TNPSC Thervupettagam

கோவிட்-19 நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

March 10 , 2020 1770 days 1171 0

 ‘கோவிட்-19’ பெயர் விளக்கம் என்ன?

  • கரோனா வைரஸ் டிஸீஸ்-2019 (கரோனா வைரஸ் நோய்-2019) என்பதன் சுருக்கம்தான் ‘கோவிட்-19’. இந்த நோய் ‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கரோனா வைரஸ் 2, அதாவது சார்ஸ் வைரஸ்-2 என்ற வைரஸால் ஏற்படுகிறது. கரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள வைரஸ்களுள் இதுவும் ஒன்று. 2003-ல் உலகைப் பீதிக்கு உள்ளாக்கிய சார்ஸ் வைரஸின் இன்னொரு வடிவம்தான் தற்போது ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கிய வைரஸ்.

இந்த நோய் எங்கிருந்து தொடங்கியது?

  • சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரத்தின் மீன் சந்தையைத்தான் தற்போதைய ‘கோவிட்-19’-ன் நதிமூலமாகக் கருதுகிறார்கள். அங்கே வந்த வாடிக்கையாளர்கள், அங்கே பணிபுரிந்தவர்கள் போன்றோருக்குத்தான் முதலில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டது.

மற்ற கரோனா வைரஸ்கள் எவை?

  • சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’ எனப்படும் சார்ஸ் நோயானது 2002-ல் 37 நாடுகளில் பரவி உலகெங்கும் பீதியைக் கிளப்பியது. இதனால் 8,000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. 750 பேர் பலியானார்கள். இன்னொரு மோசமான கரோனா வைரஸ் ‘மிடில் ஈஸ்டர்ன் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’ எனப்படும் மெர்ஸ், 2012-ல் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவியது. இதனால் 2,500 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 35% உயிரிழந்தனர்.

கோவிட்-19’-ன் அறிகுறிகள் என்ன?

  • இந்த வைரஸ் நோயால் நுரையீரல் அழற்சி (pneumonia) ஏற்படுகிறது. இருமல், கடுமையான காய்ச்சல் போன்றவற்றுடன் மூச்சுவிடவே சிரமமாக இருக்கும். உடல்நிலை மோசமானால் பல முக்கியமான உள்ளுறுப்புகள் செயலிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கோவிட்-19’-க்குத் தடுப்பு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

  • இதுவரை இந்த நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே மற்ற காய்ச்சலுக்கு இருக்கும் எந்த மருந்தும் ‘கோவிட்-19’-க்குப் பலனளிக்கவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பவர்கள் விரைவில் குணமாகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் வயதானவர்களும் ஏற்கெனவே நோயுற்று இருப்பவர்களும் ‘கோவிட்-19’-ன் தாக்குதலில் பலியாகும் வாய்ப்பு அதிகம். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோருக்கு ‘கோவிட்-19’ பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் பலியாகியிருக்கிறார்கள்?

  • உலக அளவில் ‘கோவிட்-19’ பாதிப்பால் 3,800 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 3,120 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மொத்தம் 108 நாடுகளில் 1,10,000 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை 61 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர். சீனாவில் மட்டும் 81,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இதுவரை 58,600 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

கோவிட்-19’- முக உறை தடுக்குமா?

  • முக உறை அணிவதால் நூற்றுக்கு நூறு சதவீதம் கிருமித் தொற்றைத் தடுத்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. வைரஸ் என்பது மிகவும் நுண்மையானது. அது கண்களின் வழியாகக்கூட பரவும். முக உறைகளையும்கூட ஊடுருவக்கூடியது. எனினும், ‘கோவிட்-19’ தொற்று உள்ள நபர் இருமும்போது வெளிப்படும் துளிகளை முக உறைகள் தடுக்கக்கூடியவை. எனவே, அவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
  • கோவிட்-19’ நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை முக உறை பயன்படுத்துவதால் ஐந்து மடங்கு தவிர்க்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரே முக உறையை அடுத்தடுத்த நாட்கள் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய பின் சாலையோரத்தில் எறிந்துவிடாமல் முறையான குப்பைத்தொட்டியில் போடவும். குப்பைத்தொட்டிகளை முறையாக அப்புறப்படுத்துவது அரசின் பொறுப்பு.

காற்றின் மூலம் கரோனா வைரஸ் பரவுமா?

  • கரோனா வைரஸ் தனித்துக் காற்றின் மூலம் பரவுமா என்பது இதுவரை அறியப்படவில்லை. அடுத்தவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் துளிகளில் கரோனா வைரஸ் இருந்து, அது நம் உடலுக்குள் செல்லும்போதுதான் தொற்று ஏற்படும்.

கரோனா வைரஸ் வகைமாற்றம் அடைகிறதா?

  • ஆம்! வைரஸ்களின் உள்வகைகள் (strain) மாற்றமடையும் இயல்பு கொண்டவையே. அதேபோல் தற்போது பரவிவரும் கரோனா வைரஸும் மாற்றமடைந்துகொண்டிருக்கிறது. இதுவரை ‘எஸ்’, ‘எல்’ ஆகிய இரு வகைகள் பிரிந்திருக்கின்றன. ‘எஸ்’ வகை பழையது. புதியதான ‘எல்’ வகைதான் சீனாவில் 70%-க்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. எப்போதும் புதிய வகை வைரஸ்களுக்குத் தீவிரம் அதிகம். எனவே, அவை உடலுக்குள் எளிதில் பெருக்கமடைவதுடன் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். ‘எல்’ வகைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கோவிட்-19’-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தாலே நோய் தொற்றுமா?

  • கோவிட்-19’-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இருமிக்கொண்டோ தும்மிக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்கு அருகில் இரண்டு மீட்டர் தொலைவில் நின்றுகொண்டிருந்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், நோயாளிகள் புழங்கிய இடத்தில் நாம் புழங்க நேர்ந்தாலோ நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.
  • எடுத்துக்காட்டாகநோய்த் தொற்று கொண்ட ஒருவர் தும்மும்போது சிறு சிறு சளித் துளிகள் மேசையிலோ நகரும் படிக்கட்டின் கைப்பிடியிலோ படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சற்று நேரம் கழித்து அங்கே வரும் இன்னொருவர் அந்த இடங்களில் கை வைத்துவிட்டுத் தன்னுடைய வாய், கண், மூக்கு போன்ற உறுப்புகளை விரலால் தொட்டால் நோய்த் தொற்று ஏற்படலாம்.

தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும்?

  • கோவிட்-19’-க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் அறிவியலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். விலங்குகளுக்குத் தடுப்பூசி கொடுத்து பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற ஆபத்தான நோய்களுக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சிகிச்சை அளித்துவிடக் கூடாதல்லவா! எல்லா விதமான பக்கவிளைவுகளையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், தாமதமாகிக்கொண்டிருக்கிறது. புதிய தடுப்பூசி வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கோவிட்-19’ உடலுக்குள் வளர்ச்சியடைய எத்தனை நாளாகும்?

  • ஒருவருக்கு ‘கோவிட்-19’ தொற்றியவுடன் அறிகுறிகள் ஏதும் தென்படாது. 1-14 நாட்கள் வரைக்குள் அறிகுறிகள் தென்படலாம். சராசரியாக ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

செல்லப் பிராணிகளிடமிருந்து ‘கோவிட்-19’ தொற்றுமா?

  • இதுவரை அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கரோனா வைரஸ்கள் பெரும்பாலும் வன உயிர்களிடமிருந்து பரவுபவை. எடுத்துக்காட்டாக, சார்ஸ் வைரஸ் புனுகுப் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. மெர்ஸ் வைரஸ் ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. ‘கோவிட்-19’ குறிப்பாக எந்த விலங்கிடமிருந்து பரவியது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், இறைச்சி வாங்கும்போது சுத்தமான இடத்திலிருந்து வாங்குங்கள். சமைக்கப்படாத இறைச்சியைக் கவனத்துடன் கையாளுங்கள்.

பூண்டு உண்பதால் ‘கோவிட்-19’ தொற்றைத் தடுக்கலாமா?

  • பூண்டு உண்பதால் ‘கோவிட்-19’ தொற்றைத் தடுக்கலாம் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதைப் பொய்யான செய்தி என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் மறுத்திருக்கிறது. பூண்டில் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் திறன் இருந்தாலும் அதனால் ‘கோவிட்-19’-ஐ குணப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

ஒரு பரப்பில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும்?

  • ஒரு பொருளின் மேற்பரப்பில் கரோனா வைரஸ் எத்தனை மணி நேரம் தாக்குப்பிடிக்கும் என்பது பற்றி இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கவில்லை. எனினும், இதுவரை கிடைத்த தகவல்களின்படி சில மணி நேரங்களிலிருந்து சில நாட்கள் வரை இந்த வைரஸ்கள் மனித உடலுக்கு வெளியே நீடிக்கும் என்று தெரிகிறது. இது, எந்தப் பரப்பின் மீது வைரஸ் இருக்கிறது, அந்த இடத்தின் தட்பவெப்பம் எவ்வளவு என்பதையெல்லாம் பொறுத்துதான் அமையும். ஆகவே, அடிக்கடி தரையைக் கிருமிநாசினி திரவங்கள் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

கரோனா தொற்றினால் எந்த அளவுக்கு உடல்நிலை மோசமாகும்?

  • கரோனா வைரஸ் தொற்று எந்த அளவுக்குத் தீவிரம் கொண்டது என்பது குறித்து சீனாவில் ஆய்வொன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் 80% பேர் மெலிதான அறிகுறிகளையே கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு நுரையீரலில் மெல்லிய தொற்று ஏற்பட்டிருந்தது. 15% பேருக்கு மோசமான அறிகுறிகள் வெளிப்பட்டன.
  • மூச்சுவிடுவதில் சிரமம், ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாகக் காணப்படுதல், நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் அவர்களிடம் தென்பட்டன. மேலும் 5% பேருக்குத்தான் மிக மிக மோசமான அறிகுறிகள் தென்பட்டன. மூச்சுவிடுவதில் மிகவும் சிரமம், முக்கியமான உள்ளுறுப்புகள் சரிவர இயங்காதது போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. ஏற்கெனவே நுரையீரல் பிரச்சினைகளும் இதய நோயும் கொண்டவர்களின் நிலைதான் மிகவும் ஆபத்தாக இருக்கிறது.

எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

  • கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்த்தல் நல்லது. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய்த் தொற்று உள்ள பகுதிகள், மாநிலங்கள், நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நோய்த் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும். குருகிராமில் தனது ஊழியர் ஒருவருக்கு கரோனா இருந்ததையடுத்து பேடிஎம் நிறுவனம் அந்த அலுவலகத்தை மூடியது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம் என்று கூறியது. இதை மற்ற நிறுவனங்களும் முடிந்தவரை பின்பற்றலாம்.
  • சீனாவில் புறப்பட்ட ‘கோவிட்-19’ நோய் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது; உலகையே பெரும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. இந்தியாவில் கடந்த ஞாயிறு வரை 43 பேருக்கு ‘கோவிட்-19’ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில், அதுவும் செல்பேசிசமூக ஊடகங்கள் போன்றவற்றின் பெருக்கத்தால் ‘கோவிட்-19’ பற்றிய வதந்திகள் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற காலத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முறையான தகவல்கள் மக்களுக்குப் போய்ச் சேர்வதும் முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்