TNPSC Thervupettagam

கொல்லும் புகையிலை: ஒரு வரலாற்றுப் பார்வை

May 31 , 2024 225 days 216 0
  • புகையிலை எப்போது மனிதர்களின் பார்வையில் பட்டது என்பது குறித்துப் பல்வேறு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. போர்ச்சுகலுக்கான பிரெஞ்சுத் தூதர் ஜே.நிகோட், பிரான்ஸ் நாட்டுக்கு 1559 இல் புகையிலையைக் கொண்டுசென்றது பரவலாக அறியப்பட்ட வரலாறு. நிக்கோடியானா டபாகம் என்ற பெயர் புகையிலைக்கு வந்ததன் பின்னணியும் இதுதான் எனச் சொல்லப்படுகிறது. பிரிட்டனில் 1830இல் புகையிலை பரவியது.
  • தமிழ்நாட்டில் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், உடையார்பாளையம், திண்டுக்கல்லில் புகையிலை பயிரிடப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் சிகரெட்டும் சுருட்டும் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டதை 1878, 1883இல் வெளியான திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டக் கையேடுகளில் மூர், பானூயுவ் ஆகியோர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆக, அந்த ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியப் புகையிலையின் வரலாறு தொடங்குகிறது.

வரலாற்றுப் பதிவுகள்:

  • ‘புகையிலையில் சாதாரணதில்-2 (சாதாரண வகை), வர்ஜினியாவில்-6, ஐரோப்பியாவில்-10 பங்குகள் நிகோடினும், கார்பாலிக் ஆஸிட், ஸல்பரட்டட் ஹைட்ரஜன், ப்ரஸிக் ஆஸிட், பைரிடன், பிக்கோலைன் விஷங்கள் உள்ளன’ என ‘வைத்தியபோதினி’ இதழ் எடுத்துரைத்தது.
  • நிகோடின் விலக்கப்பட்டு கிளிசரின், சர்க்கரை, அதிமதுரம், வெடியுப்பு சேர்க்கப்பட்டன. ‘இவை தம்மில் தாமே தீங்கானவையல்ல. ஆனால், புகையிலையோடும், மூடியிருக்கும் சோற்றுத்தாளோடும் சேர்ந்து எரியும்போது விஷமாகிறது’ என ‘மாதர்மித்திரி’ இதழ் குறிப்பிட்டது.
  • காப்பி - தேயிலை, ஒயின் பழக்கம் ஐரோப்பியர்களிடமிருந்து இந்தியர்களிடம் வந்ததுபோல புகையிலைப் பழக்கமும் தொற்றிக்கொண்டது. ‘இப்போது அநேகச் சிறுபையன்கள் வாயில் சுருட்டுப் பிடித்துக் கொண்டு தெருத்தெருவாய் அலைகின்றதை நாம் தினந்தோறும் பார்க்கிறோம். ஸ்தீரிகள்கூடப் புகைச்சுருட்டுக் குடித்தல் வழக்கத்தை அனுசரித்து வருகின்றார்கள்’ என ‘வைத்தியபோதினி’ மே 1910இல் குறிப்பிட்டது.
  • ‘இந்தியாவிலும் சிகரெட்டை உபயோகிக்கும் பழக்கம் இருக்கயிருக்கப் பயங்கரமான விதமாய் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிகரெட்டுகளைத் தவிர, வேறெதையும் விற்காத ஷாப்புகள் அநேகமிருக்கின்றன. பெரிய மனிதரும் உபயோகிக்கிறார்கள்’ என ‘மாதர்மித்திரி’ 1915இல் வருந்தியது. ‘எங்கு பார்த்தாலும் சிகரெட் விளம்பரமாக இருக்கிறது.
  • அதிகமாக சிகரெட்டுகளை வாங்குவோருக்குப் பரிசுகளையும் பல கம்பெனிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. விளக்கில் விட்டில்கள்போய் விழுவதுபோல் நமது யுவர்கள் இந்த விளம்பரங்களைக் கண்டு மதிமோசம் போகின்றனர்’ என 1925இல் ‘ஆரோக்கிய தீபிகை’ கவலைப்பட்டது. இவ்வாறாகப் புகைத்தலானது இந்தியர்களின் புதிய பழக்கமாகவும் பிரிட்டிஷாரின் பொருளாதாரமாகவும் மாறியது.

புகையால் பகை:

  • புகைப்பழக்கம் திருட்டு உள்பட குற்றங்களைத் தூண்டுவதாகவும் தம்மிடம் ஆஜரான குற்றவாளிச் சிறுவர்களில் நூற்றுக்கு 95 பேர் புகைப்போர் என்றும் நீதிபதி பென்லிண்ட்ஸே கூறினார். புகைப்பழக்கம் அறிவையும், தைரியத்தையும் தடுப்பதாக மிச்சிகன், யேல் பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் 1920 களில் தெரிவித்தன. ‘ஹார்வர்டில், கடந்த 50 வருடங்களில் புகைப்பவர்களில் ஒருவர்கூட வகுப்பில் முதலாமிடத்தைப் பெறவில்லை’ என 1925ல் ஆலன் கூறினார்.
  • இந்நிலைகளால், அங்குள்ள மாலுமிப் பள்ளிகள் புகைப்பவர்களைச் சேர்க்க மறுத்தன. அவர்கள் ‘பூச்சி விழுந்த ஆப்பிள் பழம்’ போல் இருப்பதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத் தலைவர் ஜார்டன் கூறினார். அமெரிக்காவின் பல ரயில்வே, காப்பீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் புகைப்பவர்களுக்கு வேலைதர மறுத்தன. ‘புகைப்பவர்கள் உன்னத பதவியை அடைய முடியாது’ என ஐக்கிய நாடுகளின் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதி பிரூவர் அறிவித்தார். புகைக்கும் மாணவர்களைப் பிடிக்கவில்லை என்றார் எடிஸன்.

எச்சரிக்கைகள்:

  • புகையிலைத் தோட்டத்தைக் கண்டால் கிலுகிலுப்பை விரியன் பாம்புகளே (Rattlesnakes) ஓடிவிடும் என்றார் ஜெர்மானியரான ஜே.எச்.ராஸ்லி; புகையிலையில் உள்ள விஷப்பொருள்களைத் தவளை, பூனை, ஆமை போன்றவற்றில் செலுத்தினால் அவை உடனடியாக இறக்கும் என்று ஆலன் தெரிவித்தார்.
  • ஒரு சுருட்டில் இரண்டு மனிதர்களைக் கொல்லும் விஷம் இருப்பதாக ஆங்கிலேயரான ஆலின்ஸ் கூறினார். இவற்றை உணர்ந்த ‘மாதர்மித்திரி’ ஜூலை 1912இல் ‘சிகரெட்டும் ரத்தமும்’ என்ற தலைப்பில் மருத்துவருக்கும் புகைப்பவருக்குமான உரையாடலில் சிகரெட்டால் ரத்தத்தில் கலக்கும் நச்சுகளை விளக்கியது.

1915இல் வெளியான ‘மாதர்மித்திரி’ இதழின் ‘சிகரெட்:

  • அதினாலுண்டாகும் தீமைகள், அதினோடு எதிர்த்து நிற்குதல்’ கட்டுரை, சுவாசக் குழாயைச் சேதப்படுத்துதல், நரம்புகளைப் பலவீனப்படுத்தி இரத்த ஓட்டத்தைத் தாக்குதல், ஜீரணநீரை அதிகமாகச் சுரக்கச் செய்தல், தூக்கத்தைக் கெடுத்தல் போன்ற தீங்குகளை விவரித்தது.
  • ஆழ்ந்து சுவாசிப்பதற்குப் பதில் மேலெழுந்தவாரியாகச் சுவாசிக்கும் நிலையைப் புகைப்பழக்கம் ஏற்படுத்துவதாக 1925இல் எச்சரிக்கப்பட்டது. புகைப்பவர்களைவிடவும் புகைக்காதவர்களின் சுவாசக் குழாயானது 5 கன அங்குலக் காற்றை அடக்கிக்கொள்ளுமென்று லீவர் கூறினார்.
  • புகைப்பதால் பயித்தியம் ஏற்படும் என்றும், அமெரிக்க நாட்டில் 70,000 பயித்தியக்காரருள் 15,000 பேர் புகைத்ததால் பயித்தியமானதாகவும், அங்கு 1920களில் வருடந்தோறும் 20,000 பேர் இறந்ததாகவும் ஆலன் குறிப்பிட்டார். எனினும், இத்தகைய புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் - இந்தியாவில் ஆவணப்படுத்தவில்லை.
  • புகைப்பழக்கத்தின் தீங்குகளால் அதற்கு எதிரான இயக்கங்கள் உருவாகின. இங்கிலாந்தில் முதன்முதலாகப் புகைபிடித்த வால்டர் ராலியைக் கண்டு உடலில் தீப்பற்றியதெனக் கருதி அவர்மேல் தண்ணீரை ஊற்றினாராம் அவருடைய வேலைக்காரர். ஃபோர்டு, ராய்ட்டர், மார்ஷல்பீல்டு நிறுவனங்களின் தலைவர்கள் புகைக்கும் வேலையாள்களைக் கண்டித்தனர்.
  • புகைப்பவர்களை இன்ஜினின் கீழ் வைத்து நசுக்க விருப்பம் என்றார் ஒரு ரயில்வே நிர்வாகத்தின் தலைவர் ஹாரிமன். மேற்குலகில் உருவான ‘சிகரெட்டுப் பரிகாரச் சங்கம்’ அப்பழக்கத்தை விடுவதற்கு உதவியது. ஆனாலும் அதன் வேரைப் பிடுங்க இயலாதெனப் பத்திரிகைகள் கூறின.
  • வெள்ளி திராவகமும் ஜென்ஷியன் வேரும் ஒரு வாரம் மருந்தாகக் கொடுத்ததால் புகைப்பதை நிறுத்தியோர், “எங்களை அடிமைப்படுத்தின சங்கிலி அறுந்துபோயிற்று” என்றனர். அப்பழக்கத்தை நிறுத்த சுமார் அரைக் கோடி பேர் வாக்குறுதியில் கையெழுத்திட்டனர். தமிழ்நாட்டிலும் இதைப்போன்று மனதாரச் செய்யுங்களென பி.கே.குரூப் அறிவுறுத்தினார் (‘ஆரோக்கிய தீபிகை’, ஜூலை 1926).
  • ஐரோப்பாவின் விடுதிகளில் புகைப்பவர்களுக்கும் புகைக்காதவர்களுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன; ஒருவர் மற்றவர் அறைக்குள் நுழையாத இந்த ‘நல்லொழுக்கம்’ காலனியாதிக்க நாடுகளிலும் எப்போது ஏற்படுமென வினவியதோடு, புகைக்கப்படும் அறைகளில் வாயுமண்டலம் கெடுவதால் ‘புகை குடியாதவர்களின் அறை’ வேண்டுமென 1908இல் ‘ஆரோக்கியபோதினி’ கோரியது.
  • மாணவர்கள் புகைப்பதைத் தடுக்கப் பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயர்கள் போதிக்கவும், கண்டிக்கவும், பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்கவும் ‘தி மெடிகல் டைம்ஸ்’ பத்திரிகை 1914ல் அறிவுறுத்தியது. “மாதம் 15-30 ரூபாய் வருவாயுள்ள இந்தியர்கள் தம்முடைய குழந்தைகளுடைய வயிற்றில் அடித்து அவர்களை நடைப்பிணங்களாக்காமல் புகைப்பது சாத்தியப்படுமா?” என 1925ல் ஆலன் வினவியது சுதந்திர இந்தியாவில் தலைகீழாகியது.
  • ஏனென்றால், இந்தியப் பொருளாதாரத்தில் புகையிலையும் முக்கியப் பங்காற்றுகிறது. பிரிட்டனின் இந்திய மாளிகையில் 1950 நவம்பரில் இந்தியப் புகையிலையின் முக்கிய வாடிக்கையாளர்களான பிரிட்டிஷாருக்குப் புகையிலையும் காட்சிப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் 6-7 கோடி ராத்தல் புகையிலை ஏற்றுமதி செய்த இந்தியா, ‘ஆனந்தோதயம்’ 1950 டிசம்பர் இதழின்படி, உலகளவில் மூன்றாவது இடத்தில் இருந்தது.
  • இன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சுமார் 36 லட்சம் இந்தியர்கள் இத்தொழிலைச் சார்ந்துள்ளனர். அதேவேளை, சிகரெட் அட்டையிலும் திரையரங்குகளிலும் எச்சரித்தும், பள்ளிகளுக்கு அருகிலும் பொது இடங்களிலும் புகைக்கத் தடை விதித்தும்கூட சமீபத்தியப் புள்ளிவிவரங்களின்படி, புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 154 பேர் எனத் தினந்தோறும் 3,699 பேர் இறக்கின்றனர். புகைக்காதவர்களைவிடவும் புகைப்பவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே இறக்கின்றனராம்.

புகைப்பதைப் புதைப்போம்:

  • தவிர்க்கக் கூடாத ஓர் அவா இழுப்பதினாலும், அற்பக் கவலைகளையும், சில்லறைத் தொல்லைகளையும் நிவர்த்தி செய்யவும், மனதைச் சாந்தமாக்கவும் புகைப்பதாகப் புகைப்போர் சொன்ன கூற்றை மாதர்மித்திரியும், ஆரோக்கிய தீபிகையும் அக்காலத்தில் பதிவுசெய்தன. இன்றும் அதையே பலர் சொல்கின்றனர். காரணங்கள் என்னவாக இருப்பினும், புகைப்பதால் புகைப்பவர்களும் இணையர்களும் பந்தங்களும் பிறரும் புண்படுகின்றனர். ஆரோக்கியமான ஆயுளுக்கும் வளமான வாழ்வுக்கும் என்றென்றைக்கும் புகை பகைதான்!
  • மே 31: உலகப் புகையிலை ஒழிப்பு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்