TNPSC Thervupettagam

க்யூபாவை இன்னும் எதிரியாகக் கருதலாமா அமெரிக்கா?

January 20 , 2021 1461 days 706 0
  • க்யூபாவை ‘பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் நாடு’ என்று ட்ரம்ப் நிர்வாகம் வரையறை செய்திருப்பது மோசமான அரசியல் காய் நகர்த்தலாகும்.
  • கொலம்பியக் கிளர்ச்சியாளர்கள் 10 பேருக்கும், அமெரிக்காவிலிருந்து தப்பிச்சென்ற ஒருசிலருக்கும் க்யூபா தஞ்சமளித்திருப்பதையும் வெனிஸூலா அதிபர் மதுரோவை க்யூபா ஆதரிப்பதையும் காரணம் காட்டி, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
  • இதனால், ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகளின் வரிசையில் க்யூபா இடம்பிடித்திருக்கிறது. இந்த வரையறையால் மேலும் பல தடைகள் க்யூபாவுக்கு விதிக்கப்படலாம். அந்நாட்டின் தொழில் துறை பெரிதும் பாதிக்கப்படலாம்.
  • கொலம்பிய விவகாரத்தில் தாங்கள் மத்தியஸ்தர்களாக இருப்பதால் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களைத் தங்களால் ஒப்படைக்க முடியாது என்று க்யூபா கூறிவிட்டது.
  • வெனிஸூலா விவகாரத்தைப் பொறுத்தவரை தங்கள் நாட்டுக்கு உகந்த முடிவு எதுவோ அதைத்தான் எடுக்க முடியுமே தவிர, அமெரிக்கா எதை நினைக்கிறதோ அதையல்ல என்று க்யூபா கூறியுள்ளது.
  • கம்யூனிஸ ஆட்சி நடந்துவரும் க்யூபாவில் கருத்துரிமை ஒடுக்கப்படுகிறது என்று அந்நாட்டுக்கு உள்ளேயே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த விஷயங்களில் க்யூபாவைக் கடுமையாக விமர்சிக்கும் உள்நாட்டவர்கள்கூட அது பயங்கரவாதத்துக்குத் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டார்கள்.
  • ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியதிகாரத்தைப் புதிய அதிபரிடம் கொடுக்கவிருக்கும் நிலையில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெளியுறவு முடிவுகளை எடுக்கிறது. இது ஜோ பைடன் தனது வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுத்தக் கூடும்.
  • க்யூபா மீதான அமெரிக்காவின் வெறுப்பின் வேர்கள் பனிப்போர்க் காலகட்டம் வரை நீண்டவை. ஒபாமா அமெரிக்க அதிபரானபோது க்யூபாவுக்கு அமெரிக்காவின் நேசக்கரங்களை நீட்டினார். அவருக்கு முந்தைய ஆட்சியாளர்களைவிட மிகவும் நடைமுறை சார்ந்த அணுகுமுறையை க்யூபாவிடம் ஒபாமா வெளிப்படுத்தினார்.
  • அமெரிக்கா பல தசாப்தங்களாகக் கடுமையான தடைகளை விதித்துத் தண்டித்தது. இறுதியில் ஃபிடெல் காஸ்ட்ரோவின் அரசு சிதைந்துவிடும் என்றும் எதிர்பார்த்தது. சோவியத் ஒன்றியமே சிதைவுற்றபோதும் க்யூபா தப்பித்துக்கொண்டது.
  • பனிப்போர் நினைவுகள் மங்கிக்கொண்டிருந்ததாலும் வெளியுறவுக் கொள்கையில் புதிய சிந்தனை வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்பியதாலும் க்யூபாவுடனான உறவை ஒபாமா புதுப்பித்துக்கொண்டார்.
  • அந்நாட்டில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், க்யூபாவுக்குப் பயணம் செய்து ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆகவே, ஒபாமாவுக்கு அடுத்து வருபவர் இந்த உறவை மேலும் மேம்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு நேரெதிர்ச் செயல்பாட்டை ட்ரம்ப் மேற்கொண்டிருக்கிறார்.
  • உலகின் மிகப் பெரிய ராணுவ பலத்தைக் கொண்டிருப்பதும், கம்யூனிஸ நாடான சீனாவுக்கு 1970-களிலிருந்து ஒத்துழைப்பு கொடுத்துவருவதுமான அமெரிக்கா, தனக்கு அருகில் உள்ள சிறிய கம்யூனிஸ நாடான க்யூபாவை இன்னமும் எதிரியாகக் கருதுவது துரதிர்ஷ்டவசமானது.
  • தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது க்யூபா மீதான ட்ரம்ப்பின் அணுகுமுறையை விமர்சித்த பைடன், அந்நாட்டுடன் நட்பார்ந்த உறவைத் தான் மேற்கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். ஆகவே, ஒபாமாவின் தொடர்ச்சியாக க்யூபாவுக்கு பைடன் நேசக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்