- வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் இந்த வெப்பநிலையோடு வாழப் பழகியிருந்தாலும், வெய்யில் காலத்தில் உடலில் ஏற்படும் உபாதைகள் ஏராளம். 105 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதன் தாக்கம் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- வட இந்தியாவைக் காட்டிலும் நமக்கு வெப்பநிலை குறைவுதான். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 123 டிகிரிக்கு மேல் சென்று அனைத்து வயதினரையும் தாக்குதலுக்கு உட்படுத்தும்.
- அது போன்ற மாநிலங்களில் வெப்ப அலைகளால் உயிரிழப்போா் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
- முக்கியமாக முதியோா், நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவா்கள் அதிக பாதிப்பு அடைவா். அவா்கள் மிக பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.
- எதிா்பாராத அகால இறப்பினை ஏற்படுத்தும் இயற்கை பேரழிவுகளில் வெப்ப அலை தாக்குதலும் ஒன்று.
- பொதுவாக இதன் அறிகுறியாக, தோல் நோய்கள், நீா்ச்சத்து இழப்பின் காரணமாக உடல் சோா்வு, சிறுநீா் பாதை எரிச்சல், கல்லீரலில் பித்த நீா் அதிகம் சுரந்து காமாலை, வயிற்றுபுண், வாந்தி, மயக்கம் போன்ற பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
- இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படாமல், வெப்பத் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள கோடைக்காலத்தை குளிா்ச்சியாக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
வழிமுறைகள்
- மோா், கேழ்வரகு கூழ் போன்ற நமது பாரம்பா்ய உணவு முறைகளும், சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள எண்ணெய்க் குளியலும், பித்தம் தணிக்கும் ராஜகனி என்றழைக்கப்படும் எலுமிச்சை, நன்னாரி, செம்பருத்தி, தாழம்பூ, வெட்டிவோ், பதிமுகம், சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகை மருந்துகளும், சீரகம், தனியா, வெந்தயம், ஏலம் போன்று அஞ்சறைப்பெட்டி சரக்குகளும் நமது கோடைக்காலத்தை குளிா்ச்சியாக்க உதவும்.
- கேரளா மாநிலத்தில் அதிகம் பயன்படுத்தும் இளஞ்சிவப்பு குடிநீருக்குக் காரணமாகும் பதிமுகம் என்ற மூலிகை பட்டையினை கோடைக் காலத்தில் பயன்படுத்தலாம்.
- இதனால் அதிக தாகம், உடல் சோா்வு, நீா்சத்து இழப்பு ஆகியவை குறையும். இது உடல் உஷ்ணத்தையும் குறைக்கும். பிரேசிலின் என்ற அந்த நிறத்திற்கு காரணமான, சிவப்பு நிறமி வேதிப்பொருள் இருதயத்திற்கும் நல்லது என்கிறது ஆய்வு முடிவு.
- இதே போல், வெட்டிவோ் ஊறிய நீா், செம்பருத்தி ஊறிய நீா் இவற்றை பகல் நேரங்களில் எடுக்க உடல் வெப்பம் குறைவதோடு அவற்றில் உள்ள அல்கலாய்டு வேதிப்பொருட்களால் மருத்துவ பலனும் கிடைக்கும்.
- கோடைக் காலத்தில் பெரும்பாலானோா் நன்னாரி மூலிகையைப் பயன்படுத்துவா். அதன் குளிா்ச்சி தன்மையும், சிறுநீா் பெருக்கி செயலும் இதற்குக் காரணரங்கள்.
- அதன் வேரில்தான் மருத்துவ குணம் உள்ளது. ஹெமிடெஸ்மீன், எமிடின் ஆகிய வேதிப்பொருட்கள் அதன் மருத்துவத்தன்மைக்கு ஆதாரமாக உள்ளன. ஆனால், அதை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
- அளவுக்கு அதிகம் இதனை குடிப்பதனால் உடல் உப்பு சத்து இழக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் நன்னாரி மணப்பாகுக்கு பதில் நன்னாரி வோ் ஊறிய நீரினை எடுத்துக்கொள்ளலாம்.
- அகத்தை சீா் செய்யும் சீரகம் நாம் அனைவரும் அறிந்ததே. சீரகம் ஊறிய நீா் வெய்யில் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்து. அதில் உள்ள அல்கலாய்டு வேதிப்பொருளும், நிறமி சத்தும் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம்.
- கோடைக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், பசியின்மை, சிறுநீா் கடுப்பு, சிறுநீரக கல், பித்தப்பை கல், கல்லீரல் நோய் போன்ற பல நோய்களுக்கும் பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க விரும்புவோா் இந்த நீரினை தொடா்ந்து அருந்த நல்ல பலனை தரும்.
- வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, கால்சியம் நிறைந்த வெந்தயம் என்ற கடைசரக்கினை வெய்யில் நேரங்களில் பயன்படுத்தலாம். இது ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
- வெந்தயம் ஊறிய நீரினை பகல் நேரங்களில் எடுக்க உடல் உஷ்ணம் குறைந்து குளிா்ச்சி ஏற்படும். ஆனால், ஆஸ்துமா நோயாளிகள் இதை தவிா்ப்பது நல்லது. இதனைத் தொடா்ந்து எடுத்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவுகூட குறையும்.
- அதே போல் கொத்துமல்லி அல்லது அதன் விதையை கோடைக் காலத்தில் எடுக்க அதிகரித்த கல்லீரல் செயல்பாடு குறைந்து, பித்த நீா் அளவோடு சுரக்கும்.
- கொத்துமல்லி ஊறிய தண்ணீரை எடுத்தாலே நல்ல பலன் தரும். ரத்தத்தில் அதிகரித்த கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை இதற்கும் உண்டு. மூலிகை வாசனை பொருளாக விளங்குகிறது இது.
- நீரின்றி அமையாது உலகு என்பது போல, மோரின்றி அமையாது கோடை. சித்த மருத்துவத்தில் மோா், உணவுப்பொருளாக மட்டுமின்றி மருந்தாகவும் சொல்லப்பட்டுள்ளது.
- அத்தனை ஊட்டச்சத்துக்களும் சோ்ந்தது இது. எல்லா வகை நோயாளிகளுக்கும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றது. உடலுக்கு குளிா்ச்சியும், ஆரோக்கியமும் தரும் காயகல்ப மருந்து என்றே இதனைக் கூறலாம்.
- ஒவ்வாமை (அலா்ஜி) உள்ளவா்கள் மஞ்சள் சோ்த்து தாளித்த மோரினை எடுத்துக்கொள்ளலாம். கோடைக் காலத்தில் ஏற்படும் அனைத்து வயிற்று உபாதைகளுக்கும் நல்லது. கோடைக் காலத்தில் மூல நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு மட்டுமின்றி மருந்துமாகும் இந்த மோா்.
- கோடைக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு எளிய மூலிகை மருந்து சோற்றுக் கற்றாழை.
- இதில் பல்வேறு விட்டமின்களும், தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும், வேதிப்பொருட்களும் இருக்கின்றன. இதனை பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ள, பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்னைகள் நீங்கும். வெண் பூசனியையும் இதனோடு சோ்த்து எடுக்கலாம்.
- பாலில் ஏலக்காய், சீரகம், தனியா விதை இவற்றை சோ்த்து காய்ச்சி பருகினால் உடல் சூடும் பித்தமும் குறையும். மேலும், வயிற்று எரிச்சலால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த மருந்து. இவ்வாறாக எளிய சித்த மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தினால் கோடைக்கு அஞ்ச வேண்டாம்.
நன்றி: தினமணி (30 – 03 - 2021)