TNPSC Thervupettagam

சகல கலை வல்லுநர் திருநாவுக்கரசர்

October 24 , 2024 7 days 32 0

சகல கலை வல்லுநர் திருநாவுக்கரசர்

  • திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசர், அப்பர், மருள்நீக்கியார் என்று பல பெயர்களால் அறியப்படுகிறார். சகல கலை வல்லுநராகத் திகழ்ந்த அப்பர் பெருமான் தொண்டை நாட்டைத் தூய்மைப்படுத்தியவர். சிவபெருமானின் உண்மை நெறியறத்தை உலகுக்குத் தரும் பொருட்டு அவதரித்தவர் இவர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருமுனைப்பாடி நாடு என்ற ஊரில் புகழனார்-மாதினியார் தம்பதிக்கு மைந்தனாக அவதரித்தவர் மருள்நீக்கியார். இவரின் தமக்கையார் திலகவதி. சிறுவயது முதலே மருள்நீக்கியார் கலைகளை நன்கு கற்று வளர்ந்தார்.
  • தமக்கை திலகவதியாருக்கு சிவநெறிச் சீலரான கலிப்பகையாருடன் திருமணம் நிச்சயமானது. விதிவசத்தால் புகழனார் உயிரிழக்க நேரிட, கணவனைப் பிரியாத மாதினியாரும் உடன் இறந்தார். தொடர்ந்து திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையாரும் போரில் வீரமரணம் அடைந்தார். அவரையே கணவராக வரித்துவிட்டதால், திலகவதியார் தானும் உயிர் துறக்க துணிந்தார்.
  • அப்போது மருள்நீக்கியார் தனக்கு யாருமே இல்லையெனக் கலங்க, தம்பிக்காக திலகவதியார் தனது எண்ணத்தை மாற்றி, சிவவழிபாடுகள் இயற்றி, அறங்கள் பல செய்து வாழ்ந்தார். மருள்நீக்கியாரும் அவ்வாறே அறவழியில் நடந்தார். துறவு வாழ்க்கை மேற்கொண்டு சமயநெறிகள் குறித்து ஆராய்ந்தார். சமணர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்த நேரம் அது. சமண நூல்களில் மருள்நீக்கியார் பெரும்புலமை பெற்றார்.
  • சமணர்கள் மகிழ்ந்து மருள்நீக்கியாருக்கு ‘தருமசேனர்’ என்ற சிறப்பு பட்டத்தை சூட்டினர். மருள்நீக்கியார் வீட்டையும், விபூதி பூசும் சைவ நெறியையும் மறந்து சமண சமயத்தில் சேர்ந்ததால் பெரிதும் வருந்திய திலகவதியார் அவரைத் தாய் சமயத்துக்கு மீட்டுக் கொணரும்படி சிவபெருமானிடமே முறையிட்டார்.
  • திலகவதியாரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “மருள்நீக்கியார் முற்பிறவியில் வாகீச முனிவராக இருந்து எம்மை நோக்கித் தவம் செய்தவன். இனி யாம் அவனுக்கு சூலை நோயைக் கொடுத்து ஆண்டருளுவோம்” என்றார். மருள்நீக்கியாருக்கு சூலைநோய் தோன்றி விரைவில் கடுமையாகியது. சமணர்களின் மருத்துவம் பலனளிக்கவில்லை. தமக்கை திலகவதியாரை சந்தித்து தனக்கு உதவுமாறு தருமசேனர் வேண்டுகிறார். திலகவதியார் திருவைந்தெழுத்தை ஓதி, திருநீற்றை மருள்நீக்கியாருக்கு கொடுத்து, ‘நன்னெறி அடைவாய்’ என்று சொல்லி சிவத்தொண்டுகளை தொடர திருவதிகை வீரட்டானர் கோயிலுக்கு சென்றார்.
  • அவரைத் தொடர்ந்து சென்று அக்கோயிலுக்குள் நுழைந்தார் மருள்நீக்கியார். அப்போது அவருக்கு அருட்பாக்களை இயற்றும் உணர்வு தோன்ற, அது தேவாரப் பாடல்கள் வடிவில் வெளிப்பட்டது. திருவதிகை வீரட்டானப் பெருமானும் மருள்நீக்கியாரின் பாடலைக் கேட்டு சூலைநோயைத் தீர்த்தருளினார். திலகவதியாரும் தன் தம்பி சைவத்துக்கு மீண்டதையும், சூலை நோயிலிருந்து விடுபட்டதையும் அறிந்து பெரிதும் மகிழ்ந்தார்.
  • மருள்நீக்கியாரும் தனது முதல் பதிகத்தை நிறைவு செய்ய, “தமிழ்ப் பாமாலை சூட்டிய உமது திருப்பெயர் இனி ‘திருநாவுக்கரசர்’ என்று ஏழுலகிலும் விளங்கட்டும்” என சிவபெருமான் அசரீரி குரலாக சொல்லி அருளினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என்று அன்போடும், மரியாதையோடும் மகிழ்வுடன் அழைப்பார். மறுபடியும் போய் சைவத்தில் சேர்ந்துவிட்ட அப்பரால் தங்களுக்கு தீங்குகள் வரலாம் என்று எண்ணிய சமண சமய குருமார்கள் பல்லவ மன்னரிடம் அப்பரை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
  • தன்னை அழைத்துச் செல்ல திருவதிகைக்கு வந்த அமைச்சர்களிடம் திருநாவுக்கரசர் தான் எவருக்கும் அடிமைப்பட்டவன் அல்லன் என்று முழங்கும் ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்றுத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகம், ‘மறுமாற்றத் திருத்தாண்டகம்’ என்று பெயர் பெற்றது.
  • மன்னரின் ஆணைப்படி திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் அடைத்து பூட்டி, ஏழு நாட்கள் கழித்து திறந்து பார்த்தபோது எந்தவித துன்பமும் இல்லாமல் சுகமாக இருந்தார் நாவுக்கரசர். அப்போதுதான் “மாசில் வீணையும், மாலை மதியமும்” என்றப் பாடலைப் பாடி காளவாயில் பொய்கையில் இருப்பதுபோல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
  • பல வழிகளில் நாவுக்கரசரை சமணர்கள் தண்டித்தாலும், ஈசன் மீது பதிகங்கள் பாடி ஈசனருளால் மீண்டு வந்தார் நாவுக்கரசர். முடிவாக அவரை கல்லோடு கட்டி நடுக்கடலில் எறிந்தனர். அப்போதும் “சொற்றுணை வேதியன் சோதி வானவன்” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, திருப்பாதிரிப்புலியூருக்கு அருகில் பத்திரமாக கரையேறினார் நாவுக்கரசர். இன்றும் அந்த இடம் “கரையேறவிட்ட குப்பம் ” என்று அழைக்கப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் நாவுக்கரசர் கரைசேர்ந்த ஐதீகம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • தனது சூலைநோய் குணம்பெற்ற திருவதிகையைக் காண ஆவல் மேலோங்க, இடையறாது சிவபெருமானின் திருவடிகளை பற்றியிருக்கும் சிந்தனையோடு வீரட்டானர் கோயிலை அடைந்து பதிகங்கள் பாடினார். திருநாவுக்கரசரின் இறைபக்தியில் வியந்து மனம் திருந்திய பல்லவ மன்னர் ‘குணபரன்’ சைவநெறியை சார்ந்தார். திருவதிகையில் ஒரு கோயிலும் எழுப்பினார். அக்கோயில் ‘குணபரவீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • திருநாவுக்கரசர் பல தலங்களை தரிசித்து பாடி, தில்லையை அடைந்தார். இவர் தில்லைக் கோயிலின் மேற்கு கோபுரத்தின் வழியே நுழைந்தார். சீர்காழியிலிருந்து வந்த திருஞானசம்பந்தர் தெற்கு கோபுர வாசல்வழியும், வட திசையிலிருந்து வந்த சுந்தரர் வடக்குகோபுர வாசல்வழியும், திருப்பள்ளியெழுச்சியில் கிழக்கு திசையைப் போற்றிய மாணிக்கவாசகர் கிழக்கு கோபுர வாசல்வழியாகவும் தில்லைக் கோயிலுக்குள் நுழைந்தனர்.
  • “சரியை, கிரியை, யோகம், ஞானம் ” என்ற நான்கு நெறிகளில் இறைவனை அணுகலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே நால்வரும் ஒவ்வொரு திசைகளிலுள்ள கோபுரங்கள் வழியாக தில்லைக் கோயிலுக்குள் நுழைந்தனர். பல தலங்களைத் தரிசித்து பதிகங்கள் பாடிய நாவுக்கரசர், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றான திங்களூர் சென்றார்.
  • அங்கு ‘ஒன்றுகொலாம்’ என்ற பதிகத்தைப் பாடி, அப்பூதியடிகளின் மைந்தனை உயிர்த்தெழச் செய்தார். பல தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடிவந்த அப்பர், திருப்புகலூரை அடைந்தார். உழவாரத் திருப்பணி புரிந்தார். தேவாரப் பதிகங்களும் இயற்றினார். தமது பூவுலக வாழ்க்கை போதுமென்றும், இறைவன் திருவடியை அடையும் தருணம் வந்ததாகவும் உணர்ந்து, தன் விருப்பத்தையும் சிவபெருமானிடமே கூறினார்.
  • தேவர்கள் மலர்மாரி பொழிய, தேவ துந்துபிகள் முழங்க, சித்திரை மாத சதயத் திருநாளில் சிவானந்த ஞானவடிவாகி, நாவுக்கரசர் ஈசன் திருவடிக்கீழ் அமர்ந்தார். திருப்புகலூரில் திருநாவுக்கரசர் திருமடம், திருநாவுக்கரசர் நந்தவனம் என்றெல்லாம் பெயர் வைத்துள்ளனர். அப்பர் சந்நிதியில் மூலவர் மற்றும் உற்சவத் திருமேனிகள் உள்ளன. திருப்புகலூர் பெரிய திருவிழா சித்திரை மாத சதயத்தை ஒட்டியே நடைபெறுகிறது.
  • தெப்பத் திருவிழா நாளில் அப்பரடிகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வருகிறார். நால்வர் சந்நிதிகள் உள்ள கோயில்களிலும் அப்பர் ஐக்கிய ஐதீகம் நடைபெற்று வருகிறது. திருநாவுக்கரசர் இயற்றிய 3,066 பாடல்களை உள்ளடக்கிய 312 பதிகங்கள் கிடைத்துள்ளன. நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளாக இவர் இயற்றிய தேவாரம் தொகுக்கப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்