- சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின்மீது ஆறு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்தப் பரிந்துரை திரும்பப் பெறப்பட்டிருப்பது தேவையற்ற சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
- நீதிபதி எம்.என்.பண்டாரி கடந்த செப்டம்பரில் ஓய்வுபெற்றதிலிருந்து நீதிபதி எஸ்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பதவிவகித்துவருகிறார். ஒடிஷா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை 2022 செப்டம்பர் 28 அன்று கொலீஜியம் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டது.
- ஆனால், மத்திய அரசு இந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவந்தது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக, சென்னை உயர் நீதிமன்றம் முழு நேரத் தலைமை நீதிபதி இன்றிச் செயல்பட்டுவருகிறது. இதையடுத்து, நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ள கொலீஜியம், அதற்குப் பதிலாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலாவை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது.
- உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமிக்க முடியும். நீதிபதிகள் நியமனத்தை மேற்கொள்ள, கொலீஜியத்துக்கு மாற்றாக மத்திய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
- உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பட்டியல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கொலீஜியம் நடைமுறையை விமர்சித்துவருகின்றனர்.
- தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி ஒருவரை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான கொலீஜியத்தின் பரிந்துரையைச் சில மாதங்களுக்குமுன் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதேபோல் வேறு நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த நீதிபதிகள் பொதுவெளியில் வெளிப்படுத்திய அரசியல் கருத்துகளே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
- அரசின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துவருகிறது. இவற்றோடு சேர்த்துப் பார்க்கும்போது, பரிந்துரைகளின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவைப்பதன் மூலம், நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் அமைப்பின் அதிகாரத்தை மத்திய அரசு மறைமுகமாகக் கட்டுப்படுத்துகிறதோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
- கொலீஜியம் நடைமுறையின் மூலமாக நீதிபதிகள் நியமனத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடமே விடப்பட்டிருப்பது குறித்த விமர்சனங்கள் நியாயமானவையே. ஆனால், அதை மாற்றுவதற்கான முயற்சிகள் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான பரஸ்பரப் பேச்சுவார்த்தை, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட சுமுகமான, வெளிப்படையான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, நீதிமன்ற அமைப்புக்கு அரசமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுவதுபோல் காலதாமதம் போன்ற மறைமுக உத்திகளை மத்திய அரசு கையாள்வது நாட்டின் ஜனநாயகத்துக்கு நன்மை பயக்காது!
நன்றி: தினமணி (25 – 04 – 2023)