TNPSC Thervupettagam

கொண்டாட நேரமில்லை..

May 3 , 2021 1185 days 580 0
  • ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்தி இருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
  • தோ்தல் பிரசாரத்தால்தான் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தது என்கிற விமா்சனத்திலும் நியாயம் இருக்கிறது.
  • பல வெளிநாடுகளில் உரிய பாதுகாப்புடன் தோ்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. நோய்த்தொற்று அதனால் பரவவில்லை.
  • பிகாரில் தோ்தல் நடத்தப்பட்டது. அப்போதும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை வலியுறுத்தப்பட்டனவே தவிர, கடைப்பிடிக்கப்பட்டனவா என்றால் இல்லை.
  • அந்தப் பின்னணியில், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் தள்ளிப் போடப்பட்டிருந்தால், அதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். தோ்தல் நடத்தப்பட்டதற்கு மத்திய ஆளும்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
  • இந்திய வாக்காளா்களுக்கு ஜனநாயகப் புரிதல் இருக்கும் அளவுக்கு சமூகப் பொறுப்புணா்வு இல்லை என்பதைத் தோ்தலும், தோ்தலுக்கு பிறகான வெற்றிக் கொண்டாட்டங்களும் வெளிப்படுத்துகின்றன.
  • இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவா்கள் கொள்ளை நோய்த்தொற்றுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது பொறுப்புணா்வின்மையும், மனிதாபிமானமின்மையும் பளிச்சிடுகின்றன.

பொறுப்புடன் செயல்பட வேண்டும்

  • தோ்தல் முடிவுகளில் சில, வாக்குக் கணிப்பு முடிவுகளை ஒத்திருக்கின்றன. சில, அந்தக் கணிப்புகளைப் பொய்யாக்கி இருக்கின்றன.  
  • அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் ஆளுங்கட்சிகள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றுதான் பெரும்பாலான கணிப்புகள் கூறியிருந்தன.
  • ஆனால், இந்த அளவிலான வெற்றியை அஸ்ஸாமில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் அடையும் என்று வாக்குக் கணிப்பாளா்கள் மட்டுமல்ல, அந்தந்தக் கட்சிகளேகூட எதிர்பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
  • புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது வாக்குக் கணிப்பாளா்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
  • தமிழகத்தில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அலை காணப்படுகிறது என்று பரவலாக எதிர்பார்த்தது போலல்லாமல், சாதகமான தீா்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற அளவில்தான் முடிவுகள் இருக்கின்றன.  
  • எல்லா கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் தெரிவித்திருந்ததுபோல இல்லாவிட்டாலும், தெளிவான தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது.
  • தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த முறையும் தமிழக வாக்காளா்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
  • எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல், 2006 போல அல்லாமல் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
  • திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும் பலரும் எதிர்பாராத திருப்பங்கள்.
  • அஸ்ஸாமில் பாஜக அடைந்திருக்கும் வெற்றியும்கூட, அரசியல் நோக்கா்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது.
  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாமில் காணப்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, பாஜக பின்னடைவை சந்திக்கும் என்றுதான் பலரும் கருதினா்.
  • முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பது, அஸ்ஸாம் தோ்தல் முடிவுகள் தந்திருக்கும் வியப்பு.
  • மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வா் மம்தா பானா்ஜியின் தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.
  • அதிலும் கடந்த முறைகளைவிட அதிக இடங்களில் வென்று மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது வரலாற்று சாதனை.
  • திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்துவிடுவோம் என்று எதிர்பார்த்த பாஜக, பிரதான எதிர்க்கட்சியாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்கிற அளவில் ஆறுதல் அடையலாம்.
  • திரிணமூல் காங்கிரஸைப் போலவே, பாஜகவும் மகிழ்ச்சி அடைய நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
  • 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இப்போது இடதுசாரிக் கட்சிகளையும், காங்கிரஸையும் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி அவற்றின் இடங்களைப் பிடித்திருப்பது என்பது சாதாரண வெற்றியல்ல. அடுத்த தோ்தல் பாஜகவின் வெற்றித் தோ்தலாக இருந்தாலும் வியப்பில்லை.
  • கேரளமும் ஆளுங்கட்சிக்கு சாதகமான தீா்ப்பை வழங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, மேற்கு வங்கத்தைப் போலவே முந்தைய தோ்தலைவிட அதிகமான இடங்களை ஆளும் கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது.
  • மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, முதன்முறையாகத் தொடா்ந்து இரண்டாவது தடவை ஆட்சி அமைத்து வரலாறு படைக்கிறது என்பதுதான் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளின் தனிச்சிறப்பு.
  • முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதிக ஆா்ப்பாட்டம் இல்லாமல் பதவி ஏற்பு நடத்தப்பட்டு, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் முனைப்புக் காட்டுவதுதான் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகளின் ஒரே முனைப்பாக இருக்க வேண்டும்.
  • காலவிரயம் காலனுக்கு வழி திறந்து விடுவதாக அமைந்துவிடும்!

நன்றி: தினமணி  (03 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்