TNPSC Thervupettagam

கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்குமா அரசு?

December 28 , 2021 950 days 431 0
  • கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்துத் தொழில் துறைகளுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், கைத்தறி நெசவாளர்கள் மற்ற எல்லோரையும் விட மிக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெருந்தொற்று மட்டுமின்றி எதிர்பாராத பெருமழைகளின் காரணமாகவும் கைத்தறி நெசவுத் தொழில் கடும் சவால்களைச் சந்தித்துள்ளது.
  • கைத்தறி நெசவாளர்கள் தங்களது தொழிலைக் கைவிட்டு, வேறு தொழில்களுக்கு மாற ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மற்ற துறைகளிலும் உடனடி வேலைவாய்ப்புகளுக்கு எந்த உறுதியும் இல்லை.
  • குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கைத்தறி நெசவுத் துறைதான் அதிகளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது.
  • இந்நிலையில், கைத்தறி நெசவாளர்களைக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை அரசுக் கொள்கைகளை ஆராயும் ஆய்வு நிறுவனங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
  • அரசுக் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம்(சிபிடிஎஸ்) என்ற ஆய்வு நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகள் கைத்தறியில் தைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.
  • இதன் மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள 2.5 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் மட்டும் தொடக்கப் பள்ளி தொடங்கி மேனிலைப்பள்ளி வரையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 1.25 கோடி. இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நெசவாளர்களை ஆதரிக்கும்வகையில் கைத்தறிச் சீருடைகள் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிச் சீருடைக்குக் கைத்தறியைக் கட்டாயமாக்கினால், அதற்கான தேவை அதிகரிக்கும் என்ற நோக்கிலேயே இத்தகைய ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன.
  • ஆனால், சீருடைகள் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவமைப்புகளில் பின்பற்றப்பட்டுவருகின்றன. அந்த உடனடித் தேவையைக் கைத்தறி நெசவாளர்களால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
  • அதே நேரத்தில், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியையும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்கூட்டியே உணராமலும் இல்லை.
  • கடந்த ஜூலை மாதத்திலேயே கைத்தறித் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் வாரம் இருநாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கினார்.
  • முதல்வரின் நோக்கத்தை அரசு ஊழியர்கள் தாமாகவே முன்வந்து நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கலாம். இன்னும் அது சிலரின் தனிப்பட்ட தேர்வாகவே தொடர்கிறது.
  • வாரத்தில் குறைந்தபட்சம் ஒருசில நாட்களிலாவது கைத்தறி ஆடைகள் அணிவதைப் பின்பற்றுமாறு துறைசார்ந்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலொழிய அது அனைவராலும் கடைப்பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
  • கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் மாணவர்களே விரும்பி கைத்தறி அணிவதையும் பார்க்க முடிகிறது. மஞ்சப்பை இயக்கம்போல, கைத்தறி ஆடை அணிவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டிய தேவை உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்