TNPSC Thervupettagam

கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

September 4 , 2024 145 days 154 0

கொண்டாட்டமும் திண்டாட்டமும்!

  • நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தச் சூழலில், பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளால் ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளன. சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மே 9-ஆம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் 6 பெண்கள் உள்பட10 பேர் உயிரிழந்தனர்.
  • அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் ஆகஸ்ட் 14-இல் 2 பேரும், திண்டுக்கல் மாவட்டம் ஆவிச்சிபட்டியில் ஆகஸ்ட் 24-இல் 2 பேரும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளம் பகுதியில் ஆகஸ்ட் 31-இல் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • வெடிவிபத்துகள் நிகழும்போது அதிகாரிகள் விரைந்து சென்று சோதனையிடுவது தொடர்ந்தாலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
  • முன்னதாக, விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி 11 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி 16 பேரும், அரியலூர் மாவட்டம் விரகாலூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி 12 பேரும் இறந்தனர். இதுதவிர அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற வெடிவிபத்துகளில் பலரும் இறந்துள்ளனர்.
  • பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கும் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயமும், வேறு தொழில்களும் பெரிய அளவில் இல்லாததால் வேறுவழியின்றி பெண்களும், முதியோரும்கூட அதிக அளவில் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். மற்ற பல தொழில்களைப்போல இல்லாமல் பட்டாசுத் தயாரிப்புத் தொழில் என்பது மிகவும் அபாயகரமானதாகும். சிறு தவறும் பலர் உயிரிழக்கவும் ஆலை உரிமையாளர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தவும் காரணமாகிவிடும். பல குடும்பங்களின் வாழ்வாதாரம் சில நொடிகளில் சிதைந்துவிடும்.
  • இருப்பினும், வறுமை காரணமாக, தாங்கள் வருவாய் ஈட்டினால்தான் குறைந்தபட்ச உணவுக்கே உத்தரவாதம் என்ற பரிதாப நிலையால்தான் உயிருக்கே உலை வைக்கும் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். உயிரிழப்புகளால் குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன என்றால் வெடிவிபத்தில் சிக்கி மீண்டு வருபவர்களின் நிலை மிகவும் சோகமயமானது. அவர்கள் தீக்காயம் அடைந்து வாழ்நாள் முழுவதும் அந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.
  • மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல, செங்கமலப்பட்டி விபத்துக்குப் பின்னர் உயிரிழப்பு, தீக்காயம் ஆகியவற்றுடன் புது வகையான பிரச்னையைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் சோதனையைத் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,100 சிறிய, பெரிய பட்டாசு ஆலைகளில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளில் சோதனை மேற்கொண்டு விதிமீறல்களில் ஈடுபட்டதாக உரிமத்தை ரத்து செய்து 130 ஆலைகளை மூட உத்தரவிட்டுள்ளனர். இதைத் தவிர, மேலும் 100-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடு காரணமாக உற்பத்தியைக் குறைக்க அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தவிர, தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தி 56 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • இந்த ஆலைகளில் சராசரியாக 150 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். சுமார் 25,000 தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களில் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள். இவர்களில் பலரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள்.
  • சரவெடி தயாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தது. அதையும் மீறி சில இடங்களில் சரவெடி தயாரித்து வந்தனர். இப்போது கெடுபிடி மிகவும் அதிகரித்துள்ளதால் சரவெடி தயாரிப்பு குறைந்துள்ளது. இந்த சரவெடி தயாரிப்பதற்கு என்றே பயிற்சி பெற்ற ஆண்களும் பெண்களும் பல ஆண்டுகளாக இதை மேற்கொண்டு வந்த நிலையில் இப்போது அவர்களும் வேலையிழப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
  • பட்டாசு ஆலைகளில் பணிபுரிபவர்கள் பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளதால் வேறு பணிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது இயங்கக்கூடிய பட்டாசு ஆலைகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் இப்போது வேலை இழந்தவர்களுக்கு அங்கும் வேலை கிடைக்கவில்லை.
  • தீபாவளி நெருங்கும் நிலையில், அதிக வருவாய் ஈட்டலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த குறைந்தபட்ச வருவாயும் போய்விட்டது. அதனால் அவர்களில் சிலர் வேப்பங்கொட்டையை சேகரித்து வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு தயாரிப்பவர்களிடம் கிலோ ரூ.20-க்கு விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  • பாதுகாப்பு குறைபாடு உள்ள ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பது உயிரிழப்புகளைக் குறைக்கும் என்பதால் அந்த சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு அனைத்து ஆலைகளும் முறையான பாதுகாப்புடன் செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதே நேரம், பல ஆண்டுகள் ஒரே தொழிலில் ஈடுபட்டு வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாகும்.

நன்றி: தினமணி (04 – 09 – 2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top