TNPSC Thervupettagam

சட்டத்தில் விடுபட்ட பெண்கள்

September 1 , 2024 134 days 144 0

சட்டத்தில் விடுபட்ட பெண்கள்

  • பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிட்டதாக நம்பவைக்கப்படும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ‘பெண்ணியம்’ என்பது பலருக்கும் எட்டிக்காயாகக் கசக்கிறது. அது ஆணுக்கு எதிரானது எனப் பெண்களையே நம்பவைக்கும் வேலைகளும் நடக்கின்றன.
  • குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் இன்று அடைந்திருக்கும் உயரத்தையும் வளர்ச்சியையும்கூட அவர்களின் அகம்பாவத்தின் வெளிப்பாடு என்று திரித்துக்கூறிப் பெண்களின் பொது வெளிப் பயன்பாட்டை முடக்கும் செயல்களும் நடக்கின்றன. விதிவிலக்கு களைப் பொதுவிதியாகக் கொண்டு பெண்ணியத்தைப் பெண்களுக்கு ஆகாத சொல்லாக மாற்றும் வித்தை யைக் கைவரப் பெற்ற சமூகமாக நம் சமூகம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • அடிப்படை உரிமை கள்கூட மறுக்கப்பட்டு, பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டபோது கல்வி யறிவும் பகுத்தறிவும் பெற்ற பெண்களே உரிமைகளுக்கான முதல் குரலை எழுப்பினர். எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலும் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக ‘நான் பெண் இல்லையா?’ என முழங்கிய சோஜர்னர் ட்ரூத் போன்ற விதிவிலக்குகளும் உண்டு. பட்டறிவு இல்லையென்றாலும் பகுத்தறிவு இருந்தாலே உரிமைக்குரல் எழுப்பலாம் என்பதை இவரைப் போன்றவர்கள் நிகழ்த்திக் காட்டினர்.

பெண்ணிய அலைகள்

  • பொது ஆண்டுக்கு (கி.மு) முன்பே பெண்களில் சிலர் தங்கள் உரிமைகள் குறித்துப் பேசினாலும் நவீனப் பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாகவே பெரும்பாலான பெண்ணிய வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. தொழிற்புரட்சியும் நகரமயமாக்கலும் பெண்களுக்கான தொழில்வாய்ப்பையும் பொருளா தாரப் பலனையும் பொதுவெளிப் புழக்கத்தையும் அளித்தன. ஆனால், அவற்றுக்கே உரிய வேறுவிதமான நெருக்கடிகளை அவை அதிகரித்தன. நெருக்கடிகள் கழுத்தை நெரித்தபோது சம வாய்ப்பு கேட்டும் வாக்குரிமை கேட்டும் உயர்ந்த கரங்கள், பின்னாளில் பெண்ணுரிமைக்காகவும் உறுதியோடு நின்றன.
  • பெண்ணுரிமை இயக்கங்கள் வலுப்பெற்றதன் பின்னணியையும் காலத்தையும் காரணத்தையும் கொண்டு அவற்றை ‘பெண்ணிய அலை’ என்றழைத்தனர். சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், அடிமை முறை ஒழிப்பு இயக்கங்கள், விடுதலைக்கான புரட்சி இயக்கங்கள், வாக்குரிமை இயக்கங்கள் போன்றவை ஒன்றிணைந்து பெண்ணுரிமையையும் பேசின. உலகம் முழுவதும் இப்படிப் பல்வேறு இயக்கங்கள் பெருந்திரளாக இணைந்து செயல்பட்டதால்தான் அவற்றைப் பெண்ணிய ‘அலை’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

உரிமைப் புரட்சி

  • மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் நடைமுறையில் இருந்தபோது மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை. ஆண்களில் ஒரு பிரிவினருக்குப் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆண்களுக்கே அந்த நிலை என்றால் மனிதப் பிறவிகளாகக் கருதப்படாத பெண்களின் நிலையைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதி, மத, நிற, வர்க்க பேதங்கள் நிறைந்த சூழலில் மக்கள் சம உரிமைக்கான போராட்டங்களைக் கையிலெடுத்தனர். அவற்றோடு பெண்ணுரிமைக் குரல்களும் இணைந்துகொண்டன.
  • பெண்களுக்குச் சம உரிமையும் வாக்குரிமையும் கேட்டு அமெரிக்காவில் 1848இல் நடைபெற்ற பெண்ணுரிமை மாநாட்டை நவீனப் பெண்ணிய இயக்கத்துக்கான தொடக்கம் என அமெரிக்கப் பெண்ணியவாதிகள் உரிமைகோரினாலும் 1789இல் பெண்கள் தலைமையில் பிரான்ஸில் நடைபெற்ற புரட்சியின்போதே நவீனப் பெண்ணிய வரலாறு தொடங்கி விடுகிறது. அரசியலில் பெண்களின் ஒருங்கிணைந்த செயல் பாட்டையும் அது வெளிப்படுத்தியது. ‘குடிமக்கள்’ என்கிற அங்கீகாரம்கூடப் பெற்றிராத பெண்கள், 1789இல் பாரிஸின் கடைவீதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடினர். அங்கிருந்து வெர்சாயிய அரண்மனையை நோக்கிப் பேரணி யாகச் சென்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் எளிய மக்களின் வாழ்வு ஒரு பொருட்டே இல்லை. செல்வத்தைக் கைக்கொண்டி ருப்பவர்களும் அவற்றைப் பெருக்கித் தருகிறவர்களும் மட்டுமே அவர்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள். அன்றைய பிரெஞ்சுப் புரட்சிக்கும் அரசின் இந்தப் பாராமுகம்தான் அடித்தளமாக அமைந்தது. அன்றைக்கு நிலவிய கொடும் பஞ்சத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் அரசு இதில் உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் பெண்கள் நடத்திய பேரணி பெண்ணிய வரலாற்றில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

பெண்கள் குழுவின் அறிவிக்கை

  • இந்தப் புரட்சிக்குச் சில மாதங்களுக்கு முன் ஆண்கள் மற்றும் குடிமக்களுக்கான உரிமைகள் குறித்த சட்ட வரைவு முன் மொழியப்பட்டது. அதில் ஆண்களில் சிறுபான்மையினரும் அனைத்துப் பெண்களும் விடுபட்டிருந்தனர். குடிமக்களின் சரிபாதி அங்கமான பெண்களைப் புறக்கணித்துவிட்டு எழுதப்பட்ட அந்த வரைவு, பிரெஞ்சு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறும் என்கிற நிலை வந்தபோது பெண்ணிய வாதிகள் அதை எதிர்த்தனர். ஒலாம்ப் த கூஜ் என்கிற பெண்ணியவாதி தலைமையிலான பெண்கள் குழு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே அனைத்துவிதமான சட்ட உரிமைகளும் உண்டு என்பதை வலியுறுத்திய அந்த அறிவிக்கை, அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாதாடியது. முதல் பெண்ணிய அலை தோன்றுவதற்கு இதுபோன்ற சம்பவங்களும் அடிப்படையாக இருந்தன.

மது ஒழிப்புப் போராட்டம்

  • பெண்ணுரிமை வரலாற்றில் 1800களின் தொடக்கத்தில் அமெரிக்கா வில் கிளர்ந்தெழுந்த மது ஒழிப்பு இயக் கங்களுக்கும் முக்கிய இடமுண்டு. மது ஒழிப்பை வலியுறுத்திய தமிழகப் பெண்களின் ‘டாஸ்மாக் கடை உடைப்பு’ போராட்டங்களுக்கு முன்னோடி யாக 200 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தலைதூக்கிய மது ஒழிப்பு இயக்கங்களைக் குறிப்பிடலாம். ‘கலாச்சாரச் சீர்திருத்தப் போராட்டம்’ என அழைக்கப்படும் இந்த மது ஒழிப்பு இயக்கத்தில் பெண்களோடு ஆண்களும் இணைந்து செயல்பட்டனர். மதுவால் ஒரு குடும்பத்தின் ஆணி வேரே ஆட்டம் கண்டுவிடுவதால், மதுவின் தீமைகளை விளக்கும் வகையிலும் மது ஒழிப்பை வலியுறுத்தியும் கேலிச்சித்திரங்கள், கையேடுகள் வெளியிடப்பட்டன. மது ஒழிப்புப் பாடல்களையும் மக்கள் மத்தியில் பாடி மதுவின் தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உதிரிகளாகச் செயல்பட்ட மது ஒழிப்பு இயக்கங்கள் 1820களில் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கிய பிறகு போராட்டம் வலுத்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்