TNPSC Thervupettagam
May 9 , 2021 1356 days 648 0
  • திராவிட இயக்கம் வலுவாக இருந்த பகுதிகளுள் ஒன்று ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியின் ஒரத்தநாடு. அங்குள்ள உறந்தைராயன் குடிக்காட்டில் பிறந்த கோ.இளவழகனுக்குப் பெற்றோர் கோவிந்தசாமி - அமிர்தம் வைத்த பெயர் அப்பாவு என்பது தான்.
  • அதை இளவழகன் என்று மாற்றி, இயக்கச் செயல்பாட்டாளராகவும் புத்தக ஈடுபாட்டாளராகவும் வளர்த்து வழிகாட்டியவர் புலவர் நக்கீரன்.
  • தமிழ் ஈடுபாடு வந்ததால், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட முன்னணி வீரராக மாணவப் பருவத்திலேயே எழுந்துவிட்டார் இளவழகன்.
  • பட்டுக்கோட்டை, திருச்சி சிறைகளில் நாற்பத்தெட்டு நாள் சிறைவாசியானார். அப்போது ஏற்பட்ட கா.காளிமுத்து தொடர்பு, இறுதிக் காலம் வரை இருவரையும் பிணைத்து வைத்திருந்தது.
  • பெரியார், அண்ணா, பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் நூல்களோடு உறவாடுவதில் மகிழ்ந்த இளவழகன் மனம், மின்வாரியப் பணி சென்னை எண்ணூரில் கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தது.
  • விரும்பிய புத்தகங்களை வேண்டிய அளவு வாங்க உடனடிப் பணி வாய்ப்பே தேவை என அவர் தீர்மானித்தார். மாணவர்போல இதழ்களையும் நூல்களையும் அடுக்கி எடுத்து அலுவலகம் செல்வது இளவழகன் வழக்கம்.
  • புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அப்போது சென்னையில் வசித்துவந்தார். பழுத்த காந்தியரான அவர், சர்வோதய இயக்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்டுவந்தார். அவரோடு தங்கியிருந்தார் இளவழகன். அதனால் காந்திய, சர்வோதய இயக்க ஈடுபாடு மிகுந்தவரானார்.
  •  நன்றி எதிர்பார்க்காமல் சமூகத்துக்குப் பயன்படும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற உறுதியை இளவழகனுக்கு வழங்கியவர் பெரியார். எளிமையாய் வாழக் கற்றுத்தந்தவர் புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம். தமிழுக்கு வளமும் பாதுகாப்பும் வழங்குவதற்கு வாழ்வதே பயனுள்ள வாழ்வு என நெறிப்படுத்தியவர் புலவர் நக்கீரனார்.
  • இம்மூவரும் தந்த வழியே என் வழி என அடக்கமாகச் சொல்லி மகிழ்வது இளவழகனார் வழக்கம்.
  • ஈழ விடுதலை இயக்கங்களோடு இரண்டறக் கலந்த பணிகளின் தொடர்ச்சியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இவர், தொடர்ந்து போராடி மீண்டும் பணியைப் பெற்றார்.
  • பணி கிடைத்ததும் ‘இப்போது நானே விலகுகிறேன்’ என்று விருப்ப ஓய்வுபெற்றார். பிறகு, தமக்கு விருப்பமான அச்சுத் தொழிலிலும் பதிப்புத் துறையிலும் கால்பதித்தார்.

புத்தகங்களோடு வாழ்ந்தவர்!

  • ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணா மிருத சாகரம்’ நூலில் இவரின் பதிப்புப் பணி தொடங்கியது.
  • தமிழறிஞர் படங்களைத் தேடித்தேடி அங்கே இடம்பெறச் செய்தார். படங்களைத் திரட்டுவதிலும் அறிஞர்களின் நூல்களைத் திரட்டுவதிலும் எந்த அவமதிப்பு நேர்ந்தாலும் பொருட்படுத்த மாட்டார். எவ்வளவு காலங்கடத்தினாலும் சோர்வடைய மாட்டார்.
  • முப்பதாண்டு பதிப்புப் பணியில் பாவாணர், மயிலை சீனி வேங்கடசாமி, சாமி.சிதம்பரனார், மா.இராஜ மாணிக்கனார், வெள்ளை வாரணனார், வா.சுப.மாணிக்கனார், திரு.வி.க., சாத்தான்குளம் அ.இராகவன், தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ந.மு.வே.நாட்டார். வெ.சாமிநாத சர்மா,ச.மாமந்தரபாரதியார், ந.சி.கந்தையா, புலவர் குழந்தை, முடியரசன், கா.அப்பாத்துரையார், இரா.இளவரசு, புலவர் இரா.இளங்குமரனார் முதலிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் முழுமையான தொகுப்பாகத் திரட்டி வெளியிட்டுள்ள பெருஞ்சாதனை இளவழகனுடையது.
  • பாரதிதாசன் நூல்கள் அனைத்தையும் ‘பாவேந்தம்’ என 25 தொகுதிகளாக அழகுற வெளியிட்டுள்ளார்.
  • ‘செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்’ எனச் சொற்களின் பொருள் பிறந்ததற்கான காரணத்தை விளக்கும் இளங்குமரனாரின் அரிய பத்துத் தொகுதிகள் என்றும் பயன் தருபவை. எங்கள் ஆசிரியர் தி.வே.கோபாலய்யர் ‘அச்சேறுமா’ என்ற கவலையோடு தம் இலக்கணப் புலமையைப் பிழிந்து தந்திருந்த நூல்கள், ‘இலக்கணக் களஞ்சியம்’ எனத் ‘தமிழ்மண்’ பதிப்பகத்தால் இளவழகன் வழியாய் வெளியாயின.
  • அண்ணாவை எழுத்தில் பார்த்து வியந்துகொண்டிருந்த இளவழகனுக்கு, அண்ணாவை நேரில் பார்த்தபோது பற்று கூடியது.
  • ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ (வே.ஆனைமுத்து) தொகுப்பை 1974-ல் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, “அண்ணா அவர்களுக்கும் இப்படித் தொகுப்பு வர வேண்டும்” எனப் பேசியதைக் கேட்ட பின்பு வைராக்கியம் உருவெடுத்தது.
  • அந்த வைராக்கியமே அறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு அனைத்தையுமே ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ என 110 தொகுதிகளாக உருவாக்கும் உறுதியைத் தந்தது.
  • முதற்கட்டமாக 64 தொகுதிகள் 21.12.2019-ல் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டன. எஞ்சிய 46 தொகுதிகள் வெளிவரும் சூழலை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் கோ.இளவழகனார் உலக வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
  • ஆபிரகாம் பண்டிதரில் தொடங்கி ‘தமிழ்மண்’ பதிப்பகம் கண்ட அவர், அறிஞர் அண்ணாவைத் தந்த நிறைவோடு விடைபெற்றுள்ளார். அறிஞர்களின் நூல்கள் ஒவ்வொன்றும் இளவழகனார் நினைவை என்றும் பேசியபடியே இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்