TNPSC Thervupettagam

கேள்விக்குறியாகும் பொதுத் தேர்வுகள்

July 29 , 2024 167 days 160 0
  • சமுதாயம் தொடர்பான அடிப்படை புரிதலையும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்தி, ஒரு குழந்தையை மனிதனாக மாற்றுவதில் பள்ளிக் கல்விக்கு மிக முக்கியப் பங்குண்டு. கல்வி முறையில் அடிப்படைப் புரிதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மதிப்பெண் முறை ஆதிக்கம் பெற்றது.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2 பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவது பெரும் சாதனையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், இன்றோ அந்த மதிப்பெண்களுக்குப் போதிய மதிப்பு இல்லாத சூழல். முன்பு மருத்துவம், பொறியியல், கலை-அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. அதிக மதிப்பெண்களுடன் மாணவர்களை முன்னிலை பெறச் செய்வதிலும், நூறு சதவீத தேர்ச்சி பெறச் செய்வதிலும் அரசு-தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இன்று அப்போட்டியில் தனியார் பயிற்சி மையங்களும் இணைந்துவிட்டன.
  • அனைத்து வகை மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் பொறியியல், கலை- அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் அந்தந்த மாநிலங்களே நடத்தி வருகின்றன. அதற்கும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படலாம்.
  • உயர்படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் அந்த மதிப்பெண் மட்டுமே மாணவர் சேர்க்கைக்குக் கருத்தில் கொள்ளப்படுகிறது. பள்ளிப் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மதிப்பிழந்துவிடுகிறது. அதனால், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற கட்டாயமே மாணவர்களுக்கு இல்லாமல் போகிறது. மேலும், பொதுத் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நுழைவுத்தேர்வுக்கு மட்டுமே மாணவர்கள் தயாராவதைப் பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர். அதனால் பொதுத்தேர்வுகளே கேள்விக்குறியாகும் நிலை உருவாகிவருகிறது.
  • இந்தச் சூழலைத் தனியார் பயிற்சி மையங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பயிற்சி மையங்களில் இணைந்து படித்தால்தான் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும் என்ற மாயபிம்பம் சமூகத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதைப் பெற்றோரும் உறுதியாக நம்புகின்றனர்.
  • முன்பு, கடுமையாக உழைத்து தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க முயன்ற பெற்றோர், தற்போது அவர்களைப் பயிற்சி மையங்களுக்கு அனுப்ப போராடி வருகின்றனர்.
  • பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அந்தச் சுமையைத் தாங்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்காகப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்த்துவிடப்படுகின்றனர். பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களுக்கு அந்த மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அந்தப் போக்கை பெற்றோரும், பயிற்சி மையங்களும், சில ஆசிரியர்களுமே கூட ஊக்குவிக்கின்றனர்.
  • அரசு, தனியார் பள்ளிகளிலும் கூட நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்னும் சில தனியார் பள்ளிகள் ஒருபடி முன்னே சென்று, தனியார் பயிற்சி மையங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, 8-ஆம் வகுப்பு முதலே நுழைவுத்தேர்வுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கின்றன. மொழிப்பாடங்கள் தெரிந்தே தவிர்க்கப்பட்டு, நுழைவுத்தேர்வுக்குப் பயன்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் பயிற்சி மையங்கள் கவனம் செலுத்துகின்றன.
  • பயிற்சி மையங்களில் சேர்ந்தால் மட்டுமே நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற பிம்பம், பள்ளி மாணவர்களிடம் கடும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பெரும் பொருளை செலவிட்டு தனியார் பயிற்சி மையங்களில் இணையும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம் எப்போதும் காணப்படுகிறது. அதனால், பயிற்சித் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவாவதைக் கூட அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அத்துடன் சேர்த்து, சில பொறுப்பற்ற பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்களின் அழுத்தம் காரணமாக சில மாணவர்கள் தவறான முடிவை எடுத்துவிடுகின்றனர்.
  • நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னணி நகராக ராஜஸ்தானின் கோட்டா திகழ்கிறது. அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதீத அழுத்தம் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான செய்தியாகிவிட்டது.
  • தோல்வியைக் காணாமல் வெற்றி அடைய முடியாது என்பதையும், ஒன்று கிடைக்கவில்லை எனில் வேறொன்று கிடைக்கும் என்பதையும் 12 ஆண்டு பள்ளிக் கல்வியும், ஆசிரியர்களும் கற்பிக்கவில்லை எனில், நம் கல்வி முறையில் மிகப் பெரிய தவறு இருக்கிறது என்றே பொருள். தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் தரும் பெற்றோரையும் இந்த விஷயத்தில் நாம் குற்றம் கூறியே ஆக வேண்டும்.
  • உயர்கல்வி மாணவர் சேர்க்கையின்போது, நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்து பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் குறிப்பிட்ட சதவீதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். பயிற்சி மையங்களுக்குச் செல்லாமலேயே நுழைவுத்தேர்வுகளில் பல மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர். சுய முயற்சியில் கடும் பயிற்சியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால், எந்த நுழைவுத்தேர்விலும் மாணவர்கள் எளிதில் வெற்றி காண முடியும்.
  • அடிப்படையாக, கற்றலில் மாணவர் ஈடுபாடு காட்ட வேண்டும். அதற்கே அனைத்து தரப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். வெறும் தனியார் பயிற்சி மையங்களை மட்டும் நம்பாமல், பள்ளிக் கல்வியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், பள்ளி நிர்வாகம் என அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது.

நன்றி: தினமணி (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்