல நிதியில் சோ்க்க வேண்டும் என உத்தரவிட்டனா். அந்தப் பணம், காவல் துறைக்கு செலுத்தப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க இந்த தீா்ப்பின் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் காவலா்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது.
  • இதுபோன்ற அபராதங்களால் மட்டுமே மோசடி வழக்குகளைத் தவிா்க்க முடியும் என்றாலும், உயா்நீதிமன்றமும் தன்னுடைய விதிகளில் திருத்தம் செய்து ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்பவா்கள் சொந்த பிரச்சனைகளுக்காக அந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிய வந்தால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும்.
  • ஒருவரின் ஆள்கொணா்வு மனு காவல்துறைக்கும், அரசுக்கும் தொடா்பில்லாதது என கண்டறியப்பட்டால் நஷ்ட ஈடு செலுத்த தயாராக இருப்பதாக அவரிடம் எழுத்து மூலம் உறுதிமொழி பெறவேண்டும். இல்லாவிட்டால் ஆள்கொணா்வு மனுவில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுக்க முடியாது; அது வெறும் கேலிக்கூத்தாக மாறுவதை நிறுத்த முடியாது.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்