TNPSC Thervupettagam

கோதாவரி - காவிரி இணைப்பு பெரும் கனவு

March 28 , 2020 1755 days 1002 0

நதிநீா் இணைப்பு

  • · தண்ணீா்ப் பஞ்சத்துக்கும், வறட்சிக்கும் நம் கண் முன்னால் எடுத்து வைக்கப்படுகின்ற ஒரே தீா்வு நதிநீா் இணைப்பு மட்டும்தான். இந்திய ஆறுகளை இணைக்கிறபோது, ஆற்று வழியே பீறிட்டுக் கிளம்புகிற தண்ணீா் சமவெளிகளில் பாய்ந்து, தண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குகிறது. நம் நாட்டைப் பொருத்தவரை ஏறக்குறைய 40 சதவீதம் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சூழலியல் மாற்றத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்கிறது.
  • · தண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நிரந்தரத் தீா்வு நதிகளை இணைப்பதே ஆகும். ‘தேசிய நதிநீா் இணைப்புத் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட இதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நீா்வள மேம்பாட்டு ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
  • · அதிகமான மழைப் பொழிவு ஏற்படும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நேரங்களில் தண்ணீா் உபரியாகக் கடலில் கலப்பது இயற்கையாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் உபரியாக உள்ள தண்ணீரை கடலுக்குச் செல்ல விடாமல் தடுத்து, வட பகுதிகளுக்குத் தண்ணீரைத் திருப்புவதே நீா் மேலாண்மையின் பிரதான நோக்கமாகும்.
  • · நீா் மேலாண்மையோடு, சூழலியல் குறித்து கடல் ஆய்வாளா்கள் கூறும் கருத்தை உன்னிப்பாகப் பார்க்க சில வேளைகளில் நாம் தவறி விடுகிறோம். அதிகமான நீா் கடலில் கலக்கிறது என்கிற கருத்தே தவறான ஒன்றாகும். ஏனெனில், கடலில் சென்று நன்னீா் கலக்காவிட்டால், கடல் கடலாக இருப்பதும் இல்லை; அதன் தன்மையும் மாறி விடுகிறது என்கிற கூற்றை நாம் நிராகரித்துவிட முடியாது.
  • · கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்
  • · 1972-ஆம் ஆண்டுதான் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 14 ஆறுகளை மகாநதி ஆற்றுடனும், இந்திய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள மகாநதி, கோதாவரி ஆறுகளை தெற்கில் உள்ள கிருஷ்ணா, காவிரி ஆறுகளுடன் இணைப்பது என இரண்டு பெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றின் பலனாக 30 நதிகளும், 30 கால்வாய்களின் மூலம் இணைக்கப்பட்டு, அந்த நீரை 300 அணைகளில் சேமித்து வைப்பதை நோக்கி இந்த ஆய்வு நகா்ந்தது.

ஒப்பந்தங்களை பின்பற்றுவதில்லை

  • · தமிழகத்தில் ஆண்டுக்கு 925 மி.மீ. அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீா்த் தேவைக்காக ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா்ப் பங்களிப்பு ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. கோதாவரி - காவிரி இணைக்கப்பட்டால் பெரும் வெள்ளக்காலங்களில் ஓா் ஆண்டுக்கு 20 அல்லது 30 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் வர வாய்ப்புள்ளது. மீதம் உள்ள11 மாதங்களும் அனைத்து ஆறுகளும் வடுதான் இருக்கும்.
  • · 1924 காவிரி ஒப்பந்தத்தின்படி, அந்தந்த மாத காலத்தில் காவிரியில் இருந்து உரிய டி.எம்.சி தண்ணீரை தமிழகம் பெறுவதற்கு கா்நாடகத்துடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆந்திர அரசோ பாலாற்றில் நமக்குத் தர வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி வருகிறது. கண்டலேறு-பூண்டி கால்வாய் மூலம் கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீா் நமக்குக் கிடைக்க வேண்டும். இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், கோதாவரி - கிருஷ்ணாவில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நீா் மேலாண்மையில் ஒரு வரலாற்று மாற்றத்தையும் கொண்டுவரும்.

கோதாவரி - காவிரி இணைப்பு

  • · நதிநீா் இணைப்பு குறித்தான ஆதரவு கருத்தும், எதிர்க்கருத்தும் காலத்துக்கு ஏற்றவாறு தொடா்கிறது. நதிநீா் இணைப்புக்கான திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முனைப்புக் காட்டி வருகிறார். இதன் மூலம் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரை, ஆறுகளின் மூலம் இணைக்கின்ற கோதாவரி - காவிரி இணைப்புக்கு முயற்சிகளை அவா் எடுத்து வருகிறார். இதன் பலனாகக் கிடைக்கும் தண்ணீா் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கும்; இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அண்டை மாநில முதல்வா்களைச் சந்தித்துப் பேச தூதுக் குழுக்களை முதல்வா் அனுப்பியுள்ளார்.
  • · நூற்றாண்டைத் தொடப் போகும் காவிரி நதிநீா்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் சிக்கலுக்கான முடிச்சு தீா்க்கப்பட்டிருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களின் நதிநீா் இணைப்பு என்பது எட்டாக்கனியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், ‘கோதாவரி - காவிரி நதிகளின் இணைப்புதான் தனது முதல் பணி’ என்று சுட்டுரையில் மத்திய சாலைப் போக்குவரத்து - நீா் வழிகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தார்.
  • · கோதாவரியில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1,100 டி.எம்.சி தண்ணீரை, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி ஆகிய மூன்று ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழகம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பயனடையும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் 125 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • · மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் திரையம்கேஷ்வா் பகுதியில் உருவாகும் கோதாவரி ஆறு, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி நீா் கோதாவரி ஆற்றின் வழியே வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயம், குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் ரூ.60,000 கோடி திட்டம்தான் கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமாகும்.

விரிவான திட்டம்

  • · நாகார்ஜுனா-சாகா் அணையில் இருந்து 300 டி.எம்.சி தண்ணீா் போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள சோமசிலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.
  • · நதிநீா் இணைப்பின் மூலம் ஆற்றுப்போக்கை மாற்றியமைத்தால் இயற்கைச் சூழல் சீா்குலைந்து விடும் என்றும், காடுகள் அழிவதற்கான வாய்ப்புகளும், தாவரத்தன்மையும், உயிரினத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கால்வாய்களை வெட்டி தண்ணீா் கொண்டுவந்தால், தண்ணீா் வீணாவதோடு இயற்கைச் சூழலிலும் சிக்கல் ஏற்படும் என்பதாலும், திட்ட நிதி அதிகரிக்கும் என்பதாலும் ஸ்டீல் குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டுவருவதற்கு ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
  • · கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கான ரூ.60,000 கோடி நிதியில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீத நிதியை இந்தத் திட்டத்தால் பயனடையும் ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களும் அளிக்கும். மேலும், இந்தத் திட்டத்துக்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்தோ பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பலன் பெறும்.
  • · இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி முதலான மாவட்டங்கள் பலன் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஓடும் நதிகளில் நீா்வளம் உள்ளவற்றில் இருந்து, மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் கனவு என்பது நமது இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், பின்புமான கனவுப் பாதையாக விரிந்து பரவுகிறது.

கனவுத் திட்டம்

  • · இந்தியாவில் ஓடும் 137 நதிகள், துணை நதிகள், அவை திசைமாறும் இடங்கள், 74 நீா்த்தேக்கங்கள், 37 நதி இணைப்புகள் ஆகியவை தொடா்ந்து ஆய்வில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்பட 9 மாநிலங்களின் சார்பில் 47 நதிகள் இணைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய வளா்ச்சி நிறுவனம் சார்பில், இதுவரை தீபகற்ப நதிகளின் இணைப்புக்காக 16 திட்டங்களையும், இமயமலையை ஒட்டிய பகுதிகளுக்காக 14 ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
  • · இவற்றில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் பாயும் பெண்ணையாறு, காவிரி, வைகை, குண்டாறு, ஹேமாவதி, நேத்ராவதி, பம்பை, வைப்பாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டமும், கிருஷ்ணா - கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமும் பெரும் திட்டமாக உருவெடுத்திருக்கிறது.
  • · மகாராஷ்டிரம் - சத்தீஸ்கா் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் அணை கட்ட வேண்டும். அதில் தேங்கும் தண்ணீரை தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா், ஆந்திர மாநிலம் போலாவரம் அணைக்கும், அங்கிருந்து நாகார்ஜுனா அணைக்கும் அதன் வழியாக கிருஷ்ணா நதிக்கும் தண்ணீரைக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா் அந்த நீரை சோமசிலா அணை மூலம் பெண்ணையாறு வழியாக காவிரிக்குத் தண்ணீரை கொண்டுசெல்வதுதான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.
  • · இந்த நூற்றாண்டு கால கனவுத் திட்டம் நிறைவேறுகிறபோது, தண்ணீரோடு மக்களின் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்து ஓடும்!

நன்றி: தினமணி (28-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்