TNPSC Thervupettagam

கோயில் நகரங்களில் மதுவை ஒழிக்கலாமே?

January 25 , 2025 2 days 39 0

கோயில் நகரங்களில் மதுவை ஒழிக்கலாமே?

  • மத்திய பிரதேச மாநிலத்தில் கோயில்கள் அமைந்துள்ள 17 நகரங்களில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க செய்தியாக அமைந்துள்ளது. மாநிலத்தில் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இத்தகைய அறிவிப்பை மத்திய பிரதேசஅரசு வெளியிட்டுள்ளது. அங்குள்ள நர்மதை நதி புனித நதியாக கருதப்படுவதால் அதை ஒட்டி 5 கி.மீ., சுற்றளவுக்கு மதுபானக் கடைகள் நடத்த அனுமதியில்லை என்ற உத்தரவும் அங்கு நீடிக்கிறது.
  • தமிழகமும் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அரசுகளின் மதுபானக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
  • தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக மதுவிலக்கு இருந்தாலும், தேர்தலில் வாக்குறுதியாக அளித்து வரும் சூழ்நிலை இருந்தாலும் மதுவிலக்கு என்பது நெடுந்தொலைவிலேயே உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகள் மதுவிலக்கு மாநாடு நடத்தி நெருக்கடி கொடுத்த நிலையிலும் அதை நோக்கிய பயணம் பாராட்டும் வேகத்தில் இல்லை.
  • நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் மதுபானக் கடைகள் இருக்க கூடாது என்று கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டன.
  • மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற திமுக அரசின் கொள்கையின்படி, இதுவரை 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே நீடிக்கிறது. இன்னும் 5000-க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகின்றன.
  • மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பது உண்மையானால், நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த கடைகளை மூடியதன் அடுத்தகட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாணியை பின்பற்றி, கோயில் நகரங்கள் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.
  • கோயில்கள் நிறைந்த நகரமான காஞ்சிபுரத்தை ஒட்டி 14 கடைகளும், கும்பகோணத்தைச் சுற்றி 9 கடைகளும், ரங்கத்தை ஒட்டி 2 கடைகளும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, அங்கிருந்த 5 டாஸ்மாக் கடைகளை மூடினார். அதன்பிறகு, அந்த நகரை யொட்டி 2 கடைகள் புதிதாக முளைத்துள்ளன.
  • இதுபோன்ற கோயில் நகரங்களை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக மூடி, மதுவிலக்கை நோக்கி தமிழகம் முன்னேற வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதி புனிதமாக கருதப்படுவதைப் போல், தமிழகத்திலும் காவிரி நதி புனிதமான நதியாக உள்ளது. எனவே, காவிரியை ஒட்டி அமைந்துள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்