கொலஸ்டிரால் நல்லதா, கெட்டதா?
- இதயத்தைக் குறிவைக்கும் பல்வேறு ‘தோட்டா’க்களைப் பார்த்துவருகிறோம். முதலில் ரத்தக் கொதிப்பு, அடுத்ததாகச் சர்க்கரை நோய். இந்த இரண்டையும் பார்த்துவிட்டோம். இப்போது, மூன்றாவது முக்கியத் ‘தோட்டா’வான கொலஸ்டிரால் குறித்துப் பார்க்கலாம்.
- இன்றைய நவீன உணவுச் சந்தையில் ஜீரோ கொழுப்பு உணவு, கொலஸ்டிரால் குறைந்த உணவு, கொலஸ்டிரால் நீக்கப் பட்ட உணவு என்றெல்லாம் புழக்கத்துக்கு வந்த பிறகு, ‘கொலஸ்டிரால் என்றாலே கெட்டது’ என்றே பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, எந்தப் பிரச்சினைக்கு மருத்துவரிடம் சென்றாலும், “கொழுப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய்யைத் தொடாதீர்கள்.
- அசைவம் வேண்டாம்” என்கிறார்கள். இதனால், கொலஸ்டிரால் நமக்கு வில்லன்போல் தோன்றுகிறது. அடுத்து, கொலஸ்டிரால் குறித்த அறிவியல் கண்ணோட்டங்களும் அடிக்கடி மாறி வருகின்றன. எனவே, கொலஸ்டிரால் தொடர்பான தவறான கற்பிதங்களை உடைக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
கொலஸ்டிராலுக்கு 5 விதிகள்:
- கொலஸ்டிராலில் நல்லது, கெட்டது என இருவகை உண்டு. நல்ல கொலஸ்டிராலுக்கு ‘ஹெச்டிஎல்’ (HDL) என்று பெயர். கெட்ட கொலஸ்டி ராலுக்கு ‘எல்டிஎல்’ (LDL) என்று பெயர். கெட்ட கொலஸ்டிரால் இதயத்தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிற மோசமான வஸ்து. ஆனாலும், பயமில்லை.
- நூறு மில்லி ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் 100 மி.கிராமுக்குக் குறைவாக இருந்தால், மாரடைப்பு ஏற்படு வதற்கான சாத்தியம் குறைவு என்பது முதல் விதி. குடும்ப வரலாற்றில் கூடுதல் கொலஸ்டிரால் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயும் இதய பாதிப்பும் சேர்ந்து இருப்பவர் களுக்கும் கெட்ட கொலஸ்டிரால் 70 மி.கிராமுக்குக் குறைவாகவும், ஏற்கெனவே பைபாஸ் ஆபரேஷன், ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டி ருக்கும் நபர்களுக்கு இது 50 மி.கிராமுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இது இரண்டா வது விதி.
- அடுத்து, விஎல்டிஎல் (VLDL) என்னும் ஒரு வகைக் கெட்ட கொலஸ்டிரால் இருக்கிறது. இது ஆண்களுக்கு 30 மி.கிராமுக்குக் குறைவாகவும், பெண்களுக்கு 25 மி.கிராமுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இது மூன்றாவது விதி. நல்ல கொலஸ்டிரால் ஆண்களுக்கு 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 50 மி.கிராமுக்கு அதிக மாகவும் இருக்க வேண்டும். இது நான்காவது விதி.
- மொத்த கொலஸ்டிரால் 200 மி.கிராமுக்குக் குறைவாகவும், டிரை கிளிசரைட்ஸ் கொழுப்பு 150 மி.கிராமுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இது ஐந்தாவது விதி. சாலை விபத்துகளைத் தவிர்க்க வேண்டுமானால், முக்கியமான சாலை விதிகளை நாம் மீறக் கூடாது. அதுபோல்தான், மாரடைப்பை ஓரங் கட்ட வேண்டுமானால் இந்த ஐந்து கொலஸ்டிரால் விதிகளை மீறக் கூடாது.
மாரடைப்புக்குத் தொடர்பு உண்டா?
- ‘ரத்தத்தில் கொலஸ்டி ரால் சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறது. தண்ணீர்க் குழாய்களைப் பாசி அடைத்துக் கொள்வது போல ரத்தக் குழாய்களை அது அடைத்து விடுகிறது. அப்போது மாரடைப்பு ஏற்படுகிறது’ - இப்படித்தான் மாரடைப்பைப் பலரும் புரிந்து கொள்கிறார்கள். இது ஒரு தவறான கற்பிதம். குழந்தை களுக்குக்கூட கொலஸ்டிரால் இருக் கிறது. அவர்களுக்கு ரத்தக் குழாய் அடைத்து விடுகிறதா, என்ன?
- ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன், புகைப் பழக்கம், மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், காற்று மாசு, மாறுபட்ட மரபணு, கடுமையான நோய்த்தொற்று போன்ற ‘தோட்டா’க்களால் ரத்தக் குழாய்களில் உள் காயங்கள் (Inflammation) ஏற்படுகின்றன.
- அவற்றுக்கு ஒரு மருந்துப் பூச்சாகத் தான் கொலஸ்டிரால் முதலில் செயல்படுகிறது. ரத்தக் குழாயில் உள்காயங்கள் இல்லை என்றால், கொலஸ்டிரால் ரொம்பவும் சாதுவாகத் தான் சுற்றிக் கொண்டி ருக்கும். நாம் இந்தத் ‘தோட்டா’க்களை மறந்து விட்டு, கொலஸ்டிரால் மீது மட்டும் பெரிய பழியைப் போடுகிறோம்.
- மாரடைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 70% பேருக்கு கொலஸ்டிரால் அளவுகள் சரியாக இருந்ததாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகள் தெரிவித்திருப்பதே இதற்குச் சான்று. ஆகவே, ரத்தக் குழாய்களில் உள்காயங்களை உண்டாக்கும் இந்தத் ‘தோட்டா’க்கள் தான் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களே தவிர, கொலஸ்டிரால் மட்டுமே காரணம் இல்லை. இதை ஒரு வாய்ப் பாடு மாதிரி திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.
- இதையும் சொல்லிவிடுகிறேன். மிக மிக அரிதாகக் குடும்ப வர லாற்றில் தீவிர மரபணுக் குறைபாடு உள்ளவர்களுக்கு (Familial Hypercholesterolemia) 100 மி.லி. ரத்தத்தில் 300 மி. கிராம் அளவில்கூடக் கெட்ட கொலஸ்டிரால் இருக்கக்கூடும். இவர்களுக்கு வேண்டுமானால், கொலஸ்டிரால் காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்புப் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், இந்த ஒப்பீடு மற்றவர்களுக்குப் பொருந்தாது.
கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் வழி:
- பொதுவாக, மருத்துவர்களாகிய நாங்கள் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரைகள் தருவோம். அது மட்டும் போதாது. சரியான உணவு முறையும் முக்கியம் என்போம். உணவு என்றதும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளே உங்கள் நினைவுக்கு வரும். “உடனே கொழுப்பு சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறேன், டாக்டர்” என்று சபதம் செய்வீர்கள். அதேநேரம், மாவுச் சத்து நிறைந்த அரிசி, கோதுமை உணவு வகை களையும், பேக்கரி பண்டங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் அளவில்லாமல் சாப்பிடுவீர்கள். இப்படிச் சாப்பிடுவது கொழுப்பு உணவைச் சாப்பிடுவதைவிட மோசம் என்பது உங்களுக்குத் தெரியாது.
- “நான் கொழுப்பு உணவைத் தொட்டதே இல்லை, டாக்டர்! நான் சுத்த சைவம். எனக்கு ஏன் கொலஸ்டிரால் கூடியது?” என்று எங்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுப்பீர்கள். நீங்கள் அளவில்லாமல் சாப்பிட்ட மாவுச் சத்துணவும், இனிப்பும்தான் கொலஸ்டிராலாக மாறிவிட்டன என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள். ஆகவே, அரிசிச் சாப்பாட்டை அளவோடு வைத்துக்கொள்ளுங்கள்; இனிப்பு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதுதான் கொலஸ்டிராலைக் குறைக்கும் முதல் படி. இதற்கு உங்கள் தினசரி உணவில் மாவுச் சத்து உணவுகள் 40%க்கும் மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொழுப்பும் தேவைதான்:
- பொதுவாக, கொழுப்பு உணவைத் தீண்டத்தகாத உணவாகப் பார்க்கும் பார்வைதான் பலரிடம் இருக்கிறது. அது ஒரு தவறான பார்வை. கொழுப்பில்லாமல் ஒரு விநாடிகூட நம் உடலால் இயங்க முடியாது. உணவில் மாவுச் சத்து, புரதம் ஆகிய வற்றுடன் கொழுப்பையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுதான் காரணம். தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் மொத்த உணவு கலோரிகளில் 30% கொழுப்பு உணவி லிருந்து கிடைக்க வேண்டும். அதற்கு 60 – 70 கிராம் கொழுப்பு உணவைத் தினமும் நாம் சாப்பிட வேண்டும்.
கொலஸ்டிரால் கூடுவது தெரியுமா?
- ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் அடிக்கடி சிறுநீர் போவது, அதிக தாகம் எடுப்பது, அதிகமாகப் பசிப்பது போன்ற அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுபோல், ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சிலருக்குக் கிறுகிறுப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடினால் நமக்கு எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது.
- நெஞ்சுவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காக ரத்தப் பரிசோதனை செய்யும்போதுதான் கொலஸ்டிரால் கூடி இருப்பது தெரியவரும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையும், ஏற்கெனவே கொலஸ்டிரால் உள்ளவர்கள் வருடத்துக்கு இரண்டு முறையும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் கொலஸ்டிரால் பரிசோதனைகளை (Lipid Profile) மேற்கொண்டு, கொலஸ்டிராலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 12 – 2024)