TNPSC Thervupettagam

சட்டங்களின் சட்டம்

November 26 , 2020 1340 days 885 0
  • பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக வரி வசூலிக்கத் தொடங்கி, பின்னர் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.
  • இதற்காக பல சட்டங்களையும் வகுத்தனர். 1833-இல் இயற்றப்பட்ட இந்திய சட்டத்தின் படி, வங்காள மாநில ஆளுநர் இந்தியாவின் தலைமை ஆளுநராக மாறினார். ஆங்கிலேய அரசு இயற்றிய "இந்திய சட்டம் 1858' கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டியது.
  • இந்திய கவுன்சில் சட்டம் 1861, 1892, 1909 ஆகியவை படிப்படியாக இந்தியர்களுக்கு ஆங்கில வைஸ்ராய் அவையில் பிரதிநிதித்துவம் வழங்கியது. 1919-இல் இயற்றப்பட்ட இந்திய சட்டம், மத்திய அரசும் பிராந்திய அரசும் ஏற்பட வகை செய்தது.
  • பிராந்திய சபையில் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வந்தது. 
  • 1935-ஆம் ஆண்டின் இந்திய சட்டம் இந்தியாவில் கூட்டாட்சி முறைக்கு வித்திட்டது. அதன்படி, அரசின் அதிகாரம் பிரிக்கப்பட்டு, மைய அவைக்கு தனியாகவும் பிராந்திய அவைக்குத் தனியாகவும் இரண்டு அவைகளுக்கும் கூட்டாகவும் தனித்தனியே பட்டியலிடப்பட்டது.
  • பிராந்திய அவையைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை நாடாளுமன்றம் போன்று செயல்பட்டது.
  • இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளும் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளும் பல சுதேச சமஸ்தானங்களும் இருந்தன.
  • இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வலிமை மிகுந்த பாரதமாக உருவாக்கும் பொறுப்பும் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் அரசியல் நிர்ணய சபைக்கு இருந்தது.
  • 6.12.1946-இல் பிரெஞ்சு தேச நடைமுறையைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவானது. இதன் முதல் கூட்டம் 9.12.1946 அன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
  • அதன் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய கிருபளானி இந்த அவையில் முதன்முறையாக உரையாற்றினார்.
  • தனிநாடு கோரி முஸ்லிம் லீக் கட்சியினர் முதல் கூட்டத்திலே வெளிநடப்பு செய்தனர். 389 பேர் கொண்ட இந்த அவையில், தமிழகத்தின் சார்பில் காமராஜர், காயிதே மில்லத், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ஓ.வி. அளகேசன், அனந்த சயனம் ஐயங்கார், காளியண்ண கவுண்டர், எம்.ஏ. முத்தையா செட்டியார், நாடிமுத்துப் பிள்ளை, பட்டாபி சீதாராமையா, பெருமாள்சாமி ரெட்டி, டி. பிரகாசம், பி. சுப்பராயன் உட்பட பலர்  இருந்தனர்.
  • இந்த அவை 11.12.1946 அன்று கூடி தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத், துணைத் தலைவராக ஹைரேந்திர கூமர் முகர்ஜி, சட்ட ஆலோசகராக பி.என்.ராவ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது.
  • இக்குழுவில் 13.12.1946 அன்று ஜவாஹர்லால் நேரு அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையானது. இந்த அவையால் 22.7.1947-இல் இந்தியாவின் தேசிய கொடியாக மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 29.8.1947-இல் டாக்டர் ராஜேந்திரபிரசாத் தலைமையில் அரசியலமைப்பு நிர்ணயசபை 22 குழுக்களை நியமித்தது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுக்குழு தலைவராக டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் 29.8.1947-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ ராவ். டி.பி. கைதான் ஆகிய ஆறு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • பிராந்திய இணைப்புக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் தனது பணியைத் திறம்பட செய்து இந்தியாவின் "இரும்பு மனிதர்' என்று போற்றப்பட்டார்.
  • அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு ஐந்து கட்டங்களாக செயல்பட்டது. அரசியலமைப்பு சட்ட அடிப்படை கூறுகளைக் கண்டறிதல், அதன் முன்வரைவை குழு பரிசீலித்தல், அதனை பொதுமக்களின் விவாதத்திற்கு அனுப்புதல், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொண்டது.
  • அரசியலமைப்பு நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக இருந்த சர் பி.என். ராவ் மிகச்சிறந்த சட்ட நிபுணர்.
  • பின்நாளில் இவர் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன் வரைவை உருவாக்கியவ.
  • இவரது பணியினை அரசியல் அமைப்பு சட்ட வரைவு குழுத் தலைவரும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
  • சர் பி.என். ராவ் தந்த முன் வரைவில் வரைவுக் குழு தேவையான திருத்தங்களை மேற்கொண்டது.
  • இவ்வாறாக, 1,45,000 வார்த்தைகள் அடங்கிய, 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 பாகங்களுடனான, கையால் எழுதப்பட்டு 282 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட, உலகின் இரண்டாவது பெரிய அரசியல் அமைப்பு சட்டத்தை இக்குழு 24.11.1949-இல் உருவாக்கித் தந்தது. அதனை இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக்கொண்டது.
  • அரசியல் அமைப்பின் அடிப்படைக் கூறுகள் சிதையும் வகையில் சட்டமியற்றப்பட்டால் அதைச் செல்லாததாக்கும் உரிமை நீதிமன்றத்திற்குத் தரப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் சுதந்திரமும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் இரு கண்களாக விளங்குகின்றன.

இன்று (நவ. 26) தேசிய சட்ட நாள்.

நன்றி :தினமணி (26-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்