TNPSC Thervupettagam

கோவிட்-19: சீனா நடத்தும் தொழில்நுட்பப் போர்!

March 9 , 2020 1773 days 805 0
  • தங்கள் நாட்டில் ‘கோவிட்-19’ (கரோனா வைரஸ்) பெருகிவிடக் கூடாது என்று உலகம் முழுவதும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அதிகம் பேரைப் பலி கொடுத்த சீனா, நோய்க்கும் நோய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் எதிராக உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
  • மார்ச் 4-ல் புதிதாக 119 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது. கடந்த ஆறு வாரங்களில் இதுதான் மிகவும் குறைவு. மார்ச் 1-ல் 200-க்கும் குறைவானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது ஹூபேய்.
  • சீன அரசின் புள்ளிவிவரங்களை நம்ப முடியாது என்று நீங்கள் கருதினாலும் அவை சரியா, இல்லையா என்று வேறு வகையில் சரிபார்த்துவிட முடியும். வூஹான் நகரில்தான் முதலில் இந்நோய் தொடங்கியது. அங்கே அவசரத் தேவைக்காகத் தொடங்கிய புதிய, சிறப்பு மருத்துவமனையை மார்ச் 1-ல் அரசு மூடிவிட்டது. இதைப் போல மேலும் 15 தனி மருத்துவமனைகளை மிகக் குறுகிய காலத்தில் அரசு கட்டியது. இதில் தங்கி சிகிச்சை பெற்றோர் உடல் நலம் பெற்றதாலும், புதியவர்கள் வராததாலும் சிறப்பு மருத்துவமனைகள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றன. காய்ச்சலுக்குச் சிகிச்சை தருவதற்காக மட்டும் திறக்கப்பட்ட தனி மருத்துவமனைகளுக்கும் நோயாளிகள் வருவது குறைந்துவிட்டது.

தொடரும் போராட்டம்

  • ஆனாலும், நோய்த்தொற்றுக்கு எதிரான போர் முடிந்துவிடவில்லை என்று சீன அதிகாரிகள் சரியாகவே எச்சரித்துள்ளனர். நோய்த்தொற்று குறித்த செய்தி முதலில் வெளியான உடனேயே, புத்தாண்டு விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பிய 75 கோடிப் பேர் அவரவர் ஊரிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்புபவர். அவர்களில் நோய்த்தொற்று இல்லை என்று கருதப்படுவோரில் சிலருக்கு, வெளியில் தெரியாமல் இருந்து திடீரென வெளிப்பட வாய்ப்புகள் அதிகம்.
  • சீனப் பொருளாதாரமே கிட்டத்தட்ட தரைதட்டிய நிலையில் இருப்பதால், அவர்கள் வேலைக்குத் திரும்புவதும் வேலைகளைத் தொடங்குவதும் மிகவும் அவசியம். கரோனா வைரஸ் தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் சீன அரசு அதன் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறியது, உண்மைகளை மூடிமறைக்கப் பார்த்தது. ஹூபேய் அதிகாரிகள் நோய்ப் பரவலை மூடிமறைக்கப் பார்த்தார்கள். இதனால், 2019 டிசம்பர் முதல் வாரம் தொடங்கி ஜனவரி 20 வரையில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.
  • ஜனவரியின் பிற்பகுதியிலிருந்து சீன நிர்வாகம் விழித்துக்கொண்டு வேகமாகச் செயல்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட சீன கம்யூனிஸ நிர்வாகத்தின் வலிமை அப்போது வெளிப்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் நாடு நிலைகுலையக் கூடாது என்பது அதன் நிர்வாக அமைப்புகளுக்குப் புகட்டப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்றின் தீவிரம் என்ன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் கசியாமல் மறைக்கப்படுவதை அந்நாட்டு நிர்வாகமே மறைமுகமாக ஆதரிக்கிறது. அதேசமயம், நோய்த் தொற்றுக்கு எதிராக நாட்டின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒருமனதாக நோய் முறியடிக்கவும் படுகிறது.
  • நிர்வாகத்தின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை தொடர்ந்தும் தீவிரமாகவும் ஒருங்கிணைந்தும் பணியாற்றுகின்றனர். ‘வரலாற்றிலேயே மிகவும் பேராசைமிக்க இலக்குகளை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கையுள்ள எவராலும் தடுக்க முடியாத வகையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன’ என்று உலக சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து மேற்கொண்ட பணிகள் குறித்த பிப்ரவரி 28 அறிக்கை தெரிவிக்கிறது.
  • இதனால், உடனடியாக நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கின. ஹூபேய் மாகாணத்தில் 6 கோடி மக்கள் வெளியேற முடியாதபடி ஜனவரி 23-ல் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைதான் இவற்றில் மிகவும் முக்கியமானது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால், மக்கள் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளானார்கள்.

நோய்த் தடுப்பு நடவடிக்கை

  • சீனா உட்பட 25 நாடுகளின் மருத்துவர்கள் கூட்டாக மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் புரூஸ் அய்ல்வார்ட், “சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது வேகம். நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை வேகமாக நீங்கள் அடையாளம் கண்டுவிட்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி நோய் பரவுவதைத் தடுத்துவிடலாம். நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளித்து அவர்களையும் மீட்டுவிடலாம்.
  • நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், உடன் பயணித்தவர்கள், வேலைசெய்கிறவர்கள் என்று அனைவருடைய பட்டியலையும் சேகரித்து அனைவரையும் தனிமைப்படுத்திவிட்டால் உங்களுடைய வெற்றியின் சதவீதம் கூடிவிடும். அடுத்தபடியாக, இரண்டு முக்கியமான அம்சங்கள்: இலவசப் பரிசோதனை, இலவச சிகிச்சை. அடுத்ததாக, மூன்று மாதங்களுக்கு மாத்திரை, மருந்துகளைத் தருவது” என்று சீன அரசை மிகவும் பாராட்டியிருக்கிறார்.
  • நவீனத் தொழில்நுட்பங்களை உரிய வகையில் பயன்படுத்தி நோயைத் தடுத்திருப்பது தனித்துத் தெரிகிறது. ‘கோவிட்-19’ என்ற புதிய செயலி இதற்கென உருவாக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இன்னாருடன் நீங்கள் பயணித்தீர்களா என்று ஒரு செயலி அனைவரையும் வினவுகிறது. ‘ஆம்’ என்று பதில் அளிப்போர் உடனடியாகச் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள்.
  • சில நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்று இல்லை என்பது நிரூபணமானதும் குடும்பத்தாருடன் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கியவர்கள் யார் என்பதை அவர்களுடைய தேசிய அடையாள எண்களைக் கொண்டு அரசாங்கம் நடத்தும் அமைப்பு ஒன்று சரிபார்க்கிறது. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்ந்து பயணித்தவர்கள், இருந்தவர்களைத் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் அடையாளம் கண்டு, அவர்களுடைய இருப்பிடத்தை தேசிய சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கிறது.

களமாடும் செயலிகள்

  • தெற்கில் உள்ள நகரமான வென்ஷோ, பாரம்பரியமாகவே தொழில்-வர்த்தகத் தொடர்புகளை வூஹானுடன் கொண்டுள்ளது. அங்கு ஒரு நூடுல்ஸ் கடை உரிமையாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அவர்களுடைய கடையில் வாங்கிச் சாப்பிட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவர் களுடைய செல்பேசி எண்களை வைத்தே அடையாளம் காணப்பட்டனர்.
  • பிங்கான் குட் டாக்டர்’ என்றொரு செயலி. அது மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், நோயாளிகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. 30 கோடிப் பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துவிட்டது.
  • தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெயர்போனது ஹாங்ஷோ நகரம். மின் வணிக ஜாம்பவான் அலிபாபாவின் ‘அலிபே’ என்ற செயலி, கரோனா வைரஸ் நோய்க்கு மட்டுமே தனியாக ஒரு க்யூஆர் கோட் முறைமையை வடிவமைத்தது. ஒருவர் எந்தெந்த ஊர்களுக்குச் சென்றார், எவ்வளவு நாட்கள் - எங்கு தங்கினார், அங்கு யாரெல்லாம் அவருக்கு நெருக்கமாக இருந்தனர் என்ற விவரங்களைப் பெற்றுக்கொண்டு, கரோனா தொற்று அபாயம் அவர்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்று வெவ்வேறு வண்ணங்கள் மூலம் தெரிவிக்கிறது. பச்சை நிறம் என்றால் நீங்கள் தாராளமாகப் பயணிக்கலாம். மஞ்சள் என்றால் ஏழு நாட்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டில் தங்க வேண்டும், சிவப்பு என்றால் 14 நாட்களுக்குத் தங்க வேண்டும்.
  • ஜெஜியாங், சிச்சுவான், ஹைனான், சோங்கிங் நகரங்களில் இந்தச் செயலிகள் பயன்படுத்தப்பட்டன. 20 கோடிக்கும் மேற்பட்டோர் இவற்றை உடனடியாகப் பயன்படுத்தினர். இந்த முறை 100% சரியானது என்று கூற முடியாவிட்டாலும், மக்களுக்கு அது ஏற்படுத்திய விழிப்புணர்வும், நோய்த்தொற்றைத் தடுக்க அவர்கள் அளித்த ஒத்துழைப்பும் கோடிக்கணக்கில் சில நாட்களிலேயே பெருக இந்த நவீனத் தொழில்நுட்பங்களும் செயலிகளும் மிகப் பெரும் பங்காற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

  • கோடிக்கணக்கான டாலர்களை முதலீடுசெய்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகிறது சீன அரசு. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அருகில் சென்று மருந்து-மாத்திரைகளை வழங்கியவை ரோபோக்கள்தான். பெய்ஜிங்கை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஃபேஸ் பிளஸ்பிளஸ்’ என்ற நிறுவனம், உடல் வெப்ப நிலையை உடனடியாகக் கணக்கிடும் நவீன வெப்பமானியைக் கண்டுபிடித்துள்ளது. இது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்த ஏற்றது. ஆயிரக்கணக்கானோரை வெகு வேகமாகப் பரிசோதிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். பெய்ஜிங் நகரச் சுரங்கப்பாதைகளிலும் அரசு அலுவலகங்களிலும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
  • சிச்சுவான் மாநிலத்தில் தொலைதூரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க புதிய ‘5 ஜி’ தொலைத்தொடர்பு வலையமைப்பை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். தொடர் பணியால் களைத்துப்போன சக மருத்துவர்களின் பணிச்சுமைகளைக் குறைக்க சிடி ஸ்கேன்களையும் ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றனர். பொது இடங்களிலும் பணியிடங்களிலும் அரசு அறிவுறுத்தியபடி முகமூடி அணியாமல் செல்வோரை காவல் துறை அடையாளம் காண்பதற்காகச் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு நிறுவனங்கள் ‘பைடு’, ‘சென்ஸ்டைம்‘ உதவுகின்றன. வடமேற்கில் உள்ள இன்சுவான் மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி மக்களுக்கு அறிவிப்புகளைச் செய்கின்றனர்.

அன்றாடங்கள் பாதுகாக்கப்பட்டன

  • தொற்றுநோய்க்கு அஞ்சி வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட மக்களுக்குப் பொழுது போகவும் வேலைகள் நடக்கவும் தொழில்நுட்பங்களே உதவுகின்றன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டாலும் அன்றாடம் வீட்டிலிருந்து பாடம் படிக்குமாறு ஆசிரியர்கள் நடத்தும் பாடம் அவரவர் செல்பேசிக்கு வருகிறது. அலுவலக வேலைகளையும் ஏராளமானோர் வீட்டிலிருந்தே செய்கின்றனர். வீடுகளுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், காய்கறிகள், மருந்து - மாத்திரைகள், துணி போன்றவை வீடுகளுக்கே கொண்டுவந்து தரப்படுகின்றன.
  • சன் ஆர்ட்’ சில்லறைக் குழும நிறுவனத்தின் 80% கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அதன் வருமானம் குறையவில்லை. உணவு வழங்கும் ‘மெய்டுவான்’ நிறுவனம், மின் வணிக நிறுவனம் ‘ஜேடி’ ஆகியவை மருத்துவமனைகளுக்கும் நோய்த்தொற்று மிகுந்துள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் தேவைப்படும் மருந்து-மாத்திரை, உணவு ஆகியவற்றை ஆளில்லாத வாகனங்களில் வைத்து அனுப்புகின்றன.
  • கோவிட்-19’ சீனாவின் பொருளாதாரத்தை முடக்கிப்போட்டிருந்தாலும் சில வியாபாரங்கள் முழு அளவில் நடைபெறுகின்றன. சமையல், இசை, உடல் பராமரிப்பு வகுப்புகளெல்லாம் மெய்நிகர் வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. ‘கோவிட்-19’ பருவத்தில் சீனாவில் அதிகம் விற்பனையாவது எது தெரியுமா? யோகா செய்யும்போது விரித்துக்கொள்ளும் பாய்கள்தான்!

நன்றி: இந்து தமிழ் திசை (09-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்