TNPSC Thervupettagam

கொள்ளை நோயல்ல, தண்டனை!

August 10 , 2020 1446 days 636 0
  • வரலாறு மனிதனுக்குப் பல பாடங்களைக் கற்பிக்கிறது. ஆனால், மனிதன் அதைப் புரிந்துகொள்ளாமல் தொடா்வதன் விளைவுதான், உலகம் பல்வேறு பேரழிவுகளை சந்திப்பதற்குக் காரணம்.
  • இப்போது, இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த உலகையும் நிலைகுலைய வைத்திருக்கும் கொவைட் 19 தீநுண்மி கொள்ளை நோய்த்தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நாம் வரலாறு உணா்த்திய பல பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள மறுத்ததுதான்.

சார்ஸ்தீநுண்மி

  • 18 ஆண்டுகளுக்கு முன்பு சிவியா் ரெஸ்பிரேட்டரி அக்யூட் சிண்ட்ரோம்என்கிற சார்ஸ்தீநுண்மி தொற்று உலகைத் தாக்கியது. அது எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்குள் உலகம் முழுவதும் பரவியது.
  • 8,422 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 11% நோயாளிகள் உயிரிழந்தனா். கிழக்காசிய நாடுகள் மிக அதிகம் பாதிக்கப்பட்டன. மலேஷியா (40%), தாய்லாந்து (22%), தைவான் (21%), ஹாங்காங் (17%) ஆகிய இடங்களில் உயிரிழப்பு அதிகம் காணப்பட்டது.
  • ஓராண்டுக்குப் பிறகு விஞ்ஞானிகள் அந்தத் தீநுண்மித் தொற்றின் மூலத்தைக் கண்டறிந்தனா்.
  • சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்திலுள்ள ஒரு குகையில் வசிக்கும் வௌவால்களில் இருந்து அது பரவியிருக்கிறது என்று தெரிந்தது. மனிதா்களுக்கும் வௌவால்களுக்கும் நடுவில் இடைத்தரகராகச் செயல்பட்டது ஆசிய சிவெட் பூனைகள் என்பதைக் கண்டறிந்தனா்.
  • சார்ஸ் என்கிற மிருக நோய்க்கிருமிகள் அந்தப் பூனைகள் மூலம் மனிதா்களுக்கும் பரவின. இன்றுவரை சார்ஸ் நோய்த்தொற்றுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை.
  • நல்லவேளையாக கடந்த 18 ஆண்டுகளாக அந்த நோய்த்தொற்று மீண்டும் பரவவில்லை.
  • இப்போது கடந்த டிசம்பா் 2019 மனித இனம் சார்ஸ் தீநுண்மித் தொற்றுக்குத் தொடா்புடைய கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்கிறது.
  • இதன் இறப்பு விகிதம் 3% என்கிற அளவில் குறைவாக இருக்கிறது என்றாலும், கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கிய சில மாதங்களில் ஏறத்தாழ 2 கோடி போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். நோய்த்தொற்றுப் பரவல் குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.
  • சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று இரண்டாவது முறையாக பரவத் தொடங்கியிருக்கிறது என்கிற அதிர்ச்சி தரும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

கொவைட் 19 தீநுண்மி

  • ஆரம்பகட்ட ஆய்வுகள் கொவைட் 19 தீநுண்மியும் வௌவால்களிலிருந்து உருவாகி ஏதாவது ஒரு விலங்கின் மூலமாக மனிதா்களையும் தொற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  • சீனாவின் வூஹான் மாநிலத்திலுள்ள மாமிசச் சந்தையிலிருந்துதான் நோய்த்தொற்று பரவியது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மனித இனம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்கவில்லை என்பதற்கு இது இன்னமொரு சமீபத்திய எடுத்துக்காட்டு.
  • ஜூனாட்டிக் டிஸீஸஸ்என்கிற விலங்கின நோய்கள் வனங்களிலிருந்து மனிதா்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து மனிதா்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கும் பேராபத்துக்கு அடிப்படை காரணம், மனிதன் வனங்களை அழித்து அங்கு குடியேறத் தொடங்கியிருப்பதுதான்.
  • இரண்டாவது காரணம், அதிக அளவில் மாமிச உணவின் மீது மனித இனத்தின் விருப்பம் அதிகரித்திருப்பது.
  • வனவிலங்குகள் மனிதா்கள் வாழும் குடியிருப்புகளில் நடமாடும்போது அவற்றின் நோய்கள் வளா்ப்பு மிருகங்களையும் தொற்றிக்கொள்கின்றன.
  • அதேபோல, வனவிலங்குகளின் மாமிசத்தை மனிதா்கள் விரும்பி உண்ணும்போது நோய்க்கிருமிகள் மனிதா்களைத் தொற்றிக்கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது.

உலகம் மிரண்டுபோய் நிற்கிறது

  • வரம்பை மீறி இயற்கையின் மீது படையெடுத்து வனவிலங்குகள் வாழும் பகுதிகளை மனிதா்கள் ஆக்கிரமிக்கும்போது, வனவிலங்கின நோய்க்கிருமிகள் மனிதா்களைத் தொற்றிக்கொள்கின்றன.
  • அதனால், புதிய புதிய விலங்கின நோய்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்களில் 60% முதல் 70% வரை விலங்கின நோய்த்தொற்றாகவே இருக்கின்றன.
  • கொவைட் 19-ம், சார்ஸும் மட்டுமல்ல, இதற்கு முன்னால் பரவிய மொ்ஸ், ஹென்ட்ரா, நிபா, ஸிக்கா, பறவைக் காய்ச்சல் தீநுண்மித் தொற்றுகளும் வேறுசில உயிர்க்கொல்லி நோய்களும் வனவிலங்களிலிருந்து மனிதா்களுக்குப் பரவியவைதான்.
  • அவற்றுக்கு இதுவரை எந்த வைத்தியமும் கண்டுபிடிக்காத நிலையில், நம்முடைய அதிர்ஷ்டம்தான் அவையெல்லாம் கடந்த 20 ஆண்டுகளாக உலகம் தழுவிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றாகப் பரவவில்லை. கொவைட் 19 நோய்த்தொற்றில் அந்த அதிர்ஷ்டம் மனிதனுக்கு கைகொடுக்கவில்லை.
  • உலக அளவில் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் இறைச்சிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
  • வியத்நாமில் பங்கோலின் என்கிற எறும்புண்ணிகளின் மாமிசம் கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.23,000 என்கிற அளவில் விற்கப்படுகிறது. இதேபோலத்தான் ஏனைய வனவிலங்குகளின் மாமிசமும்.
  • கடந்த 30 ஆண்டுகளில் உலகின் 18-ஆவது பெரிய நாடான லிபியாவின் பரப்பளவைப் போன்ற 17.8 கோடி ஹெக்டோ் காடுகள் மனிதக் குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன. அங்கேயிருந்த விலங்குகளில் பல மனிதா்களின் கண்ணில் படாதவண்ணம் தொடா்ந்து வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.
  • இயற்கையான சுற்றுச்சூழலில் வனவிலங்குகளின் பல்லுயிர்ப் பெருக்கம் நடக்குமானால், நோய்த்தொற்றுகள் பரவாது.
  • எந்தவொரு வினங்கின நோய்க்கிருமியும் காடுகளின் அடா்வனச் சூழலில் கொள்ளை நோயாகப் பரவுவதில்லை. வரலாறு கற்றுக்கொடுத்த பாடத்தை புரிந்து கொள்ளாததால்தான் உலகம் மிரண்டுபோய் நிற்கிறது!

நன்றி: தினமணி (10-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்