TNPSC Thervupettagam

கொத்துக் கொத்தாய் மடிவது சம்மதமா?

July 8 , 2024 187 days 196 0
  • கொள்ளை நோய்கள், பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, போர்ச்சூழல் என முன்பெல்லாம் மனித உயிர்கள் கொள்ளைபோன காலம் கடந்து தற்போதும் உலகெங்கிலும் ஏதேனும் ஒரு நிகழ்வில், விபத்தில், பயணத்தில், கடவுள் வழிபாட்டுத் தலங்களில், ஆன்மிகச் சொற்பொழிவுகளில், கள்ளச்சாராயத்தின் வழியாக, கலப்பட உணவின் காரணமாக, போர்களின் வாயிலாக, இயற்கைச் சீற்றங்களான பனிப்பொழிவு, பெருமழை, வெள்ளம், பூகம்பம், வெப்பச்சீற்றம் எனப் பலவற்றின் வாயிலாகவும் மரணங்கள் கொத்துக் கொத்தாய் நிகழ்கின்றன அல்லது நிகழ்த்தப்படுகின்றன.
  • இந்த நேரம் வரை காஸாவின் மீது நிகழ்த்தப்படும் இஸ்ரேலின் போர் வெறி ஏற்படுத்தும் துயரமும் வன்மமும் முற்றுப்பெற மறுக்கின்றன. மனித உயிர்கள் கணக்கின்றி இலக்கின்றிப் பலியாகிக்கொண்டிருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சிகளாக மாறிப் போய்விட்டது. மனித உயிரின் மதிப்பு அவ்வளவு மலிவாகிப் போய்விட்டது.

நோய்களால் பலியான உயிர்கள்:

  • காலரா, பிளேக், அம்மை நோய் என வெவ்வேறு பெயர்களில் பல கொள்ளை நோய்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொள்ளை கொண்டு போயின. இதன் நீட்சியாக நம் சமகாலத்தில் கரோனா என்னும் கொடுந்தொற்றின் கோரத் தாண்டவத்தை அண்மையில் கண்டோம்.
  • இந்தத் தொற்றிலிருந்து நோயாளிகளைக் காக்கக் களமிறங்கிய மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும்கூட தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம்.
  • நோய்களைப் போலவே கடந்த நூற்றாண்டுகளில் வான் பொய்த்துப் போனதால் பூமி வறண்டு விளைச்சலின்றிப் போன நிலையில் ஒரு வாய்ச் சோற்றுக்கும் வழியில்லாமல் வயது பேதமின்றிப் பல உயிர்கள் மண்ணுக்கு இரையாகின.
  • குறிப்பாகத் தாது வருடப் பஞ்சம்; அப்பஞ்சத்திலிருந்து உயிர் தப்பித்துக் கடல் கடந்து பக்கத்து நாடுகளான இலங்கை, மலேயா, பர்மா எனப் பஞ்சம் பிழைக்கப் போனவர்கள் எண்ணிக்கையும் இங்கு ஏராளம். அது ஒரு தனிக்கதை. ஆனால், அந்த நிலையெல்லாம் இப்போது மாறிவிட்டாலும் பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு உருவங்களில் வருகின்றன.
  • ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிப்பது என்பதும் பயணங்களும் தவிர்க்க இயலாத நிலையில், கார், பேருந்து, ரயில், விமானம் என எந்த வாகனத்தில் பயணித்தாலும் விபத்துகளும் அவ்வப்போது பயணிப்பவர்களைக் கூண்டோடு அள்ளிக்கொண்டு போகின்றன.

போர் - அமைதி - மக்கள் எதிர்காலம்:

  • போரும் அமைதியும் மக்களின் எதிர்காலமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணானவை. அமைதியில்லாவிடில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாது. எத்தனை எத்தனை போர்களை இந்தப் பிரபஞ்சம் எதிர்கொண்டிருக்கிறது. எல்லாப் போர்களும் பல பேரழிவுகளுக்குப் பின் இரு தரப்பிலும் பல ஆயிரம், கோடி உயிரிழப்புகளுக்குப் பின் நிறைவு பெற்றிருக்கின்றன.
  • பச்சிளங்குழந்தைகள் முதல் வயது பேதமின்றிக் கொல்லப்பட்டவர்கள் எத்தனை கோடி பேர்? இவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தானே? அணு ஆயுத வீச்சினைச் சந்தித்து முற்றிலும் சிதைக்கப்பட்டு மறு உருவாக்கம் பெற்ற ஜப்பான் உட்பட நம் கண் முன் எத்தனை நாடுகள்?
  • இப்போதும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர், பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தும் போர் ஆகிய இரண்டும் எப்போது நிறைவு பெறும் என்பதே அமைதியை விரும்புபவர்களின் பெருத்த ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

கடவுள் வழிபாட்டில் காவு வாங்கப்படும் உயிர்கள்:

  • கும்ப மேளாக்களும் மகாமகங்களும், ஹஜ் - ஜெருசலேம் புனிதப் பயணக்களும் எப்போதும் நீடித்துக்கொண்டிருப்பவையே. மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட்ட நெரிசலிலும் மூச்சுத் திணறலிலும் வெப்பத்தின் தாக்கத்திலும் உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.
  • கடவுள் வழிபாடு என்பதைக் கடந்து மனிதர்களையே கடவுளாக வரித்துக்கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி ஏமாறுவதுடன் தங்கள் உயிரையும் சேர்த்து ஏன் இழக்கிறார்கள் என்பதுதான் இங்கு பெரும் கேள்வி. உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் பகுதியில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் போலோ பாபா நிகழ்த்திய சொற்பொழிவைக் காணச் சென்ற கட்டுக்கடங்காத கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், சொற்பொழிவு முடிந்து போலோ பாபா நடந்து சென்ற பாதையில் அவரது காலடி மண்ணை எடுப்பதற்காக முண்டியடித்ததிலேயே பலரும் பலியாகி இருக்கிறார்கள்.
  • இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்த பாபா தலைமறைவாகிவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஹாத்ரஸ் சம்பவம் தனக்கு வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறார்! ஆனால் எப்போதும் இவ்வாறு தங்கள் இன்னுயிரை இழப்பவர்கள் பெரும்பான்மையும் எளிய மக்களாகவே இருக்கிறார்கள்.

துரத்தும் குடி மரணங்கள்:

  • மற்றொன்று - துயரத்திலும் பெருந்துயரான கள்ளச்சாராய மரணங்கள். உழைத்துக் களைத்து உடல் வலி தீரக் குடிக்கும் நோக்கில் தங்கள் வருமானத்துக்கேற்ற ஒரு மதுவை விலை மலிவாக வாங்கி மெத்தனால் எமனுக்கு பலியாகின்றவர்கள்.
  • அரசே மதுவினை விற்றாலும் அதனினும் மலிவாக வேண்டிப் போகின்றவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்லாமல் வேறென்ன? தங்கள் வருமானத்தை மட்டுமே பெரிதாக எண்ணி மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்மையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
  • 70 களில் பிறந்தவர்களில் தொடங்கி ஈராயிரக் குழவிகள் வரை குடியின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல சாராயமோ கள்ளச் சாராயமோ எப்பாடுபட்டேனும் குடியும் போதையும் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • இவையன்றிப் பெரும் அச்சுறுத்தல் இயற்கைப் பேரிடர்கள். இத்தகைய சிக்கல் எழுந்திருப்பதற்கும் நாம்தான் காரணமேயன்றி வேறொருவர் அல்ல என்ற சிந்தனையும் நமக்கு எழ வேண்டும். இயற்கையைச் சீரழித்ததன் பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். மேலும் சீரழியாமல் பாதுகாக்கும் வழியை ஆலோசிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்