TNPSC Thervupettagam

கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?

January 19 , 2021 1464 days 700 0
  • உலகெங்கிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி செயல் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் தொடங்கிவைத்தார். அதில், சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கூடவே, இந்தத் தடுப்பூசிகளின் மீதான விவாதங்களும் எழுந்துள்ளன.
  • நாட்டில் முதல் கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவர்களுக்கு ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ எனும் இரண்டு வகை தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்று இரண்டு தவணைகள் செலுத்தப்படும். இவற்றில் எதைச் செலுத்த வேண்டும் என்பதைப் பயனாளிகள் தீர்மானிக்க முடியாது. தடுப்பூசிக் களத்தில் உள்ள தடுப்பூசி வகையைத்தான் செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • மேற்கத்திய நாடுகளும் இதே போன்று ஒரே நேரத்தில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அங்கேயும் இந்தியாவில் உள்ளதுபோல் முதல் கட்டத்தில் சுகாதாரத் துறையினருக்குத்தான் தடுப்பூசி செலுத்துகின்றனர்.

முக்கியமான மூன்றாம் கட்ட ஆய்வு

  • இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்நிய நாட்டுத் தடுப்பூசிகள் அனைத்தும் முக்கியமான மூன்றாம் கட்ட ஆய்வை முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் அவசர அனுமதியும் பெற்றுவிட்டன.
  • ஆனால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ இரண்டு தடுப்பூசிகளுமே மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கவில்லை. ஆனாலும் அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டன.
  • தமிழ்நாட்டில் பிரபலமான மருத்துவமனை ஒன்றின் வைரஸ் நுண்ணுயிரியல் வல்லுநர் ஒருவர் ‘இந்தியாவில் மூன்றாம் கட்ட ஆய்வை முழுவதுமாக முடிக்காத ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை நான் செலுத்திக்கொள்ள மாட்டேன்’ என்று பகிரங்கமாகச் சொன்னதும்தான் மூன்றாம் கட்ட ஆய்வின் முக்கியத்துவத்தை மருத்துவ உலகம் கூர்ந்து பார்க்கத் தொடங்கியது.
  • வழக்கத்தில், முதல் கட்ட ஆய்வில் ஒரு தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிசெய்வார்கள். இரண்டாம் கட்ட ஆய்வில் அதற்குத் தடுப்பாற்றலைத் தூண்டும் சக்தி இருக்கிறதா என்பதையும் மூன்றாம் கட்ட ஆய்வில் அதன் செயல்திறனையும் (Efficacy) உறுதிசெய்வார்கள். ‘ஒரு விவசாயிக்கு முளைக்கும் விதை இருந்தால் போதாது; நல்ல விளைச்சலைத் தருவதாகவும் அது இருக்க வேண்டும்!
  • அதுபோல், ஒரு பயனாளிக்குச் செலுத்தப்படும் தடுப்பூசிக்குப் பாதுகாப்புத் தன்மை, தடுப்பாற்றலைத் தூண்டும் தன்மை ஆகியவை இருந்தால் போதாது; செயல்திறனும் முக்கியம்’ என்கிறார் அந்த வைரஸ் வல்லுநர்.
  • இதை மருத்துவத் துறையினர் பலரும் ஆமோதிக்கின்றனர். மற்றொரு பிரிவினர் பரிந்துரைக் குழுவினரின் மேல் நம்பிக்கை வைத்து, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர். இன்றைய கள நிலவரத்தை ஆராய்ந்தால் இந்த விவாதங்கள் ஏன் என்பது புரியும்.

கோவேக்ஸின் மேல் விவாதம் ஏன்?

  • ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு. இந்தியாவில் சீரம் நிறுவனம் அதைத் தயாரித்துக் கொடுக்கிறது. இது இந்தியாவில்தான் மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கவில்லை.
  • பதிலாக, இது பிரிட்டனில் மூன்று கட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டது. அதன் செயல்திறன் அங்கு உறுதிசெய்யப்பட்டது. அந்தத் தரவுகளை இந்தியாவிலும் ஏற்றுக்கொண்டதால், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி குறித்து விவாதம் எழவில்லை. மாறாக, ‘கோவேக்ஸின்’தான் விவாதப்பொருள்.
  • அதாவது, ஆய்வில் செயல்திறன் உறுதிசெய்யப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும் செயல்திறன் உறுதிசெய்யப்படாத ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியையும் சம அளவில் பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் முக்கிய விவாதம். சமமாக இல்லாத தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது பயனாளி விரும்புவதைத் தேர்வுசெய்யும் உரிமையைப் பறித்துக்கொள்வது எப்படி நியாயமாகும் என்பது அடுத்த விவாதத்துக்கான கேள்வி.
  • கரோனா பெருந்தொற்றின் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தடுப்பூசி வழங்கப்படும் இந்தத் திட்டத்தில், ஆய்வு அடிப்படையில் செலுத்தப்படும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிக்கு அவர்களைப் ‘பரிசோதனை எலி’களாக நடத்துவது முறையா என்பது இந்த விவாதத்தின் நீட்சி.
  • மேலும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டுபவர்கள், கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள் ஆகியோருக்கு இது செலுத்தப்படுவதில்லை. காரணம், அவர்களுக்கு இது செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படவில்லை.
  • அதுபோலவே, மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிவராத இந்தத் தடுப்பூசியை கரோனா களப்பணியாளர்களுக்கு வழங்காமல் இருந்தால், கரோனா காலத்தில் அவர்கள் செய்த தியாகங்களுக்கு அரசு செய்யும் நன்றியாக இருக்குமே என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
  • ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிக்கு வல்லுநர்களின் பரிந்துரைப்படிதான் அவசரகால அனுமதி அளித்தது என்று ஒன்றிய அரசு விளக்கம் சொன்னாலும், எவருக்கும் இயல்பாக எழும் கேள்விகள் இவை: ஒருவேளை ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில் அதன் செயல்திறன் குறைவாக இருப்பது தெரியவந்தால், ஏற்கெனவே அந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குச் செயல்திறன் அதிகமுள்ள வேறு ஒரு தடுப்பூசியை மறுபடியும் செலுத்துவார்களா? அப்படி நிகழுமானால், அது நாட்டுக்கு இரட்டிப்புச் செலவு ஆகுமே… அரசால் சமாளிக்க முடியுமா? அடுத்து வரும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
  • இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடந்துகொண்டதில் தொடங்கி, அவற்றைச் செயலுக்குக் கொண்டுவந்ததுவரை ஒன்றிய அரசின் அவசரகதியிலான ஏற்பாடுகள் மருத்துவ வல்லுநர்களுக்கே தடுப்பூசியின் மேல் நம்பிக்கை இழக்கச் செய்யும்போது, கரோனா பெருந்தொற்றிலிருந்து பெரிதும் காப்பாற்றப்பட வேண்டிய பொதுமக்களும் நம்பிக்கை இழந்துள்ளதில் வியப்பில்லை.
  • தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு மேல் செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்குடன் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் 99 பேர் மட்டுமே ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர் எனும் புள்ளிவிவரம், இந்தத் தடுப்பூசித் தயக்கத்துக்கான தொடக்கப்புள்ளி என்கின்றனர் மருத்துவர்கள்.

முன்னுதாரணம் தேவை

  • தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்கள் உலகம் முழுவதிலும் தீவிரமடையும் இந்த நேரத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கே பொதுவெளியில் தயக்கங்கள் ஏற்படுமானால், உலகமே வியக்கும்படியான மிகப் பிரம்மாண்டமான தேசிய கரோனா தடுப்பூசித் திட்டம் தன் இலக்கை அடைவது தடைபடும்.
  • ஆகவே, ‘கோவேக்ஸின் வேண்டாம்’ என நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை வழங்க முன்வருவதாலும், ஆய்வு நோக்கில் ‘கோவேக்ஸி’னை ஏற்றுக்கொள்ள முன்வரு பவர்களுக்குத் தனியாகத் தடுப்பூசிக் களங்களை ஏற்படுத்துவதாலும் இந்தத் தயக்கங்கள் விலக்கப்படலாம்.
  • மேலும், ‘மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்ற வாய்மொழி வார்த்தைகளைவிட, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூரில் முக்கியத் தலைவர்கள் பலரும் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதைப் போல், தமிழகச் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்திக்கொண்டதைப் போல நம் தலைவர்களும் தடுப்பூசிப் பரிந்துரைக் குழுவினரும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்தால், மக்களுக்கு அதன் மேல் நம்பிக்கை பிறக்கும்.
  • அதுவே இந்தத் தடுப்பூசித் திட்டத்துக்கு நல்லதொரு தொடக்கமாகவும் இருக்கும். செய்வார்களா?

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்