- தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் ஏழை மக்கள் மீது அரசு அதிகாரிகள் நிகழ்த்தும் அத்துமீறல் எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் தெருவோரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என வரையறுத்து காவல் துறை உதவியோடு மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 13ஆம் தேதி கடைகளை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர்.
- தனது பழக்கூடையைப் பாதுகாக்க முயன்ற தலித் பெண் கிருஷ்ணவேணி அம்மாள் அவசரமாக ஓடியதில், அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிகாரிகளின் அத்துமீறலால் வாழ்வை இழக்கும் அப்பாவிகளின் ரத்த சாட்சியமாகியிருக்கிறார் கிருஷ்ணவேணி அம்மாள்.
சட்டத்தை மதிக்காத அதிகாரிகள்:
- கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 50 ஆண்டுகளாகத் தெருவோரத்தில் வியாபாரம் செய்துவந்த கடைகளை ஜூலை 19ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் ‘பொக்லைன்’ இயந்திரத்தால் அடித்து நொறுக்கினர்.
- இதில் அரசின் அனுமதி பெற்று, நீதிமன்ற உத்தரவின்படி செயல்படும் மாற்றுத்திறனாளிகளின் கடைகளும் அடக்கம். இது குறித்து மாநகர மேயரிடம் மனு அளித்தபோது, இனி அவ்வாறு நடக்காது என உறுதியளித்தார். விசாரித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
- ஆனால், அடுத்த சில நாள்களில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நள்ளிரவு 2 மணிக்கு, தெருவோரத்தில் வியாபாரம் செய்துவந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் அழித்துச் சேதப்படுத்தியுள்ளனர். தெருவோரக் கடைகள் நிர்மூலமாக்கப்படுவதும் வியாபாரப் பொருள்கள் நாசமாக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் மேற்கொள்ளும் இந்தச் செயல்பாடுகள், இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிரானவை.
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரம்:
- உண்மையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுக்கும் கருவூலங்களாக இருப்பவை தெருவோரத்தில் நடைபெறும் வியாபாரங்கள். எளிய மக்களுக்கான மலிவு விலைப் பொருள்களை எங்கெங்கோ இருந்து வாங்கிவந்து வெயிலிலும் மழையிலும் படாத பாடுபட்டு விற்றுப் பிழைப்பு நடத்துவோர், இந்தச் சின்னஞ்சிறு வியாபாரிகள்.
- இந்த எளிய வியாபாரிகளின் நலன் காப்பதற்காக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகத்தான் 2010இல் தெருவோர வியாபாரத்தை வாழ்வாதாரமாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. மேலும், வியாபாரிகளின் போராட்டங்களின் விளைவாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின் காரணமாகவும் தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- தெருவோர வியாபாரிகளின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய இந்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி ஏராளமான போராட்டங்களை சிஐடியு முன்னெடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017இல் சென்னை மாநகராட்சியில் மட்டும் 15 மண்டலங்களிலும் நாடாளுமன்றச் சட்டத்தின்படி நகர விற்பனைக் குழு (vending committee) அமைக்கப்பட்டது.
சட்டம் சொல்வது என்ன?
- தெருவோரம் மேற்கொள்ளப்படும் வியாபாரத்துக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் உண்டு. தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பகுதியில் தெருவோரத்தில் வியாபாரம் நடைபெற்றுவந்தால், அதை ‘இயற்கையான சந்தை’ என அங்கீகரிக்க வேண்டும்; ஆக்கிரமிப்பு என அகற்றக் கூடாது. தெருவோரத்தில் வியாபாரம் செய்வதற்குரிய பகுதிகளை அங்கீகரித்து, அப்பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு உறுதியளிக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.
- அங்கீகரிக்கப்படாத தெருவோரக் கடையை அகற்ற வேண்டுமானால் மாற்று இடம் தராமல் அகற்ற முடியாது. அப்படி ஒரு பகுதியில் தெருவோர வியாபாரம் செய்கிறவர்களை அகற்ற வேண்டுமென்றால், அதிகாரிகள் மட்டும் நினைத்தால் முடியாது. தெருவோர வியாபாரிகளின் பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் உள்ளடக்கிய நகர விற்பனைக் குழுதான் முடிவுசெய்ய வேண்டும்.
- தெருவோரக் கடைகளை அகற்றுவதற்கு 30 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். குறைதீர்க்கும் குழுவிடம் (Redressal committee) முறையிட வாய்ப்பளிக்க வேண்டும். அப்படியே 30 நாள்கள் முடிவடைந்தாலும் ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை பொருள்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அதன் பின்புதான் வெளியேற்றலாம் என்கிறது சட்டம்.
சூறையாடும் அதிகார வர்க்கம்:
- பதினைந்து பேர் கொண்டது நகர விற்பனைக் குழு. மாநகராட்சி ஆணையர் (ஐஏஎஸ்) அதன் தலைவர். காவல் துறை துணை ஆணையர் (சட்டம் - ஒழுங்கு), போக்குவரத்துக் காவல் துணை ஆணையர், மாநகராட்சி தலைமைப் பொறியாளர், மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோரால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் என ஒன்பது பேர். வியாபாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தெருவோர வியாபாரிகள்.
- இந்தக் குழுவில் வியாபாரிகளின் பிரச்சினைகளை விவாதித்து, வியாபாரிகளுக்கான நலத் திட்டத்தை உருவாக்குவதோடு, இதில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் தமது துறையின் மூலம் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தாம் எடுத்த நடவடிக்கைகளைக் குழுவில் வியாபாரிப் பிரதிநிதிகளுக்குச் சொல்லி, அவர்களை மேம்படுத்த வேண்டும். இதுதான் இக்குழுவின் முதன்மையான பணியாகும்.
- ஆனால், இங்கே நிலைமை தலைகீழாகவே இருக்கிறது. முறையான அழைப்பிதழ், விவாதப் பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் நகர விற்பனைக் குழு கூட்டத்தைக் கூட்டாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்சையாக அதிகாரிகளே ‘ஆக்கிரமிப்புக் கடைகள்’ என வரையறுத்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
- தெருவோர வியாபாரிகளை ஆக்கிரமிப்பாளராகக் கருதக் கூடாது எனச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்றே பேசுகின்றனர். அக்கருத்தை மக்களின் பொதுப்புத்தியிலும் பதியவைக்கின்றனர். நீதிமன்றங்களும் பல நேரம் இக்கருத்தை அப்படியே எதிரொலிப்பதைப் பார்க்கமுடிகிறது.
சட்டத்தை மீறிச் செயல்படும் அதிகாரிகள்:
- தெருவோர வியாபாரிகளின் சட்டம் குறித்துப் பெரும்பாலான அதிகாரிகளுக்குத் தெளிவில்லை. பலருக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியவில்லை. தெருவோர வியாபாரம் பெரும்பாலும் விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்படும் தொழில் அல்ல. சமூக, பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர்கள், தங்களின் வாழ்வாதாரத் தேவைக்காக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
- படித்த இளைஞர்கள் பெரும்பாலானோர் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழ வகைகள், ஆடைகள், மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றைத் தெருவோரங்களில் நடைபாதைகளில் விற்பதைப் பார்க்க முடியும். தள்ளுவண்டிகள் மூலமாகவும் பலர் பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.
- நகரமயமாக்கப்பட்ட தமிழகப் பொருளாதாரத்தில் தெருவோர வியாபாரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எப்போதும் செலுத்திவருகிறது. அரசின் ஆவணங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இதை உறுதிசெய்துள்ளன. இத்தகைய வியாபாரத்தில் ஈடுபடும் தொழிலாளர்களில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
- சிறுபான்மையினர், பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, தெருவோர வியாபாரிகளின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைப்புகளுக்குக் கூடுதலாகவே இருக்கிறது.
செய்ய வேண்டியது என்ன?
- தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம்-தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்-2014இன்படி அதிகாரிகள் செயல்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இந்தச் சட்டம் குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் பயிற்றுவிக்க வேண்டும்.
- தெருவோர வியாபாரிகளை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும். வியாபாரம் நடத்தப்படும் பகுதிகளை வரையறுத்து, வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் விற்பனைக் குழு அமைத்திட வேண்டும்.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒரே ஒரு விற்பனைக் குழு என்பதற்கு மாறாக, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பகுதிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தன்னிச்சையாக அகற்றும் அதிகாரிகள், காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்து, மக்களுக்குக் குறைந்த விலையில் பொருள்களையும் விற்பனை செய்யும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது பொதுச் சமுகத்தின் கடமையும்கூட!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)