- பெருநகரங்களில் நம் வீட்டைச் சுற்றி, சிட்டுக்குருவிகளை முன்புபோல் காண முடிவதில்லையே என்று நம்மில் பலரும் யோசிப்பது உண்டு. நம்மைச் சுற்றி தேன்சிட்டு, தவிட்டுக் குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி எனப் பல பறவை இனங்கள் இருந்தும், சிட்டுக்குருவிகளுக்கு நம் மனங்களில் ஒரு தனி இடம் உண்டு.
- அதற்குக் காரணம் மற்ற பறவைகளைப் போல இல்லாமல், நம்மை அண்டி வாழப் பழகியது சிட்டுக்குருவி. நம் அருகிலேயே விளையாடி, நமது வீட்டுக்குள்ளே கூடு கட்டிக்கொண்டு, அரிசியை முறத்தில் புடைக்கும்போது சிதறும் தானியங்களையும் வண்டுகளையும் தின்று, நம்முடனே வாழ்ந்த பறவையைப் பிரித்துப்பார்க்க முடியுமா?
- ஆனால், நம்முடன் அது காட்டிய நெருக்கம்தான், நகரங்களில் அவற்றின் அழிவிற்கும் காரணம் என்றால் நம்ப முடியுமா?சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைச் சரிவைப் பற்றி பேசினாலே, அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் சக்திவாய்ந்த மின்காந்த அலைகளின் மீதுதான் பெரும்பாலோர் குற்றம் சுமத்துவார்கள். பல காலமாக வாட்ஸ்அப் வதந்திகளில் பரவிவந்த இச்செய்தி, 2018ஆம் ஆண்டு வெளிவந்த 2.0 திரைப்படத்தின் மூலம் இன்னும் ஆழமாக மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஆனால், இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று பார்ப்போம்.
உண்மை என்ன
- 2010ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதம் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒரு உயர்நிலை வல்லுநர் குழுவை அமைத்து, அலைபேசி கதிர்வீச்சால் பறவைகளுக்கு, குறிப்பாக சிட்டுக்குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்று ஆய்வுசெய்யப் பணித்தது.
- பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் அன்றைய தலைவர் முனைவர் ஆசாத் ரஹ்மானி தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு 88 பக்க அறிக்கையைத் தாக்கல்செய்தது. அதில் கூறப்பட்டிருந்த முக்கியச் செய்தி – அலைபேசிக்குப் பயன்படும் மின்காந்த அலைகள், பறவைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவித அறிவியல் சான்றும் இல்லை.
- மேலும், 2.0 திரைப்படம் வெளிவந்த உடன், இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளில் டாக்டர் ரஹ்மானி இதை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். “சிட்டுக்குருவிகளின் அழிவிற்கும் அலைபேசிக் கதிர்வீச்சுக்கும் தொடர்பு உள்ளதாகப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அந்த நினைப்பில் அறிவியல் அறவே இல்லை” என்று திட்டவட்டமாகவே கூறியிருந்தார்.
- இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளில் இருக்கும் பறவையியல் வல்லுநர்களும் இப்படத்தில் இருந்த தவறான தகவலை சுட்டிக்காட்டினர். அமெரிக்காவில் உள்ள தொன்மையான பறவைப் பாதுகாப்பு மையமான ஆடுபான் சொசைட்டி வெளியிட்ட கட்டுரையிலும் 2.0 திரைப்படத்தில் சொல்லப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைத் தாக்கி எழுதப்பட்டிருந்தது.
பிழைகள் மலிந்த 2.0
- 2.0 திரைப்படத்தில் இந்தத் தகவல் மட்டும் அல்ல, படம் நெடுக பிழைகள் நிறைந்தே இருந்தன. படத்தில் வந்த பட்சிராஜன் என்கிற பறவையியல் நிபுணர் கதாபாத்திரம் பேசும் வசனங்களில் இருந்து நமக்குத் தெரிவது, அவர் பறவைகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர் என்பதுதான். எடுத்துக்காட்டாக, இந்தியா பக்கமே வராத ஆர்டிக் டெர்ன் என்கிற ஒரு வகை ஆலா பறவை, நம் வேடந்தாங்கலுக்கு வழக்கமாக வருவதாகக் கூறுகிறார். மேலும், சுடலைக் குயில்கள்தாம் மழையை வரவழைக்கின்றன என்று பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத தகவலைப் பேசுகிறார்.
- பறவைகளைப் பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ சிறிதளவும் ஆராயாமல், இதைப் பற்றி அடிப்படை புரிதல்கூட இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இவ்வளவுக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநர் ஷங்கர், நடித்தவர்கள் ரஜினிகாந்த், அக் ஷய்குமார், வசனம் எழுதியவர்கள் எழுத்தாளர்கள் ஜெயமோகன், மதன் கார்கி. மேற்கண்ட அறிக்கையின் அடிப்படையில், 2.0 திரைப்படத்தை அறிவியலுக்கு ஒவ்வாத, பறவைகளுக்கும் இயற்கை - சுற்றுச்சூழலுக்கும் எதிரான திரைப்படமாக அடையாளம்காட்டி ஒதுக்கி வைப்பதே நலம்.
உண்மைக் காரணம்
- சரி, படத்தில் சொன்னதுபோல் அலைபேசிக் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளுக்குப் பாதிப்பு இல்லையெனில், அவற்றின் எண்ணிக்கை குறைய காரணம்தான் என்ன? சிட்டுக்குருவிகள் வாழ்வதற்குத்தேவையானவை – கூடு கட்டப் பாதுகாப்பான இடம், போதிய உணவு, சிறிது திறந்தவெளி. சுமார் 30-40 ஆண்டுகளுக்கு முன், நிறைய ஓட்டு வீடுகள் நகரங்களிலும் இருந்தன.
- அந்த ஓடுகளின் இடையேயும், அவற்றைத் தாங்கிநிற்கும் உத்தரத்திலும், சுவரிலும், கூரையிலும் இருக்கும் சிறு ஓட்டைகள், இடுக்குகள் அல்லது விரிசல்களில்தாம் அவை கூடு கட்டி முட்டையிடும். நம் கட்டுமான முறை மாறி, அடுக்கடுக்கான பெட்டிகளாக கான்க்ரீட் வீடுகளைக் கட்ட ஆரம்பித்ததும், அவை கூடு கட்டும் இடங்கள் முற்றிலுமாக காணாமல் போயின.
- இன்றும் இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில்கூட, தொன்மையான கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளில், கூட்டம் கூட்டமாக அவை வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, சென்னையின் பாரி முனைப் பகுதி, பெங்களூருவின் கே.ஆர். மார்க்கெட் - கமர்ஷியல் ஸ்டிரீட், டெல்லியில் சாந்தினி சௌக் பகுதி போன்ற இடங்களில் இன்றும் சிட்டுக்குருவிகள் உள்ளன.
- அடுத்து, சிட்டுக்குருவிகளுக்கான உணவு. சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் தானியங்கள், சிறு புழு பூச்சிகளை உண்ணும். பூச்சிகளில் இருந்து அவற்றிற்குப் புரதச்சத்து கிடைக்கும். நம் வீட்டின் அருகில் உள்ள மரங்கள், புதர்கள், சிறு செடிகளை நீக்கி, கான்கிரீட்டால் நிரப்பிவிடுவதால், பூச்சிகள் குறைந்து போகின்றன. பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிட்டுக்குருவிகளை மட்டுமல்ல, உலகில் உள்ள பல பறவைகளையும் பாதிக்கிறது.
- திறந்தவெளி புல்வெளி அல்லது மணல் பரப்பு இருந்தால், அங்கு சிட்டுக்குருவிகள் மணல்-குளியல் செய்வது மட்டுமல்லாமல், அங்கும் புழு பூச்சிகளைத் தேடி உண்ணும். நம் வீடுகளைச் சுற்றியுள்ள இடங்களை கான்கிரீட்டால் நிரப்புவதும், சிட்டுக்குருவிகளுக்குக் கேடாகவே முடிகிறது.
- முதலில் சொன்னதுபோல, பல நூறு ஆண்டுகளாக நம்மை ஒட்டி வாழப் பழகியதுதான், அவை அழியக் காரணம். ஏனென்றால் நாம் அவற்றைக் கைவிட்டு விட்டோம். மற்ற பறவைகளைப் போல அல்லாமல், நம்மை நம்பி வந்த ஒரு பறவை இனத்தை, அது வாழத் தேவையான சூழலை அதனிடமிருந்து நாமே பறித்துக்கொண்டு, நம் தவறை உணராமல், வேறு காரணங்களைத் தேடி வருகிறோம்.
சிட்டுக்குருவிகளின் தற்போதைய நிலை
- நம் வீடுகளின் அருகில் சிட்டுக்குருவிகளைக் காண முடியாமல் நாம் வருந்தினாலும், உலகம் முழுவதிலும் உள்ள கணிப்புகளின்படி, தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகள், அழிந்து வரும் பறவை இனமாகக் கருதப்படவில்லை. அவற்றின் தேவைகள் கிடைத்தால், எந்தப் பகுதிக்கும் அவை திரும்ப வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
- கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாட்டின் நகரங்களிலும், சிறிது பசுமை உள்ள இடங்களில், செயற்கைக் கூடுகளை வைத்துப் பரிசோதித்துப் பார்த்ததில், நிறைய அலைபேசிக் கோபுரங்கள் இருந்தும், அங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் திரும்ப வந்தது கண்டறியப்பட்டுள்ளது. எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கான இடமும், அவை உணவு தேடுவதற்கான செடி- புதர்களும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் திரும்ப வந்து, பல்கிப்பெருக ஆரம்பித்துவிட்டன.
- ஆகவே, சிறு முயற்சி செய்து, சிறிய வாழ்க்கைமுறை மாறுதல்களைச் செய்தாலே சிட்டுக்குருவிகளின் கீச்சுக் குரல் நம் பெருநகரங்களிலும் மீண்டும் கேட்கத் தொடங்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 03 – 2024)